``சீனியர்ஸ்லாம் இது ஸ்டேட் ரெக்கார்டுடா தம்பின்னு பாராட்டுனாங்க...!’’ - தடகளத்தில் தங்கம் வென்ற கதிரவன்Sponsoredசத்தமின்றி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ ஓட்டத்தில் சாதனை படைத்திருக்கிறார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த தடகள வீரர் கதிரவன் குணசேகரன். கதிரவனின் இந்த வெற்றியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் ட்விட்டரில் கொண்டாட, `அட நம்ம காலேஜ்...’ என உற்சாகமாகி கதிரவனைத் தேடிப் பிடித்தோம். அவருடன் பேசியதிலிருந்து...

   

கதிரவன் யார், குடும்பம், ஊர்...?

Sponsored


``காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை சொந்த ஊர். அப்பா பெயர் குணசேகரன். மும்பையில் பிரைவேட் கார் டிரைவராக இருக்கிறார். அம்மா மணிமேகலை வீட்டை கவனித்து வருகிறார். ஒரு அண்ணன், ஒரு தம்பி கூடப் பிறந்தவர்கள். எங்க அண்ணனும் ஒரு தடகள வீரர். 

Sponsored


அட...இன்ட்ரஸ்டிங்...

``என் அண்ணனைப் பார்த்துதான் தடகளத்துக்கு வந்தேன். அவனும் மாநில அளவில் பதக்கங்கள் வாங்கியிருக்கான். அதனால், ஆறாவதுல இருந்தே அத்லெட் ஆவதற்கான முயற்சிகளை ஆரம்பிச்சேன். ஒன்பதாவது படிக்கும் போது மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் மாநில அளவிலான போட்டிகளில் மூன்றாவது இடம் கிடைச்சது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான போட்டியில் 200 மீட்டர்ல வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். 11-ம் வகுப்பு படிக்கும்போது 100 மீட்டர்ல வெள்ளிப் பதக்கமும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது, அதே 100 மீட்டர்ல தங்கப்பதக்கமும் வாங்கினேன். இந்தமுறை 10.7 விநாடிகளில் ஓடி ரொம்ப நாளா இருந்த அந்தப் பழைய ரெக்கார்டை பிரேக் பண்ணி புது ரெக்கார்டு பண்ணினேன். அதுதான் நான் வச்ச முதல் ரெக்கார்டு. அதற்கப்புறம் ஒரு வருஷத்துக்கு அந்த ரெக்கார்டு அப்படியே இருந்துச்சு. இப்போ, அதை வேற பசங்க முறியடிச்சிட்டாங்க.’’

தேசிய அளவில் முதல் பதக்கம்?

``நான் ஜுனியர்ல இருந்து ஓடிட்டு வர்றேன். அண்டர் -14, அண்டர் -17,  இப்போ அண்டர் -20 கேட்டகிரி. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது, கேரளாவில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தொடர் ஓட்டத்துல தமிழ்நாடு சார்பாக கலந்துக்கிட்டு மூன்றாவது இடம் வந்தோம். வெண்கலம் ஜெயிச்சோம்.’’

பயிற்சி, கோச், கல்லூரி...?

``ஒரு அத்லெட்டா நான் வெளியே தெரிய காரணம் என் பயிற்சியாளர்கள். ஸ்கூல்ல எனக்கு நாலு கோச் இருந்தாங்க. எனக்கு ரொம்ப உதவி செஞ்சது பிரபாகரன் கோச்தான். அவர்தான் என்னை செயின்ட் ஜோசப் காலேஜ்ல சேரச் சொன்னாரு. காலேஜ் வந்த புதுசுல சாப்பாடுல இருந்து எதுவுமே செட் ஆகலை. எல்லாமே புதுசா இருந்துச்சு. ரெண்டு மாசத்துக்கு அப்புறம் கூட விளையாடதோணவே இல்லை. அதற்கப்புறம் இப்போ இருக்கிற என் கோச் ஃபிரான்சிஸ் சகாயராஜ்தான் என்னைப் பழையபடி மாத்துனாரு. நிறைய பிராக்டிஸ் எடுத்தேன். போன வருஷம் தேசிய அளவில் கோவையில் நடந்த ரிலேவில் நான்காவது இடம் வந்தேன். அதற்கப்புறம் நிறைய காலேஜ், யுனிவர்சிட்டி மேட்ச்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். மே மாதம் வீட்டுக்கே போகலை. ஹாஸ்டல்லயே தங்கி நிறைய பிராக்டிஸ் எடுத்துக்கிட்டேன். வெளியே கடையிலதான் சாப்பிடணும். அதனால் பத்து நாள் இங்கே இருப்பேன். பத்து நாள் வீட்டுக்குப் போயிடுவேன்."

அந்த ரெக்கார்டு பிரேக் எப்போ?

``ஜூனியர்களுக்கான மாநிலத் தடகளப் போட்டியில் 200 மீட்டர்ல மூணாவது வந்தேன். ரிலேல திருச்சி டீம் ஃபர்ஸ்ட் வந்தது மட்டுமல்லாம, ரெக்கார்டு வச்சது. இந்த மீட் என்னைக் கவனிக்க வெச்சது. எனக்கு ஒரு சின்னக் காயம்னா கூட என் கோச் என்னை ஓட விட மாட்டாரு. அந்த மேட்ச் முடிஞ்சதும் என் கால் வீங்கிடுச்சு. ரெண்டு மாசம் ரெஸ்ட். எந்தப் போட்டியிலையும் கலந்துக்கலை. ஜனவரியில் யுனிவர்சிட்டி மீட்டுக்குப் போனேன். 200 மீட்டர்ல எங்க காலேஜ் முன்னாள் மாணவர் வச்சிருந்த ரெக்கார்டை பிரேக் பண்ணேன். 20.3 விநாடிகள்ல ஃபர்ஸ்ட் வந்து புது ரெக்கார்டு வெச்சனே்.’’

``இப்போ கடைசியா தஞ்சாவூர்ல நடந்த யுனிவர்சிட்டி மீட் ஃபைனல்ஸ்ல எட்டுப் பேரு ஓடினோம். முதல் இருபது மீட்டர் நான் பொசிஷன்லயே இல்லை. மத்தவங்க எல்லாரும் பொசிஷன்ல இருந்தாங்க. அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம். 10.53 விநாடிகள்ல 100 மீட்டரை ஜெயிச்சேன். சீனியர்ஸ்லாம் `ஸ்டேட் லெவல்ல இது ரெக்கார்டுடா தம்பி’ன்னு வாழ்த்துனாங்க. தங்கப்பதக்கம் கொடுத்தாங்க. கடைசியாக நடந்த முதல்வர் கோப்பையிலும் முதலிடம் வந்தது எனக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கு" என்கிறார் கதிரவன். 

வெற்றியைப் போலவே வறுமையும் இவரைப் பற்றி கொண்டது. ``வாடகை வீட்டுலதான் தங்கியிருந்தோம். அண்ணன், தம்பி எல்லாருமே படிக்கிறோம். அப்பா மும்பையில கஷ்டப்பட்டு அனுப்புற காசெல்லாம் வாடகைக்கும், வீட்டுச் செலவுக்குமே சரியா போயிடும். நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். காலேஜ் ஹாஸ்டல்ல போடுறதை சாப்பிட்டெல்லாம் ஓட முடியாது. என்னால நேரத்துக்குச் சாப்பிட முடியாது. பசங்க எல்லாரும் சாப்பிடுவாங்க. என்னால அதைப் பார்க்கத்தான் முடியும். அந்த கஷ்டத்திலயும் கடன்வாங்கியாவது மாசாமாசம் என் செலவுக்குப் பணம் அனுப்பிடுவாங்க எங்க அம்மா. ஸ்கூல்ல இருந்தே என் செலவுக்காக, பிராக்டீஸ் முடிஞ்சதுக்கப்புறம் கேட்டரிங் போவேன். நைட்டு சாப்பாடு பரிமாறிட்டு அந்த மண்டபத்திலேயே தூங்கிட்டு, காலையிலயும் பரிமாறிட்டு வருவேன். ஸ்கூல் டைம்ல இருந்து போன வருஷம் வரைக்கும் சப்ளைக்குப் போயிருக்கேன்."

ஜீ.வி.யைச் சந்தித்தது எப்படி?

``சரியான ஸ்பைக்ஸ் கூட  இல்லாமல்தான் இருந்தேன். ஸ்பான்ஸர் கேட்கலாம்ன்னு நிறைய பேரைச் சந்திச்சோம். அப்படித்தான் பரத் அண்ணன் மூலமா நடிகர் ஜீ.வி.பிரகாஷ் அண்ணனோட ஸ்பான்ஸர் கிடைச்சது. ஜீ. வி அண்ணனை அவங்க வீட்டுலயே சந்திச்சேன். `சரியான ஸ்பான்ஸர் கிடைச்சா, பெரிய ஆளா வருவேன்’னு அவர்கிட்ட சொன்னேன். இன்னைக்கு வரைக்கும் ஜீ.வி.பிரகாஷ் அண்ணன் நிறைய உதவிகள் செஞ்சுட்டு வர்றார். காலேஜ்லயும் சலுகைகள் கிடைக்குது. அப்டியே போயிட்டு இருக்குது!"

அடுத்த இலக்கு?

``ரயில்வே, ஆர்மி ஏதாவது ஒண்ணுல சேர்ந்துடுன்னு நிறைய பேர் சொல்றாங்க. இன்னும் பெருசா சாதனை எதுவும் பண்ணல. ரெக்கார்டு பண்ணிட்டு வேலையில சேரலாம். வேலை எங்க போயிடப் போகுதுன்னு இருக்கேன். தொடர்ந்து நேஷனல், இன்டர்நேஷனல் லெவல்ல மெடல் வின் பண்ணனும். அதுக்கப்புறம் இந்தியா சார்பில் ஒலிம்பிக்ல பதக்கம் ஜெயிக்கணும். இதுதான் என் அல்டிமேட் இலக்கு.

கதிரவனைப்  பற்றி ஜீ.வி பிரகாஷ்குமாரிடம் விசாரித்தோம். ``கதிரவன் மாதிரி திறமையான விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் வெளியே வரணும். அவங்க நிறைய சாதிக்கணும். சில சமூக ஆர்வலர்கள் என்னோடு தொடர்பில் இருக்காங்க. அவங்கதான் கதிரவனை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க. கதிரவன் இன்னும் நல்லா வரணும். அவர் மட்டுமில்லை, நம்மூரில் இருந்து வரும் அனைத்து விளையாட்டு வீரர்களும் சாதனை படைக்க வாழ்த்துகள்" என்றார். 

இந்தச் சமூகத்தில் இன்னும் ஏராளமான மாணவர்கள் திறமையுடனும் கனவுகளுடனும், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். கதிரவனுக்கு ஒரு ஜீ.வி கிடைத்தது போல் அவர்களுக்கும் ஒரு ஸ்பான்ஸர் கிடைத்தால் ஒலிம்பிக்கில் இன்னும் பல பதக்கங்கள் குவிக்கலாம்.Trending Articles

Sponsored