கொல்கத்தாவுக்கு தோனி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்! #KKRvCSK PREVIEWSponsored''எவனாயிருந்தாலும் அடிப்போம்'' என உச்சத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 2000 - 2010 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒரு கெத்தில் இருந்ததே அப்படி ஒரு கெத்து. கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை சென்று வெற்றியை சாத்தியம் ஆக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், ஆஸ்திரேலியாவைப் போல பெளலிங்கில் பலம் இல்லாத அணி சென்னை என்பதே தோனியின் கவலை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோனியின் பெளலிங் பிளான் என்னவாக இருக்கும் என்பதுதான் பெரிய சர்ப்ரைஸ்!
 


சென்னை அணியில் எப்போதும் ஒன்றிரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும் தோனி கடைசியாக நடந்த டெல்லிக்கு எதிரான மேட்சில் நான்கு மாற்றங்களை செய்திருந்தார். டேவிட் வில்லியை எல்லோரும் எதிர்பார்க்க, லுங்கி எங்கிடி உள்ளே வந்தார். சாஹருக்குப் பதிலாக கேரள வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிஃப்பை அழைத்துவந்தார். இம்ரான் தாஹிருக்குப் பதிலாக கான் ஷார்மா. அதேபோல் டுப்பெளஸ்ஸி ரிட்டன்.

Sponsored


''ஹார்ஸஸ் ஃபார் கோர்ஸஸ்'' என்பதுதான் தோனியின் எப்போதைக்குமான லீடர்ஷிப் ஃபார்முலா. அதனால் டெல்லிக்கு எதிராக விளையாடிய அதே அணிதான் இன்றும் விளையாடும் என எல்லோரும் எதிர்பார்க்க, வீரர்களை மாற்றிப்போட்டு நிச்சயம் சர்ப்ரைஸ் கொடுப்பார் தோனி. 

Sponsored


 ஈடன் கார்டனில் யுத்தம்!

இதுவரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 4 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. ஈடன் கார்டன் , சென்னை சேப்பாக்கம்... இரண்டு மைதானங்களின் தன்மையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பேட்டிங் பிட்ச்சா, பெளலிங் பிட்ச்சா என்று கணித்துவிடமுடியாது. இந்த சீசனில் இங்கு நடந்த நான்கில் மூன்று போட்டிகளில் சேஸ் செய்த அணிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. அதில் இரண்டு ஹை ஸ்கோரிங் மேட்ச்கள். பெங்களூரு அடித்த 176 ரன்களை சேஸ் செய்து வென்றது கொல்கத்தா. பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் ஆடிய கொல்கத்தா 200 ரன்கள் அடிக்க, டக்வொர்த் லூயிஸ் முறையில் 13 ஓவர்களில் 125 ரன்கள் அடிக்க வேண்டும் என பஞ்சாபுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டது. இதை 11-வது ஓவரிலேயே அடித்து வென்றது பஞ்சாப். ஹை ஸ்கோரிங் மேட்சுகள் ஒருபக்கம் இருக்க ஹைதராபாத் அணிக்கு எதிரான மேட்சில் முதலில் ஆடிய கொல்கத்தா 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை 19-வது ஓவரில்தான் சேஸ் செய்து வென்றது ஹைதராபாத். அன்றைய ஆட்டம் முழுக்க முழுக்க பெளலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஈடன் கார்டனில் முதலில் பேட்டிங் செய்து வென்றது ஒரே ஒரு போட்டியில்தான். கொல்கத்தா அணி 200 ரன்கள் செட் செய்ய, டெல்லி அணி 129 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. அதனால் கொல்கத்தா மைதானத்துக்குள் பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பெளலர்களும் முக்கியம்.வருவாரா வில்லி?!

சென்னையில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சாம் பில்லிங்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றிபெற்றுக்கொடுத்தார். ஆனால், அவர் அந்த ஒரே ஒரு மேட்சில் மட்டுமே சிறப்பாக விளையாடினார். ஃபார்ம் அவுட் ஆன அவரை டெல்லிக்கு எதிரான போட்டியில் வெளியே எடுத்தார் தோனி. இன்றைய கொல்கத்தா மேட்சிலும் அவர் விளையாடுவது டவுட்தான். இன்றைய மேட்சில் தோனி டுப்ளெஸ்ஸிக்குப் பதிலாக ஆல் ரவுண்டரான டேவிட் வில்லியைக் கொண்டுவரலாம். 

இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு ரஸலின் விக்கெட்டுகளைப் பறிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை 9 ஓவர்களுக்கு முடித்துவிட்டால் சென்னையின் வெற்றி மிக எளிதாக இருக்கும். 


ஜடேஜா வெர்சஸ் கான் ஷர்மா!

கொல்கத்தா மைதானத்தில் ஸ்பின்னர்களுக்குப் பெரிதாக விக்கெட் கிடைத்ததில்லை என்றாலும் அவர்கள்தான் ரன்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் ஸ்பின்னர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்த சீஸனில் முதல் போட்டியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை நான்கு ஓவர்கள் வீச வைத்தார் தோனி.  1 விக்கெட்டை மட்டுமே எடுத்தவர் 31 ரன்கள் கொடுத்தார்.  ''அவர் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் இடதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவர் பந்துவீசமாட்டார்'' - இதுதான் கடந்த 7 மேட்ச்களாக ஜடேஜாவுக்கு ஓவர் கொடுக்காததற்கு ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் சொன்னக் காரணம். ஆனால், டெல்லிக்கு எதிரான போட்டியில் 7-வது ஓவர் வீசவந்தார் ஜடேஜா. அப்போது விளையாடிக்கொண்டிருந்தவர் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். களத்தில் பன்ட் இருக்கும்வரை நான்கு ஓவர்களுமே வீசினார் ஜடேஜா. ஆனால், 1 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்ததைத் தவிர ஜடேஜா ஓவரில் பன்ட் பெரிதாக அடிக்கவில்லை. ஆனால், ஜடேஜாவால் பன்ட்டை வீழ்த்தமுடியவில்லை என்னும்போது இன்னொரு லெக் ஸ்பின்னரான கான் ஷர்மாவை தோனி பயன்படுத்தியிருக்கலாம்.  அன்று தோனி கான் ஷர்மாவுக்கு ஒரு ஓவர்கூட கொடுக்கவில்லை. மிடில் ஓவர்களில் ஹர்பஜன் சிங்கின் ஆஃப் ஸ்பின்னோடு இணைந்து, கான் ஷர்மா லெக் ஸ்பின் வீசினால் ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு, பார்ட்னர்ஷிப்களையும் உடைக்கலாம். 

கொல்கத்தாவின் குழப்பம்!

கொல்கத்தாவுக்குப் பெரும் குழப்பமே சென்னையின் பேட்ஸ்மேன்களை எப்படி சமாளிப்பது என்பதுதான். சென்னையின் பேட்டிங் ஆர்டரில் யாரை டார்கெட் செய்வது என்பதே குழப்பம்தான். அம்பதி ராயுடு, தோனியின் விக்கெட்டுகள்தான் முக்கியம் என கொல்கத்தா நினைக்கலாம். ஆனால் வாட்சன், டுப்ளெஸ்ஸி, ரெய்னா, பிராவோ என யார் எந்த மேட்ச்சில் அடிப்பார்கள் என்பதையே சர்ப்ரைஸாக வைத்திருக்கிறது சென்னை. பெளலிங்கில் சுனில் நரேன், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என இந்த மூன்று ஸ்பின்னர்களைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். சுனில் நரேனின் ஓவர்களில் அடக்கிவாசித்துவிட்டு குல்தீப், பியூஷை வெளுக்க வேண்டும் என்பதுதான் சென்னை பேட்ஸ்மேன்களின் பிளானாக இருக்கும்.

டேவிட் வில்லியை அணிக்குள் இறக்குவாரா இல்லையா என்பதுதான் தோனியின் இன்றைய சர்ப்ரைஸ். அதேப்போல் இன்றைய மேட்சில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சிக்ஸர்களோடு வியாழன் இரவைக் கொண்டாடத் தயாராவோம்!Trending Articles

Sponsored