ஷார்ட், ஸ்டோக்ஸ், சாம்ஸன் - மிரட்டும் லைன் அப்: சாதிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்? #IPL2018



எந்தவொரு ஐ.பி.எல் அணியின் மேனேஜ்மென்ட்டும் தனது கேப்டன்/ கோச் ஓர் இந்தியராக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், தன் அணியில் சீனியர் இந்திய வீரர்கள் இல்லாதபட்சத்தில் அவர்கள் கேப்டனாக நியமிப்பது பெரும்பாலும் ஆஸ்திரேலிய வீரராகவே இருப்பார். இதற்கு மிகச்சரியான உதாரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆடிய 8 சீசன்களில் 6 சீசன்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்தான் கேப்டன். ஏழாவது சீசன் ஜஸ்ட் மிஸ். பால் டாம்பெரிங் சர்ச்சையில் சிக்கினாலும் ஆஸ்திரேலிய பிராண்டின் மவுசு இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. அதிரடி பேட்ஸ்மேன் ஷார்ட், சீனியர் பவுலர் லாலின், மென்டராக வார்னே என ராஜஸ்தான் அணியில் இருக்கும் வீரர்களே இதற்கு சாட்சி.  

Sponsored


ராஜஸ்தானின் ட்ராக்ரெக்கார்ட்:

Sponsored


2008-ம் ஆண்டு ஐ.பி.எல் முதல் சீசன் தொடங்கும்போது டெக்கான் சார்ஜெர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகளே அரையிறுதி  செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ``But I had other ideas" என்று டோனி ஒரு விளம்பரத்தில் கூறுவதைப்போல் ஷேன் வார்னே தன் இளம் இந்திய வீரர்களை வைத்து சாதனை படைத்தார். யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, முனாஃப் படேல், சித்தார்த் த்ரிவேதி போன்ற முன் அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து எதிரணியைப் பதம் பார்த்தார். கூடவே, வாட்ஸன், கிரீம் ஸ்மித், தன்வீர் போன்ற திறமைமிக்க வெளிநாட்டு வீரர்களின் அனுபவம் முக்கியமான தருணங்களில் ராஜஸ்தான் அணிக்குக் கை கொடுத்தது. ஃபைனலில் சென்னையை மிரட்டி கோப்பையைக் கையில் வாங்கினார் வார்னே. ஆனால், முதல் சீசனில் படைத்த சாதனையைப் பின் தொடர்ந்த சீசன்களில் தக்க வைத்துக்கொள்ள ராஜஸ்தானால் முடியவில்லை. வார்னேவுக்குப் பின் டிராவிட், அதன்பின் வாட்சன் எனத் திறமையான கேப்டன்கள் இருந்தாலும் தோல்விகளிலிருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே சென்னை அணியைப் போலவே இரண்டு ஆண்டுகள் தடைக்கும் உள்ளானது.  

Sponsored


2018 தரும் நம்பிக்கை:

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் களமிறங்கக் காத்திருக்கும் ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ஸ்மித் நீக்கம் சற்றே பின்னடைவாக அமைந்தாலும், ஸ்மித் டெஸ்ட் போட்டி அளவுக்கு டி20 போட்டிகளில் ஜொலிக்கவில்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அதுவும் ஐ.பி.எல் ஆடிய ஐந்து ஆண்டுகளில் கடந்த சீசனில் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் எடுத்தார். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த தொடரில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற ஆட்டங்களில் தனக்கென்று ஒரு தனி கிளாஸ் உள்ளதை நிரூபித்த கிளாஸன்தான், ஸ்மித்திற்கு பதில் களமிறங்கவுள்ளார் என்பது அணிக்குக் கூடுதல் பலம். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக உருவாகிக்கொண்டிருக்கும் ஆர்ச்சர், ஆஸ்திரேலியா அணியின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஷார்ட், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் லாங்ளின் என ஓவர்சீஸ் வீரர்களின் பட்டியல் மிரட்டலாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கூலாக கேப்டன்ஷிப்பை ஹேண்டில் செய்யும் ரஹானே, இளரத்தங்கள் சாம்சன், த்ரிபாதி, உனட்கட், தவால் குல்கர்னி, ஸ்ரேயாஸ் கோபால், அங்கிட் சர்மா ஆகியோரும் அணிவகுப்பதால் ப்ளே ஆஃப் வரை முன்னேறுவதில் பெரிதாகச் சிக்கல் இருக்காது என நம்பலாம். எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தான் 75% திறமையை வெளிப்படுத்தினால், வார்னே அவர்களின் 100 சதவிகிதத்தையும் வெளிக்கொண்டு வருவார் என்பது 2008 சீசன் பார்த்தவர்களுக்குப் புரியும். இந்த சீசன் முழுக்க அவரின் மேஜிக் டச் கட்டாயம் இருக்கும்.

ராயல்ஸ் XI:
 

ரஹானே, த்ரிபாதி, சாம்சன், ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர், பின்னி, கோபால், உனட்கட், லாலின், தவால் குல்கர்னி. 

இந்த XI கொண்டு களமிறங்கினால் அணியின் பேலன்ஸ் சரியாக இருக்கும். ஆனால், டி20களில் அடித்து நொறுக்கும் டார்சி ஷார்ட்டை பெஞ்சில் உட்கார வைப்பதும் மைனஸ்தான். அவரை எங்கே ப்ளேஸ் செய்வார்கள் என்பதில்தான் இருக்கிறது வார்னேயின் சாமர்த்தியம். ஆர்ச்சருக்குப் பதிலாக அவர் களமிறங்கலாம் என்பது நம் கணிப்பு. 

அணியின் strength:

வார்னேதான் அணியின் முக்கிய பாசிட்டிவ்வாக இருப்பார். ஒரு சாதாரண அணியைக் கூட சாம்பியன் அணியாகக் காட்டும் திறமை இவரிடம் உள்ளது. தலைசிறந்த ஓவர்சீஸ் வீரர்களை வைத்திருப்பது மிகப் பெரிய பலம். ஸ்டோக்ஸ், பின்னி, ஆர்ச்சர் என அனுபவமுள்ள ஆல்ரவுண்டர்கள் இருப்பது பேட்டிங்கை இன்னும் பலப்படுத்தும்.

அணியின் weakness:

கடந்த ஐ.பி.எல்லில் புனே அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஸ்மித்தின் கேப்டன்ஷிப்பை கண்டிப்பாக ராஜஸ்தான் அணி மிஸ் செய்யும். இங்கிலாந்து அணிக்குச் சர்வதேசப் போட்டிகள் மே மாதம் தொடங்குவதால் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் வெறும் லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்பட்சத்தில் அவர்களைக் கண்டிப்பாக அணி மிஸ் செய்யும். இந்திய வீரர்களில் ரஹானே, பின்னி இருவரைத் தவிர வேறு யாருக்கும் போதிய அனுபவம் இல்லாததால் நெருக்கடியான நேரங்களில் சொதப்புவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. 

இந்தத் திறமைமிக்க வீரர்களை வைத்து வார்னே - ரஹானே காம்போ பத்தாண்டுகள் கழித்து ராஜஸ்தானுக்குக் கோப்பையைப் பெற்றுத்தருமா? விடை இன்னும் ஐம்பது நாள்களில்...! 



Trending Articles

Sponsored