தோள்தட்டி வரவேற்று தோல்வியுடன் வழியனுப்பிய ஈடன் கார்டன்... கொல்கத்தாவில் கம்பீர் படுதோல்வி! #KKRvsDDSponsoredகடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் கவுதம் கம்பீர். இந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியின் கேப்டன். அவர் தன் முன்னாள் ஹோம் கிரவுண்ட் ஈடன் கார்டனில் எப்படி ஜொலிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  #KKRvDD

 டாஸ் வென்ற கம்பிர், கொல்கத்தா அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார் ட்ரென்ட் போல்ட். மேட்ச்சின் முதல் ஓவரே மெய்டன்.  ஆட்டத்தின் முதல் 15 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி, அதிரடி தொடக்க வீரரான சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது. உத்தப்பா தனக்கே உரிய measured assault ஸ்டைலில் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசிய 6-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, அந்த ஓவரில் 18 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவுக்குத் தேவையான மொமென்ட்டை அளித்த உத்தப்பா, ரன் ரேட்டை மேலும் உயர்த்த நினைத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 62/2. மறுபுறம் லின் தன் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக ஆடினார். லின்னுடன் இணைந்தார் ராணா.

Sponsored


Sponsored


விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், கொல்கத்தா அணி ரன் ரேட்டை நன்றாகவே நிலைநிறுத்தியது. ராணா எந்தவொரு லூஸ் பாலையும் விட்டுவைக்காமல் விளாசினார். எந்தவொரு இந்திய இளம் வீரரும் சற்று நன்றாக ஆட தொடங்கியதும் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லெட்ஜிங் முறையைக் கைப்பற்றுவர். இதையே டெல்லி வீரர் மோரிஸ் முயன்றார். தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் பந்து வீச்சில் ஒரு சிக்ஸரும், மோரிஸ் ஒவரில் ஒரே இடத்தில் 2 பவுண்டரியும் விளாசினார். ஆனால், அடுத்த பந்திலேயே அதே இடத்தில் மூன்றாவது பவுண்டரி அடிக்க முயன்று, விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கியது அதிரடி ரசல்.

இந்த மாறி சூழலுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ரசல், தன் பணியைக் கச்சிதமாகச் செய்தார். சென்னை அணி செய்த அதே தவறை கொல்கத்தா அணியும் செய்தது. எந்த இடத்தில் போட்டால் ரசல் ஸ்லாக் முறையில் பந்தை விளாசுவாரோ, அதே இடத்தில் பந்தைப் போட்டு டெல்லி பௌலர்கள் ஊட்டிவிட்டனர். சந்தித்தது 11 பந்துகள்தான். அதில் 6 சிக்ஸர்கள். 12-வது பந்தில் போல்ட் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் அவுட் ஆகும் தருணம் ராணா தன் அரைசதத்தைக் கடந்திருந்தார். ஒருகட்டத்தில் 210 - 220 ரன்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெவேத்தியா கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ராணா 59 ரன் குவித்தார். 

கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்ததால், நம்பிக்கையுடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பைக்கு எதிராக 91 ரன்கள் விளாசிய ஜேசன் ராய் 1 ரன்னில் சாவ்லா பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர், மூன்றாம் ஓவரில் கேப்டன் கம்பீர் என முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது டெல்லி.

நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பண்ட்- மாக்ஸ்வெல் கூட்டணி கவுண்டர் அட்டாக் செய்யத் தொடங்கியது. இவர்கள் அடிக்கத் தொடங்கினால் எந்தவொரு கிரவுண்டும், எந்தவொரு டார்கெட்டும் பெரிதல்ல என்பதற்கேற்ப, அசால்ட்டாக ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அடித்து வந்தனர். கொல்கத்தா அணியின் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் நரேன் ஓவரில்கூட, ரிஷப் பன்ட் வெளுத்து வாங்கினார். இந்த ஸ்கோரையும் எளிதாக சேஸ் செய்துவிடுவார்களோ என்று எதிர்பார்த்த நேரத்தில், தினேஷ் கார்த்திக் தன் இரண்டாம் துருப்புச் சீட்டான குல்தீப் யாதவைக் கொண்டுவந்தார். 

வீசிய மூன்றாவது பந்திலேயே பன்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் குல்தீப். விஜய் சங்கர், மோரிஸ் போன்ற வீரர்கள் இருந்தும் குல்தீப்பை சமாளிக்க தெவேத்தியாவை அனுப்பினார் கம்பீர். அவர் ஒரு ரன்னில் வெளியேற மொத்த பிரஷ்ஷரும் மேக்ஸ்வெல் பக்கம் திரும்பியது. குல்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் விளாசிய மேக்ஸ்வெல், மூன்றாவது சிக்ஸர் அடிக்க முயலும்போது ஆட்டமிழந்தார்.  

மோரிஸ், விஜய் சங்கர் இருவரும் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மோரிஸ் விக்கெட்டை எடுத்தபோது, நரேன் 100-வது ஐ.பி.எல் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் மலிங்கா, ஹர்பஜனுக்கு அடுத்ததாக ஒரே அணிக்காக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சேர்ந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் கொல்கத்தா அணியின் சுழற்பந்துக்கு சரணடைந்தனர். டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டானது. கொல்கத்தா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன், குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். 35 பந்துகளில் 59 ரன்கள் குவித்த ராணாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

டெல்லி அணிக்கு இது மிகப்பெரிய பாடம். மூன்று மேட்ச்களிலும் அவர்களின் பந்து வீச்சு சொல்லும்படியில்லை. அடுத்தப் போட்டிக்கு இன்னும் 4 நாள்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் கேப்டன் கம்பீர்,  பயிற்சியாளர் பாண்டிங் இருவரும் இணைந்து `plan b’ தயார்செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் , வழக்கம் போல புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டியது தான். Trending Articles

Sponsored