ஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்! #IPL2018



இரண்டு ஆண்டு தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது என்பதால் இந்த ஐ.பி.எல் (#IPL) சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியைக் காண, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடந்ததால், சென்னையில் இருந்து போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டன. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கும் ஏமாற்றமே. ஏனெனில், கடந்த ஒரு வாரத்தில் டி.வி.யில் ஐ.பி.எல் பார்த்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைவு.

Sponsored


கடந்த சீசன் வரை சோனி பிக்சர்ஸ் நெட் ஓர்க் நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பியது. சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் சர்வதேச உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு வாங்கியது. ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையும் ஸ்டார் இந்தியாவுக்கே கிடைத்தது. ஸ்டார் இந்தியா அதன் சேவையை விரிவுபடுத்த  இந்த ஆண்டு 10  சேனல்களில் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் திட்டத்துடன் களமிறங்கியது. இதில் 6 மாநில மொழி சேனல்கள். மேலும், ஹாட் ஸ்டாரிலும் ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்புசெய்கிறது.

Sponsored


இந்தநிலையில், ஐ.பி.எல் போட்டிகளை டி.வி.யில் பார்ப்பவர்கள் குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கடந்த 8 போட்டிகளை 245.71 மில்லியன் பேர் டிவியில் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு 254.80 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். இந்தி பேசும் மாநிலங்களில் ஐ.பி.எல் போட்டிகளை டி.வி.யில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் குறைந்து 143.53 மில்லியனாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 178.33 மில்லியனாக இருந்தது.

Sponsored


முதன்முறையாக ஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் 10 மில்லியன் குறைந்துள்ளது. இதில் இந்தி பேசும் மாநிலங்களின் பங்களிப்பு 20 சதவீதம். இப்படி பார்த்தால், சுமார் 35 மில்லியன் பார்வையாளர்கள் குறைந்துள்ளனர். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக ஸ்டார் இந்தியா நிறுவனம் அதன் சேவையை தென் மாநிலங்களில் விரிவுபடுத்தியுள்ளது. பிராந்திய மொழிகளில் போட்டிகளை ஒளிபரப்பி வருவதாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்பியிருப்பதாலும், ஸ்டார் இந்தியாவுக்கு தென் மாநிலங்களில் நல்ல மைலேஜ் கிடைத்துள்ளது.

இதற்கு முன் சோனி செட் மேக்ஸ் நெட்வொர்க் நிறுவனம், இந்தி திரைப்பட சேனலான செட் மேக்ஸில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பியது. இது இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தி பேசும் மக்களுக்கு தனியாக ஒரு சேனலில் ஐ.பி.எல் ஒளிபரப்பியும், பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இது ஸ்டார் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.  

இதுவரை டிவி, ஹாட் ஸ்டார் மூலம் 371 மில்லியன் பேர் ஐ.பி.எல். போட்டிகளைப் பார்த்துள்ளனர் என ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் டிவி-யில் 288.40 மில்லியன் பேரும், ஹாட் ஸ்டார் மூலம் 82.4 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர். இதுகுறித்து ஸ்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் கூறுகையில், ``ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒளிபரப்பு விஷயத்தில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு திருப்தி இருந்ததா என ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

தவிர, கடைசி கட்டத்தில்தான் ஐ.பி.எல் சூடு பிடிக்கும். இந்த சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆவதால், வரும் வாரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஸ்டார் இந்தியா கருதுகிறது.



Trending Articles

Sponsored