`மயாங்க் அகர்வாலை டீம்ல எடுக்கலையா...?’ - டொமஸ்டிக் நாயகனுக்கு குவியும் ஆதரவுSponsored`என்னது... மயாங்க் அகர்வாலை டீம்ல எடுக்கலையா?!’ - இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி இது. விராட் கோலி, தோனி, புவி, பும்ரா என முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட தொடரில், டொமஸ்டிக்கில் கலக்கும் ஓர் இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது நிச்சயம் வருத்தமே. ஆனால், இன்னும் காலம் இருக்கிறது. ரசிகர்களே கவனிக்க ஆரம்பித்துவிட்ட பின் தேர்வுக்குழு அவர்மீது கண் வைக்காமல் இருக்குமா என்ன? எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழுவின் ரேடாரில் மயாங்க் அகர்வால் இருக்கிறார். எந்நேரத்திலும் அவர் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியலாம். சரி, ஒரே சீசனில் இந்தக் கர்நாடகக் கன்னுக்குட்டி இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத காளையானது எப்படி?

சமீபத்தில் முடிந்த விஜய் ஹஸாரே தொடரில் செளராஸ்டிரா அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கர்நாடகா சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் முழுக்க சதம், அரைசதம் என சரவெடியாக ரன் வேட்டை நிகழ்த்தி அணியின் வெற்றிக்குத் தனி ஒருவனாக உதவினார் மயாங்க். செளராஸ்டிராவுக்கு எதிரான ஃபைனலில் கொஞ்சம் நிதானமாக ஆடி சதம் அடித்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும். இருந்தாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 2,000 ரன்களைக் கடந்த வீரர், கன்சிஸ்டன்ஸிக்கு உதாரணம் என எக்கச்சக்கப் பாராட்டு. மயாங்க்கின் இந்த வளர்ச்சி இந்த ஓரே சீசனில் வந்தது அல்ல.

Sponsored


கடந்த 2009-ல் நடந்த அண்டர் -19 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மயாங்க் அடித்த 160 ரன்கள்தான், அடுத்த ஆண்டு நடந்த 2010 அண்டர் -19 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க வைத்தன. அந்தத் தொடரிலும் ஒரு கலக்கல் ஆட்டம். டாப் ஸ்கோரர் பட்டம். `உன்னைத்தான் தேடிட்டிருந்தோம்’ எனக் கூப்பிட்டு இந்தியா - ஏ அணியில் இடம்கொடுத்தார்கள். 

Sponsored


90 ரன்களில் இருக்கும்போதே லாங் ஆஃப் திசையில் அநாயசமாக சிக்ஸர் பறக்கவிடுவது மயாங்க் இயல்பு. டி-20 ஃபார்மட்டுக்கான பக்கா மெட்டீரியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக, 2011 ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அவர் இடம்பெற்றிருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆம், அணியில் மட்டுமே இடம்பெற்றிருந்தார். பிளேயிங் லெவனில் இல்லை. ஆனால், அடுத்த சீசனில் கிடைத்த வாய்ப்பில் மும்பைக்கு எதிராக 30 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். அடுத்த சீசனில் பெங்களூரு அணி அவரைத் தக்கவைத்தபோதும், கெயில் - தில்சன் ஜோடி ஓபனிங்கில் மிரட்டியதால், சீசன் முழுவதும் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், மயாங்க் மனம் தளரவில்லை. ஐ.பி.எல் மட்டுமே களமில்லை, இருக்கவே இருக்கு டொமஸ்டிக் டோர்னமென்ட். உள்ளூர் போட்டிகளில் வெளுத்து வாங்குவது அவர் கைவந்தகலை.

பொதுவாக, ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலித்தால் தேசிய அணியில் அல்லது ரஞ்சி டிராபி போன்ற டீம்களில் இடம் கிடைக்கும். ஆனால், மயங்க் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து, ஐ.பி.எல் கிளப்களின் கதவைத் தட்டினார். ஆம், 2013-2014 சீசனில்  உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக அவர் அடித்த  90 ரன்கள், 2014 ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியில் இடம்பெற்றுத் தந்தது. ஆனாலும், டெல்லி அணியிலும் அதே பிரச்னை. பிளேயிங் லெவனில் இடமில்லை. கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளிலும் தான் யார் என்பதை நிரூபிக்கத் தவறவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் இணைந்து  106 ரன்கள் அடித்தார். இதில் மயாங்க் அடித்தது 48 பந்துகளில் 68 ரன்கள். கடந்த 7 ஐ.பி.எல் சீசனில் டெல்லி, பெங்களூரு அணிகளுக்காக அவர் அடித்த ரன்கள் 818 (53 போட்டி). சராசரி 17.23. மேற்சொன்னபடி தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காததுதான் இவரது அதிரடிக்கு விழுந்த பெரும் தடை!

தனக்கான முழுமையான இடத்தைப் பெற்ற மயாங்க் அகர்வால், மொத்த வித்தையையும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வெறிகொண்டு காட்டினார். உள்ளூர் கிரிக்கெட்டின்  சிறந்த 20/20 பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்தார். தூறலும் சாரலுமாகச் சென்ற மயங்க் அகர்வாலின் காட்டில் மையம் கொண்ட புயலால் 2017 - 2018 ரஞ்சி சீசனில் தொடங்கி, விஜய் ஹசாரே ஃபைனல் வரை ரன் மழை பொழ்ந்துகொண்டே இருக்கிறார்.

2017-2018 ரஞ்சி சீசனில் முதல் போட்டியிலிருந்தே வெளுத்து வாங்கிய மயங்க் அகர்வாலின் ரன் கிராஃப் (23, 90, 133*, 176, 173, 104*, 304 ) தொய்வின்றி எகிறியது. நவம்பர் 1 புனேயில் நடந்த மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் மயாங்க் அடித்த 304 ரன்கள், சென்னையில் சேவாக் அடித்த முச்சதத்தின் ஜெராக்ஸ் போல இருந்தது. 

அவர் அடிக்கும் ஒவ்வொரு ரன்னையும் உன்னிப்பாகப் பார்த்தால், அவரது ஆட்டம் சதங்களை குறிவைத்து ஆடுவது போலத் தெரியவில்லை. முதல் பந்திலிருந்து அடி... அதிரடி...! அதனால்தான் இந்த 26 வயதுக்காரனால், 27 நாள்களில் 1,160 ரன்கள் (சராசரி 105.45) அடித்து மெர்சல் காட்ட முடிந்தது. அதற்காக, வெறுமனே ஹிட்டர் என்றளவில் முத்திரை குத்திவிடவும் முடியாது. டெக்னிக் ரீதியாகவும் பையன் கில்லி. ஃபுல் லென்த் பந்துகளில் டிரைவ், ஷார்ட் பந்துகளில் புல் ஷாட், குட் லென்த் பந்துகளில் லாஃப்ட், சுழற்பந்துகளில் லேட் கட் என வெரைட்டி காட்டும் இந்த இளைஞனைத்தான் கர்நாடகா டாப் ஆர்டரில் மலையாக நம்பியிருக்கிறது. ரஞ்சி டிராபியில் விதர்பாவுக்கு  எதிரான அரையிறுதியில் மயாங்க் விரைவில் அவுட் ஆனதால், கர்நாடகா தோல்வியடைந்ததையும் கவனித்தில் கொள்ள வேண்டும். 

வெற்றியும் தோல்வியும் தன் ஆட்டத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிற மனநிலையுடன் ஆடிய மயாங்க், விஜய் ஹசாரே தொடரிலும் ரன்மழை பொழிந்தார். 8மேட்ச்களில் 3 சதம் உட்பட 723 ரன்கள் குவித்து, முந்தைய சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் 607 ரன்கள் சாதனையை முறியடித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மயாங்க் போல, வேறு யாரும் ரஞ்சி,சையத் முஸ்டாக் அலி, தியோதர், விஜய் ஹஸாரே என எல்லா ஏரியாவிலும் கல்லா காட்டியதில்லை.

சேவாக் போலவே, அவரது அணுகுமுறையும் முதல் பந்திலிருந்து கடைசி ஓவர் வரை ஒரே மாதிரிதான் இருக்கிறது. உதாரணமாக, விஜய் ஹஸாரே  அரையிறுதியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார். தன்னையே பிரதியெடுக்கும் ஒருவனை தன் அருகில் வைத்துக்கொள்ளாமல் இருப்பார்களா என்ன? எஸ், இந்த மிரட்டல் ஆட்டக்காரனை 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அந்த அணியின் பயிற்சியாளர் சேவாக்.

கடந்த 5,6 ஆண்டுகளாக தற்காலிக வாய்ப்பில் தடுமாறி, இன்று நிரந்தர அதிரடி சூரனாக உருவெடுத்துள்ள மயங்க் அகர்வால் 37 டொமஸ்டிக் மேட்ச்களில் 4,886 பந்துகளைச் சந்தித்து 2,917 ரன்கள் அடித்துள்ளார். அதில் கடந்த இரண்டு சீசனில் மட்டுமே 2,114 ரன்கள் அடித்து டொமஸ்டிக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக, தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.Trending Articles

Sponsored