கோப்பை கிடைச்சிருச்சு... வேலை கிடைக்குமா...? தேசிய மகளிர் சாம்பியன்கள் எதிர்பார்ப்பு! #WomensDaySponsoredபுவனேஷ்வர் விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அந்த 20 தமிழ்ப் பெண்களின் மனதிலும் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. பலருக்கும் அதுதான் முதல் விமான பயம். சிலருக்கு விமான நிலையமே புதுசுதான். பறக்கப்போகிறோம் என்ற ஆவல். அந்த ஆவலை மீறிய மகிழ்ச்சியைக் கொடுத்தது அந்தக் கோப்பை. தங்களை விமானத்தில் ஏற்றப் போகிற கோப்பை... தங்களை மொத்த தேசமும் திரும்பிப் பார்க்கக் காரணமாய் இருந்த கோப்பை... நேஷனல் ஃபுட்பால் சாம்பியன் கோப்பை! ஆம், அந்தத் தமிழகப் பெண்கள்தாம் தேசியச் சாம்பியன்கள். சாம்பியன் என்ற நினைப்பே பெரிய போதை. அதிலும், நடப்புச் சாம்பியனை வீழ்த்தி, முதல்முறையாகக் கோப்பை வென்றதென்பது எளிதில் தெளிந்திடாது. #WomensDay

ஆனால், விமானத்தில் பறந்தபோதே மேகங்களுக்கு இடையில் அந்த போதை கலைந்துவிட்டது. ஏதோ ஒரு சிறு கவலை அவர்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டிருந்தது. விமானம் தரையிறங்கிவிட்டது. ஆனால், அவர்களுக்குள் எழுந்திருந்த கேள்வி அப்போதுதான் 'டேக் ஆஃப்' ஆகியிருந்தது. 'இந்த வெற்றி அனுபவம் எப்படி இருக்கிறது?', 'மணிப்பூர் அணியை எப்படி ஜெயிச்சீங்க?', 'உங்க வெற்றிக்கான ரகசியம் என்ன?', 'இந்தியா சர்வதேச கால்பந்து அரங்கில் சாதிக்குமா?'... பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்வியும் அவர்களுக்குக் கடினமாக இல்லை. அனைத்துக்கும் படபடவென பதில் வந்தது. தங்கள் பிள்ளைகளை வரவேற்க பெற்றோர்கள் சிலர் விமான நிலையத்துக்கே வந்திருந்தார்கள். தத்தம் மகள்களைப் பார்த்ததும் அவர்கள் கேட்ட கேள்வி "கோப்பை கிடைச்சிருச்சு... இப்பயாவது வேலை கிடைக்குமா...?" இந்தமுறை அந்த வெற்றி மங்கைகளால் பதில் சொல்ல முடியவில்லை. என்ன சொல்வதென்று தெரியவும் இல்லை. ஏனெனில்... அந்தக் கேள்விக்கான பதில் தமிழகத்தில் கால்பந்தை உதைத்த எந்தப் பெண்ணுக்கும் இதுவரை கிடைக்கவில்லை!

Sponsored


இந்த அணியிலுள்ள பெரும்பாலான பெண்கள் பெற்றோர்களை இழந்தவர்கள். சிலருக்குத் தந்தை இல்லை, சிலருக்குத் தாய் இல்லை, சிலருக்கு இருவருமே இல்லை. சுனாமியால் பாதிக்கப்பட்டதால் 'ஆதரவு இல்லங்க'ளில் வளர்க்கப்பட்டவர்கள் சிலர். உறவினர்களின் ஆதரவுக்கரத்தால் தூக்கிவிடப்பட்டவர்கள் சிலர். மனிதம் ஓங்கியிருந்த ஆசான்களால் வளர்த்துவிடப்பட்டவர்கள் சிலர். இப்படிப் பள்ளிக் காலம் முதல் வேறொருவரின் உதவியினாலும், இலவசக் கல்வியினாலுமே பயின்று வருகிறார்கள். கால்பந்தைத் தொட்டது முதலே அதுதான் வாழ்க்கையென்று ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் அவர்கள் நேசித்த அந்த விளையாட்டுதான் அவர்களுக்கான மேற்கல்விக்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. வேலைதான் தரமுடியவில்லை.

Sponsored


தமிழக அணியில் விளையாடிய 20 பேரில் இந்துமதி, வினிதா, சரண்யா ஆகிய 3 பேர் மட்டுமே அரசு வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த நிலைமைக்கு வருவதற்குக் கூட அவர்களது சிறுவயது பயிற்சியாளர் மாரியப்பன்தான் பெரிய அளவில் உதவி செய்துள்ளார். கடலூர், சிதம்பரம் பகுதிகளில் பிறந்த இவர்களது குடும்பம் சுனாமியால் பாதிக்கப்பட்டவை. "எங்க வீட்ல ரொம்ப கஷ்டம். 3 குழந்தைங்க. நான் நாலாவது படிக்கும்போது, என்னையும் அக்காவையும் அரசு சேவை இல்லத்துல கொண்டுபோய் விட்டுட்டாங்க. அங்க மாரியப்பன் சார் தான் எங்களுக்கு எல்லாமே. படிக்க வச்சதுல இருந்து வேலையில் சேருவது வரைக்கும் எல்லாத்துக்கும் உதவினாரு" என்று கண்கலங்கும் கோல்கீப்பர் வினிதா, இந்திய அணிக்காக விளையாடியவர். காவல்துறையில் எஸ்.ஐ பதவியில் இருக்கும் அவர்கள் மூவரும் கூட தேர்வு எழுதித்தான் அந்த வேலைக்குத் தேர்வானார்கள். இன்ஜினீயரின் கவுன்சலிங் போல், அந்தத் தேர்வின்போது போனஸ் மதிப்பெண்ணாக மட்டும்தான் இவர்களுக்குக் கால்பந்து பயன்பட்டது. 

மற்ற 17 பேருக்கும் சரியான எதிர்காலம் இல்லை. சிலருக்குக் கல்லூரிக் காலம் முடிவுக்கு வரப் போகிறது. சிலர் ஏற்கெனவே படிப்பை முடித்துவிட்டனர். அரசு இதுவரை எந்த வேலையும் ஏற்படுத்தித் தரவில்லை. சரி, தனியார் நிறுவன வேலை? "ஏன் நீங்க அந்த செமஸ்டர் அட்டண்ட் பண்ணல?", "பெர்சென்டேஜ் ரொம்ப கம்மியா இருக்கே" என்று கேம்பஸ் இன்டர்வியூவில் இன்ஜினீயர்களை டீல் செய்வது போலவே இவர்களை டீல் செய்துள்ளன கார்ப்பொரேட் கம்பெனிகள். 

"சின்ன வயசுல இருந்து ஃபுட்பால்தான் வாழ்க்கைனு இருந்துட்டோம். நேஷனல் லெவல் மேட்ச்லாம் செமஸ்டர் நேரத்துல வரும். அப்போ மேட்ச்தான் முக்கியம்னு போய்டுவோம். மறுபடி வந்துதான் எக்ஸாம் எழுதுவோம். பல நேரங்கள்ல பரீட்சைக்கு முந்துன நாள்தான் ஹால் டிக்கெட்டே வாங்குவோம். இப்படி இருக்கும்போது எப்படி எங்களால அதிக மார்க் வாங்க முடியும். தனியார் நிறுவனங்கள்ல எங்க ஆட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கறதில்ல. பெர்சன்டேஜ் கம்மினு சில இடங்கள்ல நிராகரிக்கிறாங்க. சில கம்பெனிகள்ல ஃபோன் பண்றோம்னு சொல்வாங்க. ஆனா, ஒரு ஃபோன் கூட இதுவரை வந்ததில்ல" என்று தன் வேதனையைச் சொல்கிறார் எம்.காம் பட்டதாரியான கீதாஞ்சலி.

கால்பந்தின் மீதான காதல் சாதாரண ஒன்றல்ல. ஒருமுறை அந்த 'பூட்'களை அணிந்துவிட்டால் அதை மறப்பது சிரமம். உடலின் ஒரு அங்கமாக ஒட்டிக்கொள்ளும். கற்களைப் பார்த்தால் மட்டுமல்ல, ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீரைக் கூட உதைக்கத் தோன்றும். அதுவும், 10 வயதில் கால்பந்தை உதைக்கத் தொடங்கியவர்களால் எப்படி முடியும்? அதுதான் தங்கள் வாழ்க்கை என்று வகுப்பு, பரீட்சை என எதையும் பாராமல் போட்டிகளுக்குச் சென்றார்கள். இதுவரை அந்தக் கால்பந்தால்தான் இவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால், கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட ஒருசில தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு உதவுகின்றன. எஸ்டென் ஹெல்த்கேர், ஸ்ரீராம் டிஸ்ட்ரிப்யூஷன் என தனியார் கம்பெனிகளில் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள் இருவர். கல்லூரி, செலவுகளைச் சமாளிக்க பார்ட் டைம் வேலை,  கால்பந்து பயிற்சி என ஒரே நாளில் மூன்று தளங்களில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார் இன்னொருவர். இப்படி தங்களின் வாழ்க்கையை நகர்த்த இவர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமா?

"எனக்கு அப்பா இல்லை. சித்தப்பா ஆரம்பத்துல என் படிப்புக்குக் கொஞ்சம் உதவுனாங்க. 13 வயசுல இருந்து கால்பந்து விளையாடத் தொடங்கினேன். பத்தாவது படிக்கும்போது நேஷனல்ஸ் விளையாடிட்டேன். அப்பறம் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல இருந்ததால படிப்புச் செலவுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. காலேஜ் வரை அப்படியே படிச்சிட்டேன். ஆனா, இனிமேல் என்ன பண்றதுனு யோசிச்சாதான் பயமா இருக்கு. இதுக்கு மேலயும் குடும்பத்துக்கு பாரமா இருக்க முடியாது. நமக்காக கஷ்டப்பட்டவங்களுக்கு நாம உதவுணும். ஆனா எப்படி?" என்று அணியின் கேப்டன் நந்தினி கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடமும் பதில் இல்லை. 

பிப்ரவரி 14-ம் தேது நடந்த ஃபைனலில் தமிழக அணியிடம் தோற்ற மணிப்பூர் மிகவும் பலம் வாய்ந்த அணி. 23 தொடர்களில், 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. 4 முறை இரண்டாம் இடம். இந்திய தேசிய அணியில் ஆடும் பெரும்பாலனவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்களே. இந்தியக் கேப்டன் பாலா தேவி உள்பட. அந்த அளவுக்கு மகளிர் கால்பந்தில் அந்தச் சிறு மாநிலம் ஆதிக்கம் செலுத்தக் காரணம் என்ன? மணிப்பூரைச் சேந்த வீராங்கனைகள் இந்திய தேசிய அணிக்கான தேர்வு முகாமுக்குச் சென்றாலே அவர்களுக்கு 2 லட்சம் வரையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்நேரம் அவர்கள் தேசியச் சாம்பியன் ஆகியிருந்தால், ஒவ்வொரு வீராங்கனைக்கும் பரிசுத் தொகையும், அரசு வேலையும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே...?

இதுவரை இவர்களுக்குத் தமிழக அரசு சார்பாகவோ, வேறு யாரின் சார்பாகவோ ஒரு ரூபாய் கூட பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லை. இந்தப் போட்டியில் வென்றதற்கு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பும் பரிசுத்தொகை தரவில்லை. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர், சென்னையின் எஃப்.சி அணி நிர்வாகம் இவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். ஆனால், பரிசுத்தொகை என்பதைப் பற்றி இன்னும் எந்தப் பேச்சும் எழவில்லை. ஆனால், அந்தப் பெண்கள் கேட்பது பரிசுத்தொகை அல்ல. அவர்களுக்காக, இதுநாள் வரை தங்களுக்கு உதவி செய்தவர்களுக்காக, ஏழ்மையில் வாடும் தங்களின் குடும்பத்துக்காக... ஒரேயொரு வேலை மட்டும்தான்!

"அரசு வேலைதான் நாங்க வேணும்னு கேக்கல. எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை. எங்க எதிர்காலம் நல்லா இருக்குற மாதிரி ஒரு நல்ல வேலையா இருந்தாப் போதும்" என்கிறார் இறுதிப் போட்டியில் 'வின்னிங் கோல்' அடித்த இந்திராணி. இந்த விளையாட்டு தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால், யாரும் அதை விடுவதாய் இல்லை. "வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாதான் எங்களுக்கு அடுத்து வர்றவங்களுக்கு ஃபுட்பால் விளையாடத் தோணும். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் இல்லைனா யாரும் இந்த விளையாட்டை விளையாட முன்வர மாட்டாங்க" என்று தமிழகத்தின் கால்பந்து எதிர்காலத்தைப் பற்றியும் இவர்கள் சிந்திக்கிறார்கள். 

வீராங்கனைகளின் எதிர்கால பிரச்னைகளை உணர்ந்த தமிழ்நாடு கால்பந்து கூட்டமைப்பும் மாநில விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இதுபற்றிப் பேசியுள்ளது. நல்ல முடிவு வரும் என்று இந்த வீராங்கனைகள் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருப்புக்கு நல்ல முடிவு கிடைக்குமா?Trending Articles

Sponsored