`சுழலில் வீழ்ந்த விராட் கோலியின் படை!’ - சிஎஸ்கேவுக்கு 128 ரன்கள் இலக்கு #CSKvsRCBSponsoredசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 

Photo Credit: Twitter/IPL

Sponsored


புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணிகள் தரப்பில் தலா 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சென்னை அணியில், டூபிளசிக்குப் பதிலாக டேவிட் வில்லியும்,  கரண் ஷர்மாவுக்குப் பதிலாக துருவ் ஷோரேவும், கே.எம்.ஆசிஃபுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்குரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஐபிஎல் தொடரில் டேவிட் வில்லி விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அதேபோல், பெங்களூரு தரப்பில் டிக்காக்குப் பதிலாக டிவிலியர்ஸும், மனன் வோராவுக்குப் பதில் பார்த்திவ் படேலும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக முருகன் அஸ்வினும் சேர்க்கப்பட்டனர். 

Sponsored


பெங்களூரு அணியின் இன்னிங்ஸை பார்த்திவ் படேலும், பிரெண்டன் மெக்கல்லமும் தொடங்கினர். இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே இங்கிடி பிரித்தார். அவரது ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி, ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. அப்போது, ஜடேஜா மற்றும் விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

விராட் கோலிக்குப் பின்னர் களமிறங்கிய `மிஸ்டர். 360’ டிவிலியர்ஸும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹர்பஜன் பந்துவீச்சில் தோனியின் அசத்தல் ஸ்டம்பிங்கில் அவர் வெளியேறினார். காயத்திலிருந்து மீண்டுவந்து இன்றைய போட்டியில் களமிறங்கிய டிவிலியர்ஸ் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு ரன்னில் வெளியேறினார். மன்தீப் சிங் 7 ரன்களில் வெளியேற பெங்களூர் அணி, 11 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பார்த்திவ் படேல், 37 பந்துகளில் அரைசதமடித்து ஆறுதல் அளித்தார். சிறப்பாக விளையாடிவந்த அவர், 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பார்த்திவ் படேலின் விக்கெட்டுக்குப் பின்னர் பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிகிராந்தோமை அறிமுக வீரர் டேவிட் வில்லி, பெவிலியனுக்கு அனுப்பினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட உமேஷ் யாதவ், வில்லியின் துல்லிய த்ரோவில் வெளியேறினார். டிம் சவுத்தி 36 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 
 Trending Articles

Sponsored