தோனியின் வரலாறு மாறுமா... ஜடேஜாவின் அந்த மேஜிக் தொடருமா?! #CSKvRR #Infograph



சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள 17 போட்டிகளில் 11-ல் `தோனி அண்ட் கோ’தான் வென்றுள்ளது. முதல் சீசனின் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்ற ராயல்ஸ், அதன்பிறகு 7 ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது சீசனுக்குப் பிறகு சென்னையில் வெற்றி பெறவேயில்லை.

ஆனா, `இப்போதான் மேட்ச் சென்னையிலையே இல்லையே!’ ஆம், அதனால் ராஜஸ்தான் கொஞ்சம் ஆசுவாசப்படலாம். ஏனெனில், இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடங்களில் நடந்த 7 போட்டிகளில் மூன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுள்ளது. புனேதான் இனி சி.எஸ்.கே-வின் ஹோம் கிரவுண்ட் என்றாலும், 1000 சென்னை ரசிகர்கள் ரயிலேறி பயணித்திருந்தாலும், அங்கு தோனி 2 சீசன்கள் விளையாடியிருந்தாலும் சென்னை வேறு, புனே வேறு! அதனால் அந்தப் பலனை அனுபவிக்க ராயல்ஸ் முடிந்தவரை முயற்சி செய்யும். 

Sponsored


Sponsored


எட்டு ஆண்டுகள் ராஜஸ்தான் அணியின் ஆணிவேராக விளங்கிய வாட்சன் இப்போது முதல்முறையாக அந்த அணியை எதிர்த்து விளையாடவுள்ளார். தவிர, ஷேன் வாட்சன்தான், சூப்பர் கிங்ஸ்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த டாப் ராஜஸ்தான் பேட்ஸ்மேன். அவர் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் 460 ரன்கள் குவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் மஞ்சள் உடையில்! அவரை ராயல்ஸ் ரொம்பவே மிஸ் செய்யும். 

Sponsored


8 வருடங்களுக்கு முன்னால், சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில், இரு அணிகளும் சேர்த்து 469 ரன்கள் குவித்தன. அந்தப் போட்டியில் சென்னை அடித்த 246 ரன்கள்தான் ராஜஸ்தானுக்கு எதிராக அவர்களின் சிறந்த ஸ்கோர். அந்தப் போட்டியில் ராயல்ஸ் 223 ரன்கள் எடுத்தது. சி.எஸ்.கே-வுக்கு எதிராக அவர்களின் பெஸ்ட் பேட்டிங் அதுதான். இன்று அப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தை இரண்டு அணிகளும் தந்தால் ஐ.பி.எல் ரசிகர்களுக்கு செம விருந்துதான். 

ராஜஸ்தான் ராயல்ஸ் VS மகேந்திர சிங் தோனி

எல்லா அணிகளையும் ஏதோ ஒரு போட்டியிலாவது பந்தாடும் தோனியை, கடைசி வரை சைலன்ட் மோடிலேயே வைத்திருந்த ஒரே டீம் ராயல்ஸ்தான். அந்த அணிக்கெதிராக விளையாடிய 17 ஐ.பி.எல் போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 249 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல், தோனி இதுவரை அரைசதம் அடிக்காத எதிரணி (இந்த சீசனில் ஆடும் அணிகளுள்) ராஜஸ்தான்தான். அந்த அணிக்கு எதிராக அவரது அதிகபட்சம் 41 மட்டுமே. 

ஸ்ட்ரைக் ரேட் படி பார்த்தாலும், தோனியின் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் (121.46) இவர்களுக்கு எதிராகத்தான். இதுகூடப் பரவாயில்லை, ராயல்ஸுக்கு எதிராக வெறும் 8 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார். சிக்ஸர்களிலும் வொர்ஸ்ட் ரெக்கார்ட் ராஜஸ்தானுக்கு எதிராகத்தான். இப்படி தோனியின் மோசமான பேட்டிங் ரெக்கார்டுகளெல்லாம் ராஜஸ்தானுக்கு எதிராகவே வந்துள்ளது. இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில், கடந்த போட்டியைப் போல் தோனி வெளுக்கவேண்டும். வெளுப்பாரா..?

தொடருமா ஜட்டு மேஜிக்?!

பல சென்னை ரசிகர்களும் ஜடேஜாவின் பெர்ஃபாமன்ஸால் அதிருப்தியாகவே இருக்கின்றனர். அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் ஓவர்களை வேஸ்ட் செய்கிறார், பந்துவீச்சிலும் பெரிதாகச் சோபிப்பதல்லை. போதாக்குறைக்கு அவரை பிராவோவுக்கு முன்பாகக் களமிறக்கிவிடுகின்றனர். அதனால், எல்லோரும் ஜடேஜாவுக்கு ஆங்ரி ஸ்மைலியே காட்டுகின்றனர். ஆனால், வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய கடைசி போட்டியின் ஆட்டநாயகன் நம்ம ஜட்டுதான்!

சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் 158 என டார்கெட்டை சேஸ் செய்தது ராயல்ஸ். பொறுமையாகத் தொடங்கிய ராஜஸ்தான், நல்ல அடித்தளம் அமைத்திருந்தது. ஜடேஜா பந்துவீச வந்தார். முதல் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித், அடுத்த ஓவரில் ஷேன் வாட்சன், 3-வது ஓவரில் கருண் நாயர், கடைசி ஓவரில் தீபக் ஹூடா என ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தி ராயல்ஸின் டாப் ஆர்டரை சுருட்டி வீசினார். 

விக்கெட் வீழ்த்தியது மட்டுமல்ல, ரொம்பவும் எகனாமிகலாகவே பந்துவீசினார். சிங்கிள்களைத் தாண்டி அவர்களால் ரன் சேர்க்கவே முடியவில்லை. 11 சிங்கிள்கள், 13 டாட் பால்கள். ஆடிப்போனது ராஜஸ்தான். ஆட்டநாயகன் ஆனார் ஜடேஜா. அந்தப் போட்டியின் ஃபார்மை, இந்தப் போட்டியிலும் தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும். கம் ஆன் ஜட்டு!



Trending Articles

Sponsored