`` 'என்னை கல்யாணம் பண்ணிக்கங்க’னு கோலிகிட்ட கேட்டேன்..!’’ - டேனி வயட்டுக்கு கிடைத்த பதில்Sponsoredதிருமணமான பிறகும் விராட் கோலியைக் காதலிப்பதாகச் சொல்பவர்கள் ஏராளம். எனில், அவர் சிங்கிளாக இருந்தபோது எவ்வளவு போட்டியிருந்திருக்கும். போட்டியில் தனிமைப்படுத்தித் தெரிய ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். அது ஏப்ரல் 4 - 2014, வங்கதேசத்தில் நடந்துவந்த டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 44 பந்துகளில் 72 ரன்களை விளாசினார் விராட் கோலி. அனைவரும் கோலியைப் பாராட்டிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், `கோலி... என்னை திருமணம் செய்துகொள்' (Kohli marry me) என்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை, டேனி வயட். ஹெச்.ராஜாவின் கீச்சு அளவுக்கு இல்லாவிடினும், அன்று ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது அந்தக் கீச்சு. இந்திய ஊடகங்கள் இதை செய்தியாக்கின. இப்படி விராட் கோலியின் ரசிகர்களிடத்தில் டேனி பிரபலமாகிவிட்டார்

அவர் இப்போது மீண்டும் பிரபலமாகியுள்ளார். கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 56 பந்துகளில் சதம் விளாசினார். டி-20 போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை அடித்த முதல் சதம் இது. ஆனால், இதனால் எல்லாம் இவர் பிரபலமாகவில்லை. இந்தியப் பெண்கள் அணிக்கு எதிராக விளையாட வந்துள்ள அவர், ``நான் இந்தத் தொடருக்கு ரகசிய ஆயுதம் ஒன்றை வைத்துள்ளேன். நான் சதம் அடித்த பேட் ஒரு மாதம் முன்னர் உடைந்துவிட்டதால், இனி விராட் கோலி எனக்கு பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்தப்போகிறேன்" என்றார். 

Sponsored


மேலும் பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்த அவர், ``நான் ட்வீட் செய்த பிறகு எனக்கு ஒரு மணி நேரத்தில் 1,000 மெசேஜ்கள் வந்தன. இந்திய ஊடகங்களிலிருந்து என் தந்தைக்கு நிறைய மெயில்கள் வந்தன. ஒருமுறை விராட் கோலியைச் சந்தித்தேன், அப்போது `இதுபோன்ற செயல்களை விளையாட்டாகச் செய்ய வேண்டாம். மற்றவர்கள் அப்படி எடுத்துக்கொள்ள மாட்டார்கள்' என்றார். நான் என் செயலுக்கு மன்னிப்பு கேட்டேன். அந்தச் சமயத்தில் எனக்கு பரிசாக அவருடைய பேட் ஒன்றைக் கொடுத்தார். அதையே இனிமேல் பயன்படுத்தப்போகிறேன்" என்றார். 

Sponsored


டேனி வயட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதம், சாதாரணமானது அல்ல. ஏனெனில், அந்தப் போட்டிக்கு முன்னரே அந்தத் தொடரை இங்கிலாந்து தோற்றிருந்தது. அந்தப் போட்டியிலும் 30 ரன்னுக்குள் மூன்று விக்கெட்களை இழந்து பரிதவித்துக்கொண்டிருந்தது.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேனி, அந்த நேரத்திலும் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் என அதிரடியாக ஆடி, 56 பந்துகளில் இங்கிலாந்து பெண்கள் அணிக்கான முதல் சதத்தைப் பதிவுசெய்தார். ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருக்க, கேப்டன் கிணையிட் மட்டும் இவரோடு சற்று நேரம் தாக்குப்பிடித்தார். அங்கிருந்து இங்கிலாந்து அணியை 171 ரன்களுக்கு வெற்றியை நோக்கி அழைத்துச்சென்று அவுட்டானார். 

அந்தப் போட்டியைப் பற்றிச் சொல்லும்போது, ``அந்த ஆண்டு எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் சும்மா போய்விட்டு வருவோம் என்றுதான் சென்றேன். ஆனால், 30 ரன்களைக் கடந்த பிறகு எப்படி நடந்தது என்றே தெரியாமல் நிறைய பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்துவிட்டேன். எல்லிஸ் பெர்ரி ஓவர் வீச வரும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. `தயவுசெய்து நேராகப் போடாதே' என மனதுக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் அதற்கேற்றார்போல அவுட் சைடில் பந்துவீச, நான் எப்படியோ அவற்றை அடித்துவிட்டேன்.  பவுண்டரியை நோக்கி சென்றுவிட்டன" என்கிறார். 

டேனி வயட்டின் முந்தைய ஆட்டங்களைப் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் எப்படியோ இங்கிலாந்து ஜெர்ஸியை அணிந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்தத் தொடருக்கு முன்னர் 70 போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் சராசரி, வெறும் 12 மட்டுமே. இந்த நவம்பரில்தான் புதிதாக ஓர் உத்வேகம் கிடைத்துள்ளது. அதற்கு முன்னர் ஏழாவது அல்லது லோயர் ஆர்டரில் இறங்கி வந்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 50 ரன் அடித்த பிறகு, இரண்டாவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறக்கிவிடப்பட்டார். ஆனால், அடித்தது வெறும் 19 ரன். கடைசிப் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியவர் சதத்தை அடித்தார். 

இந்த மாதம் இந்தியாவில் நடைபெறும் முத்தரப்புப் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடப்போகும் அவர், ``நான் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதையே விரும்புகிறேன். இதுவரை நடந்ததைச் சரிசெய்யும் வகையில் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். இன்னுமொரு சதம் அடிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்" என்றார்.

விராட் கோலி அளித்த பேட் இந்தியாவுக்கு எதிராக என்ன செய்யப்போகிறது என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Trending Articles

Sponsored