தடை விதிக்கும் அளவுக்கு ரபாடா அப்படி என்ன செய்துவிட்டார்? #SAvsAUSSponsoredககிசோ ரபாடா... போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் -1 பெளலர்; டெஸ்ட் அரங்கில் நான்கு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்கா பெளலர்; ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டுபவர். இருந்தும் என்ன பயன்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

ஸ்டீவ் ஸ்மித் - ஆகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் விக்கெட்டை எடுப்பது எதிரணி பெளலர்களுக்கு சவால். அதனால்தான், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்கச்செய்த பின், கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் ரபாடா. ஸ்டீவ் ஸ்மித் முகத்துக்கு நேராக yes yes yes எனக் கத்தியதோடு நின்றிருக்கலாம். அல்லது ஸ்மித்தைக் கடந்து செல்லும்போது அவருக்குப் பின்புறமாக தோள்பட்டையோடு உரசாமல் இருந்திருக்கலாம். ரபாடா இங்குதான் உணர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வழக்கமாக ஆஸ்திரேலியலர்கள்தான் `எப்படா’ என `ஸ்லெட்ஜிங்’ செய்யக் காத்திருப்பர். ரபாடா தன்னை  உரசிவிட்டுச் சென்றதை ஸ்டீவ் ஸ்மித்தும் உணர்ந்தார். இருந்தாலும், ரபாடா வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்க மாட்டார். இயல்பாக நடந்திருக்கும் என ஸ்மித் வம்பை வளர்க்கவில்லை. அதைவிட தன் விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்வதே அப்போது அவருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. ரிவ்யூ கேட்பதில்தான் ஸ்மித் குறியாக இருந்தார். 

Sponsored


ஸ்மித் உன்னிப்பாகக் கவனிக்கவில்லையே தவிர, மேட்ச் ரெஃப்ரி ஜெஃப் க்ரோவ் இதைக் கவனிக்காமல் இல்லை. ``ரபாடா, ஸ்மித் இடையே உரசல் ஏற்பட்டதைக் கவனித்தேன். இந்த உரசல் தேவையில்லாதது. வேண்டுமென்றே செய்ததுபோல இருந்தது. இந்த உரசல் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியம் இருந்தது. எனவே, இது இயல்பாக நிகழ்ந்தது என்ற வாதத்தை ஆதரிப்பதற்கான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளையும் அழைத்து நடத்திய கூட்டத்தில், பரஸ்பரம் எதிரணியினரை மதிப்பது குறித்தே அதிகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ரபாடா போன்ற திறமையான இளம் வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கவில்லை. இருந்தாலும், அவர் பலமுறை ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்’’ என்றார் க்ரோவ். 

Sponsored


``இதெல்லாம்தான் டெஸ்ட் கிரிக்கெட். 15 ஓவர்கள் கடுமையாகப் பந்துவீசி, கடைசியாக ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றும்போது ஒரு பெளலர் தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத்தான் செய்வார். இதெல்லாம் கூடாது என்றால், நீங்கள் ஒரு பெளலிங் மெஷினை வைத்து ஒரு ரோபோவைத்தான் பேட்டிங் பிடிக்கச் சொல்ல வேண்டும்’’ என்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி. கேப்டன் என்ற முறையில் அணியின் வீரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது டு பிளெஸ்ஸி கடமை. ஆனால், ரபாடாவுக்குத் தடை என்ற செய்தி வெளியானதுமே, `ஆஸ்திரேலியர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? தடை என்பதெல்லாம் ஓவர். இது திட்டமிட்ட சதி’ என அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் விவாதம் நடந்தது. 

ரன் அவுட் செய்துவிட்டுக் கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டுச் சென்றபோது, நாதன் லியான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் கோரமுகம் வெளிப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. அந்த அநாகரிகச் செயலுடன் ஒப்பிடும்போது ரபாடா உணர்ச்சிவசப்பட்டது தவறில்லை. ஆனால், ரபாடா அடிக்கடி இப்படி உணர்ச்சிவசப்படுவதுதான் இப்போது பிரச்னை. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக, பேட்ஸ்மேன்களை ரபாடா முறைதவறி வழியனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபின், கெட்ட வார்த்தையில் திட்டினார் ரபாடா. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவன் விக்கெட்டை வீழ்த்தியபின், டாடா காட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த பின் அவரிடம் உரசியது மட்டுமல்லாது, இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியபின்பும் ஓவராக ஆர்ப்பரித்தார். ஆக, ஒவ்வொரு முறை விதியை மீறும்போதும், எச்சரிக்கை மட்டுமின்றி  ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கான புள்ளிகளையும் சேர்த்தே பெற்றுவந்தார். எல்லாம் சேர்த்து மொத்தமாக வந்தது வினை. 

ஐ.சி.சி-யின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, களத்தில் அநாகரிகமாக நடக்கும் வீரர்களுக்கு Level 1, Level 2, Level 3 பிரிவுகளின் கீழ் demerit புள்ளிகள் வழங்கப்படும். அதாவது எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டால் Level 3 பிரிவின் மூன்று புள்ளிகள், அநாகரிகமான சமிக்ஞை செய்தால் Level 1 பிரிவின் கீழ் ஒரு புள்ளி, அபராதம் விதிக்கப்படும். மொத்தமாக நான்கு புள்ளிகளைப் பெற்ற வீரருக்கு, ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளிலோ பங்கேற்கத் தடை விதிக்கப்படும். (அந்த அணி அடுத்து உடனடியாக எந்தத் தொடரில் பங்கேற்கிறதோ அதைப் பொறுத்து தடை அமலுக்கு வரும்.) எட்டுப் புள்ளிகள் எனில்  இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படும். கடந்த ஒன்பது மாதங்களில் ரபாடா எட்டு demerit புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். ஷிகர் தவனை பெவிலியன் அனுப்பியபோதே ரபாடாவின் புள்ளிகள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எந்த வம்பு தும்புக்கும் போகக் கூடாது. மீறி உணர்ச்சிவசப்பட்டால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஏனெனில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான்கு புள்ளிகளைப் பெற்றதும், ஒரு டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார் ரபாடா. இவ்வளவு நடந்தும் அவர் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை. 

ரபாடாவின் ஆக்ரோஷம் மட்டுமல்ல, இந்த டெஸ்ட் தொடரில் பல களேபரங்கள் நடந்தன. டர்பன் டெஸ்ட் போட்டியில், மார்க்ரமை ஏகத்துக்கும் ஸ்லெட்ஜிங் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். விக்கெட் கிடைக்காத ஒவ்வொரு பந்துக்கும் மிச்செல் ஸ்டார்க் கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தார். போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில், டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும் வழியில் டி காக் - வார்னர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இதற்காக வார்னருக்கு 3 demerit புள்ளிகள், டி காக்குக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ரபாடா பந்தில் விக்கெட்டை இழந்தபின் அவரைத் திட்டியதற்காக மிச்செல் மார்ஷுக்கு அபாரதமும் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டதற்காக நாதன் லியானுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆக, இரு தரப்பிலும் போட்டிபோட்டுக்கொண்டு demerit புள்ளிகளைப் பெற்றுவருகின்றனர். விக்கெட் வீழ்த்துவதில் மட்டுமல்லாது அந்தப் புள்ளிகளைப் பெறுவதிலும் ரபாடா முதலிடத்தில் இருப்பதுதான் இப்போதைய சிக்கல்.

ரபாடா இல்லாத தென்னாப்பிரிக்காவை கேப் டவுன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா எளிதில் சமாளிக்கும். ``இனிமேல் என் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அது என் அணியைப் பாதிக்கிறது. என்னையும் பாதிக்கிறது. அதேநேரத்தில் என் உணர்வுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களிடம் இருந்து விலகிச்சென்று என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன்’’என்றார் ரபாடா. அதுதான் சரி. ஏனெனில், ஒரு நல்ல பெளலர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அழகல்ல!Trending Articles

Sponsored