வெளுத்த சாம்சன்... ஒதுங்கிய கம்பீர்... ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது எப்படி?! #RRvsDDSponsoredடெல்லி, ராஜஸ்தான் என முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இரண்டு அணிகள்... இரண்டாவது போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். குறிப்பாக சொந்த மண்ணில் வென்றுவிட வேண்டும் என்கிற ராஜஸ்தானின் துடிப்பு என கடுமையான மோதலை எதிர்பார்த்தே ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு #RRvsDD இடையேயான போட்டி தொடங்கியது! 

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கெளதம் கம்பீர் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்ய வந்தது ராஜஸ்தான். ஒருநாள் போட்டிகளில் சர்வசாதாரணமாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடிய பிட்ச் என்பதால்தான் கம்பீர் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ட்ரென்ட் பெளல்ட், நதீம், கிறிஸ் மோரிஸ், ஷமி, டெவாட்டியா என வெரைட்டியான பெளலர்களுடன் களம் இறங்கியது டெல்லி.

Sponsored


இதனால் ஆரம்ப கட்ட ஓவர்களில் அதிகம் திணறியது ராஜஸ்தான். கேப்டன் அஜங்கியா ரஹானே மட்டும் கவனமாக பேட்டிங் செய்ய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷார்ட் 6 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்கிலாந்தின் சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸால் டெல்லியின் பெளலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை. 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ், ட்ரென்ட் பெளல்ட்டிடம் சிக்கினார். 12 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் நான்காவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்டோக்ஸ்.

Sponsored


இரண்டாவது டவுன் பேட்ஸ்மேனாக களத்துக்குள் வந்தவர் ராஜஸ்தான் அணியின் செல்லப்பிள்ளை சஞ்சு சாம்சான். ஆரம்பமே அதிரடிதான். பேட்டிங் வந்து முதல் பந்தை மிஸ் செய்தவர் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பேக்வேர்ட் பாயின்ட்டுக்குச் சென்றது பந்து. அடுத்த பந்து இன்னும் உக்கிரமாக எதிர்கொண்டார் சாம்சன். ஸ்விங்காகி வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் பறக்கவிட்ட சாம்சனுக்கு சிக்ஸர் கிடைத்தது. 

இந்தப் பக்கம் சாம்சன் கொளுத்திக்கொண்டிருக்க அடுத்தப் பக்கம் பக்குவ ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார் ரஹானே. மோரிஸின் பந்துகளை சாம்சன், ரஹானே இருவருமே அடித்து ஆடவில்லை. 8-வது ஓவரை வீசிய டெல்லியின் டெவாட்டா மிகச்சிறப்பாக பந்துவீசினார். ரஹானே, சாம்சன் இருவராலும் சிங்கிள்ஸ்தான் எடுக்க முடிந்ததே தவிர அடித்து ஆட முடியவில்லை. 

ஆனால், 9-வது ஓவரில் மீண்டும் உக்கிரமானார் சாம்சன். நதீமின் முதல் பந்தே டீப் மிட்வெக்கெட் ஏரியாவுக்குப் பறந்து சிக்ஸர் ஆனது. அடுத்தபந்து ஸ்லிப் திசையில் உருண்டு பவுண்டரி ஆனது. ஆனால், 11-வது ஓவரில் நதீமின் பந்துவீச்சிலேயே அவுட் ஆனார் சாம்சன். பேட்டின் முனையில் பட்டுத் தெறித்த பந்து ஆஃப் ஸ்டம்ப்பில் போய் விழ விக்கெட்டை இழந்தார் சாம்சன். மீண்டும் நதீமின் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார் கேப்டன் ரஹானே. 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார் ரஹானே. ஆனால், இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வருவதைவிட 2 டவுன் பேட்ஸ்மேனாக வருவதுதான் ஸ்பின்னர்களை அடித்து ஆட சிறப்பாக இருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் ரஹானே கீழே இறக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

ரஹானே, சாம்சன் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் டெல்லியைக் கலங்கடித்தது. 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 18 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார் பட்லர். த்ரிபாதியும், கெளதமும் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோதுதான் மழை குறுக்கிட்டது. 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களில் இருந்தது ராஜஸ்தான். அப்போது நேரம் இரவு 9.23 மணி. மழை வெளுத்து வாங்க டெல்லியின் ஓவர்கள் குறைந்துகொண்டே போயின.

இறுதியாக மழை நின்று கவர்கள் பிட்ச்சில் இருந்து எடுக்கப்பட்டபோது நேரம் 11.30 மணி. மைதானம் உலர்ந்து விளையாடலாம் என டெல்லி பேட்டிங் ஆடவந்தபோது நேரம் நள்ளிரவு 11.55 மணி. 2 ஓவர்கள் மட்டுமே பவர்பிளே, 3 பெளலர்கள் அதிகபட்சம் 2 ஓவர்கள் வீசலாம் என்கிற நிலையில் டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லும், நியூசிலாந்தின் காலின் முன்ரோவும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். 

சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத, ஆனால், சீனியர் வீரரான பெங்களூருவின் கிருஷ்ணப்பா கெளதம்தான் ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசினார். மேக்ஸ்வெல்லுக்கு கெளதமா, மேக்ஸ்வெல் நிச்சயம் சிக்ஸர்களை சிதறவிடுவார் என கமென்ட்ரிகள் பறக்க, முதல் பந்திலேயே விக்கெட். கெளதம் வீசிய பந்து மேக்ஸ்வெல்லின் பேட்டில் பட்டு ஓட, ரன் எடுக்க ஓடிவந்தார் முன்ரோ. ஆனால், மேக்ஸ்வெல் அவரைப் பாதியிலேயே திருப்பி அனுப்ப, ஒரு பந்தைக்கூட சந்திக்காமலேயே டைமண்ட் டக்காகி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார் முன்ரோ. அடுத்துவந்தார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 20 வயது ரிஷப் பன்ட். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதால், எடுத்த உடனே அதிரடி ஆட்டம் ஆடினார் பன்ட். 2 பவுண்டரிகள் கிடைத்தன. முதல் ஓவரின் முடிவில் 10 ரன்கள் எடுத்தது டெல்லி. ஆனால், அடுத்த ஓவர்தான் ராஜஸ்தானின் வெற்றியை உறுதிசெய்த ஓவர்.

குல்கர்னி வீசிய பவர்பிளேவின் இரண்டாவது ஓவரை சமாளிக்க முடியாமல் மேக்ஸ்வெல், பன்ட் இருவருமே திணறினர். வெறும் 5 ரன்கள் மட்டுமே இந்த ஓவரில் டெல்லி பேட்ஸ்மேன்களால் எடுக்க முடிந்தது. நான்கு ஓவரில் அதாவது 24 பந்துகளில் 56 ரன்கள், பவர்பிளே ஓவர்களும் முடிந்துவிட்டது என்பதால் அதிகப்படியான பிரஷரில் தத்தளித்தனர் மேக்ஸ்வெல்லும், பன்ட்டும். உனத்கட் வீசிய இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே ரன் எடுக்க முடியாமல் திணறினார் மேக்ஸ்வெல். அதனால் ரன்ரேட் இன்னும் உயர்ந்தது. ஆனால், அடுத்த மூன்று பந்துகளில் 4,6,4 என 14 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். 

18 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பென் லாலின் பந்துவீசினார். முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் கிடைக்க, நான்காவது பந்தை அடித்து ஆட முயன்றார் மேக்ஸ்வெல். திடீரென லாலின் ஸ்லோ பால் வீசியதால் வேகமாக சுழற்றிய மேக்ஸ்வெல்லின் பேட்டில் பந்து டாப் எட்ஜில் பட்டு கேட்ச்சானது. மேக்ஸ்வெல் விழ, டெல்லியின் வெற்றிக்கான முயற்சிகளும் விழுந்தன. 

12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது டெல்லி. பன்ட்டும், மோரிஸும் களத்தில் நிற்க பன்ட் மட்டும் சில பவுண்டரிகள் அடித்தார். ஐந்தாவது ஓவரின் இறுதியில் அவரும் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க, ஒரு ஓவருக்கு 25 ரன்கள் எடுக்க வேண்டும் எனக் கிட்டத்தட்ட வெற்றிபெற முடியாத நிலைக்குப் போனது டெல்லி. அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் ஷங்கரும் ஆட்டம் இழக்க 6 ஓவர்களின் முடிவில் 60 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது டெல்லி.

ஆக்ரோஷ வீரரும், கேப்டனுமான கெளதம் கம்பீர் பேட்டிங் ஆட வரவேயில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி அரைசதம் அடித்த கம்பீர், இந்த 6 ஓவர் போட்டிக்கு பேட்டிங்குக்கே வராமல் ஒதுங்கிக்கொண்டார். ஃபார்மில் இருந்த பேட்ஸ்மேனான கெளதம் 6 ஓவரில் இந்த டார்கெட்டை அடிக்கமுடியாது என நம்பிக்கை இழந்ததுதான் டெல்லியின் முதல் தோல்வி.  

தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் டெல்லி இப்போது புள்ளிகள் பட்டியலில் இறுதியிடத்தில் இருக்கிறது. டெல்லி மீண்டு வரவேண்டும் என்றால் முதலில் கெளதம் கம்பீருக்கு தன் மீதும், தன் அணியின் மீதும் நம்பிக்கை வர வேண்டும்!Trending Articles

Sponsored