கடைசி ஓவர்களில் தடுமாறிய ஹைதராபாத்... ராஜஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்கு! #RRvsSRHSponsoredராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 

ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு முதல் போட்டி ஆகும். அதேபோல், ராஜஸ்தான் அணி சார்பாக நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடிய மஹிபால் லோமர் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் களமிறங்கினர். 

Sponsored


ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை தவான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடங்கினர். 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸுடன், கேப்டன் வில்லியம்சன் கைகோத்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடத் தொடங்கினாலும், ஒரு கட்டத்துக்கு மேல் ரன் ரேட்டை உயர்த்துவதில் முனைப்பு காட்டியது. முதல் ஐபிஎல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேல்ஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும், 63 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாஹா 11 ரன்களுடனும், பேசில் தம்பி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், கௌதம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Sponsored
Trending Articles

Sponsored