அனுபவம் குறைந்த வீரர்கள், பலவீனமான பென்ச்... - ஜொலிக்குமா கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி? #IPL2018Sponsoredஐ.பி.எல்லில் விளையாடும் அணிகளிலேயே அதிக கிளாமர் கொண்ட அணி எதுவென்றால் யோசிக்காமல் சொல்லிவிடலாம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என. ஐ.பி.எல் என்ற தொடர் தொடங்கப்படவுள்ளது என்ற தகவலைவிட அதில் கொல்கத்தா அணியை ஷாரூக்கான் வாங்குகிறார் என்ற தகவலின் ரீச் அதிகம். அதனாலேயே என்னவோ ஐ.பி.எல்லின் முதல் ஆட்டமே கொல்கத்தாவிற்குத்தான். ஜிகுஜிகுவென அவர்கள் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் மெக்கல்லம் ஆடிய ருத்ரதாண்டவம் கொல்கத்தாவிற்கு மட்டுமல்ல, மொத்த ஐ.பி.எல்லுக்கும் கிடைத்த கிராண்ட் ஓபனிங். 

கிராண்ட் ஓபனிங் கடைசியாக வடிவேலுவின் பன்ச் டயலாக்காக மாறிப்போனதுதான் சோகம். முதல் மூன்று சீசன்களில் லீக் சுற்றோடு வெளியேறியது கொல்கத்தா. 2011 கம்பீர் கொல்கத்தாவுக்காக களமிறங்கிய முதல் சீசன் ப்ளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். அடுத்த ஆண்டே கோப்பையும் வாங்கினார். 2014-ல் திரும்பவும் கோப்பை. அப்படி திறம்பட வழிநடத்திய வீரரை டெல்லிக்கே தாரை வார்த்துவிட்டுத்தான் இந்த ஆண்டின் ஏலத்தை தொடங்கியது கொல்கத்தா நிர்வாகம்.

எப்படி இருக்கிறது அணி?

Sponsored


Sponsored


பிளேயர்களை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை எல்லா அணிகளும் பயன்படுத்திக்கொள்ளும்தான். அதிலும் இந்திய வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவே எந்த அணி நிர்வாகமும் விரும்பும். ஆனால் சுனில் நரைன், ரஸ்ஸல் என கொல்கத்தா தக்க வைத்த இருவருமே வெளிநாட்டு வீரர்கள். அடுத்ததாக ஏலத்தில் எடுத்த க்றிஸ் லின், மிட்செல் ஸ்டார்க் இருவரும் கூட வெளிநாட்டு வீரர்கள்தான். இந்த நான்கு வீரர்களுக்காக மட்டுமே 40 கோடிகளை செலவழித்துவிட்டது அணி நிர்வாகம். எஞ்சிய 40 கோடிகளில்தான் ஏனைய 21 வீரர்களை எடுக்கவேண்டும். இந்த நெருக்கடி வீரர்கள் தேர்விலும் எதிரொலித்தது.

அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக். ஐ.பி.எல்லின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதால் அணிக்கு நிச்சயம் பலம் சேர்ப்பார். கூடவே இருக்கிறார் ராபின் உத்தப்பா. ஐ.பி.எல்லில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் உத்தப்பாவின் சமீபத்திய ஃபார்ம் கொஞ்சம் கவலையளிக்கிறது. கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம்தான். இந்திய பவுலர்களைப் பொறுத்தவரை வினய்குமாரும் பியூஷ் சாவ்லாவும்தான் சீனியர்கள். ஏற்கெனவே குல்தீப் யாதவ் வேறு இருப்பதால் சாவ்லாவுக்கு அணியில் இடம்கிடைப்பது கஷ்டம்தான். நைட்ரைடர்ஸ் மூன்று ஸ்பின்னர்களோடு இதற்கு முன் களமிறங்கியிருக்கிறது. அதை இந்த சீசனில் தொடர்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த வீரர்களைத் தவிர மற்ற அனைவருமே அனுபவம் குறைந்த வீரர்கள் என்பதுதான் அணியின் மிகப்பெரிய மைனஸ். சுப்மன் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி என அண்டர் 19 அணியிலிருந்த மூன்று வீரர்கள் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேராவது கட்டாயம் அணியில் இடம்பிடிப்பார்கள். வெற்றிடம் அப்படி! பேட்ஸ்மேனான இஷான் ஜக்கி லோக்கல் மேட்ச்களில் ஓரளவுக்கு நன்றாகவே ஆடியிருக்கிறார். ஆல்ரவுண்டரான நிதிஷ் ராணா நல்ல பார்மில் இருப்பதால் மிடில் ஆர்டரில் நல்ல பலம் சேர்ப்பார். இளம் பேட்ஸ்மேன்கள் அபூர்வ் வான்கடேவிற்கும் ரிங்கு சிங்கிற்கும் எத்தனை ஆட்டங்களில் களத்திலிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறியே!

ஸ்டார்க் காயத்தால் வெளியேற அவரிடத்திற்கு வந்திருக்கிறார் டாம் குர்ரான். அணியின் பயிற்சியாளர் காலிஸ் இவர்மீது நிறையவே நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இவர் அணியில் இடம்பிடிக்கும்பட்சத்தில் சீனியர் பவுலரான மிட்செல் ஜான்சன் பெவிலியனில் உட்காரவேண்டியது இருக்கும். எந்தவொரு அணிக்கும் பேக்கப் வீரர்கள் ரொம்பவே முக்கியம். அதுவும் டி20 போன்ற பரபர ஆட்டத்தில் காயமாகும் வாய்ப்புகள் அதிகமென்பதால் வலுவான பென்ச் அணி இருக்கவேண்டும். ஆனால் நைட்ரைடர்ஸ் அணியில் இது மிஸ்ஸிங். கிட்டத்தட்ட அதே 11 வீரர்களைக் கொண்டே சீசன் முழுக்க ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நைட்ரைடர்ஸ். இந்தப் பிரச்னைகளைத் தாண்டி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அது நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் மேஜிக்காகத்தான் இருக்கும்.

நைட்ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:

க்றிஸ் லின், உத்தப்பா, சுப்மன் கில், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், நரைன், குல்தீப் யாதவ், வினய்குமார், டாம் குர்ரான், நாகர்கோட்டிTrending Articles

Sponsored