ஐந்து ஓவர்கள் பவுண்டரியே இல்லை... , சேஸிங்கில் இது பெஸ்ட்... ஹைதராபாத் வென்றது எப்படி?! #SRHvDDSponsoredசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிரட்டும் பேட்டிங் பட்டாளம் இல்லை; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. 30 பந்துகளில் பவுண்டரியே இல்லை. ஆனாலும், ஹைதராபாத் வெற்றிபெற்றுள்ளது. இந்த சீசனில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்துள்ளது. பெளலிங் மட்டுமல்ல பேட்டிங் மூலமும் ஜெயிக்க முடியும் என நிரூபித்துள்ளது. #SRHvDD

சன்ரைசர்ஸ்– டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. டெல்லி அணியில் காலின் முன்ரோ, ஷபாஸ் நதீம் ஆகியோருக்குப் பதிலாக கிறிஸ்டியன், நமன் ஓஜா வாய்ப்பு பெற்றனர். முதுகு வலியில் இருந்து குணமடைந்த புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்பி ஹைதராபாத் அணியின் பெளலிங் யுனிட்டுக்குப் பலம் சேர்த்தார். முதலில் பேட் செய்த போட்டிகளில் எல்லாம் வெற்றிபெற்றிருப்பதால், டாஸ்  வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ். இளம் புயல் பிரத்வி ஷா உடன் ஓப்பனிங் இறங்கினார் மேக்ஸ்வெல்.

Sponsored


விளையாட்டு என்பது கலை அல்ல. அதில் நளினம் வெளிப்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாறாக, விளையாட்டில் நளினம் சேரும்போது ரசனை இரட்டிப்பாகிறது. இன்றைய டி-20 யுகத்தில், ரசனையுடன் கூடிய நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஜென்ஸி பேட்ஸ்மேன்கள் அரிதினும் அரிது. டெல்லி அணியின் பிரித்வி ஷா அவர்களில் ஒருவர்.

Sponsored


சந்தீப் ஷர்மா குட் லென்த்தில் வீசிய பந்தை அலட்டாமல் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்டு, அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் வந்த பந்தை பாயின்ட் – பேக்வார்ட் பாயின்ட்டுக்கு இடையே கட் ஷாட் மூலம் பெளண்டரி அடித்து, ஷாகிப் அல் ஹசன் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸர் பறக்கவிட்டு, லெக் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஃப்ளிக் செய்து வெரைட்டி விருந்து படைத்தார் பிரித்வி ஷா. இது அதீத மிகைப்படுத்தல் என்றாலும், இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். பெளலர் சந்தீப் ஷர்மாவின் கைகளில் பட்டு, மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகக் காரணமாக இருந்தது, ஒரு அற்புதமான ஸ்ட்ரெய்ட் டிரைவ் என்பது சோக முரண்.  

ஆட்டத்துக்கு ஆட்டம் பிரித்வி ஷா தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு, சித்தார்த் கவுல் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசியதை எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸருக்கு அனுப்பியதும் அடுத்தடுத்த மூன்று பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி அடித்ததுமே சான்று. மூன்று  பவுண்டரிகளுமே வெவ்வேறு ரகம். ஃபிளிக், கட், புல் ஷாட் என பக்கா கிரிக்கெட் ஷாட்கள். இந்த சீசனில் பெஸ்ட் பெளலிங் யுனிட்டுக்கு எதிராக கவனமாகவும், நேர்த்தியாகவும் அதேநேரத்தில் பவர்பிளேவில் ரன் ரேட் குறையாமலும் பார்த்துக்கொண்ட பிரித்வி, அரைசதம் அடித்தது 25 பந்துகளில்... எந்த இடத்திலும் தொய்வே இல்லை. அதனால்தான், பிரித்வி ஷா ஆட்டத்தைப் பார்த்த, ஹர்ஷா போக்ளே `இன்றைய இளம் தலைமுறை பேட்ஸ்மேன்கள் செட்டிலாக அதிக பந்துகளை எடுத்துக்கொள்வதில்லை’ என ட்விட்டரில் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

கேப்டன் என்ற முறையில் பொறுப்புணர்ந்து பிரித்வியின் ஆட்டத்தை எதிர்முனையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தனக்கான சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்தவும் தவறவில்லை. ஷகிப் அல் ஹசனின் பந்தில் ஃபிரன்ட் ஃபுட்டில் தான் ஸ்ட்ராங் என்பதை நிரூபிக்க லாங் ஆனில் ஒரு சிக்ஸரும், பேக் ஃபுட்டில் அதைவிட ஸ்ட்ராங் என்பதைச் சொல்ல பேக்வார்ட் பாயின்ட் – ஷார்ட் தேர்ட் மேனுக்கு இடையே கட் ஷாட் மூலம் பெளண்டரியும் தட்டிவிட்டபோது ரன்ரேட் பத்துக்கும் குறைவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. பிரித்வி – ஷ்ரேயாஸின் பக்கா பார்ட்னர்ஷிப்பில் டெல்லி 10 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்திருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கூக்ளி, லெக் ஸ்பின் என பந்துக்குப் பந்து வேரியேஷன் காட்டும் ரஷித் கான் வீசிய முதல் ஓவரை நேர்த்தியாக எதிர்கொண்ட பிரித்வி, ரஷித் வீசிய இரண்டாவது ஓவரில் ஏமாந்தார். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயல, அது டாப் எட்ஜாகி ஷார்ட் தேர்ட் மேன் திசையில் இருந்த சித்தார்த் கெளல் கையில் சிக்கியது. பிரித்வி ஷா 65 ரன்களில் (35 பந்து) அவுட். Excellent innings comes to an end.

ரிஷப் பன்ட் உடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ், பொறுப்பாகத்தான் ஆடினார். ஆனால், சித்தார்த் கவுல் பந்தில் ஃபிளிக் செய்ய முயன்று டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஷிகர் தவனிடம் கேட்ச் கொடுத்து, 44 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து, இந்த சீசனின் முதல் போட்டியில் களமிறங்கிய நமன் ஓஜா, களத்தில் இருந்த சுவடே தெரியாமல் அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் திரும்பினார். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரிஷப் பன்ட், ரஷித் கான் சுழலில் கொஞ்சம் திணறினார். தவிர, சன்ரைசர்ஸ் பெளலர்கள் ரிஷிப் பன்ட்டுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என பக்கா ஹோம்வொர்க் செய்திருந்தனர். கடைசியாக, ரஷித் பந்தில் எல்பிடபுள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ரிஷப் பன்ட். பவர்பிளேவில் நன்றாக ஆடிய டெல்லி, மிடில் ஓவரில் ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்ட டெல்லி, 15-வது ஓவருக்குப் பின் ரொம்பவே தடுமாறியது. 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இமாலய சிக்ஸர்கள் பறக்க விட வேண்டிய கடைசி இரண்டு ஓவர்களில் விஜய் சங்கர், கிறிஸ்டியன் இருவரும் தடவிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக புவி வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டார் விஜய் சங்கர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது டெல்லி.

சன்ரைசர்ஸ் இந்த சீசனில் 126, 148, 139 ரன்களை சேஸ் செய்துள்ளது. 194, 183 ரன்களை சேஸ் செய்தபோது தோல்வியடைந்துள்ளது என்பதால், டெல்லி நிர்ணயித்த 164 ரன்கள் என்பது அவர்களுக்கு சவாலான இலக்குதான். அதை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தது ஷிகர் தவன் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி. மேக்ஸ்வெல்லுக்கு நேற்று கட்டம் சரியில்லை. பேட்டிங்கின்போது எதிர்பாரா முறையில் ரன் அவுட்டானவர், அலெக்ஸ் ஹேல்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்சை மிஸ் செய்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்ல பேட்ஸ்மேனுக்கு அழகு. ஹேல்ஸ் நல்ல பேட்ஸ்மேன். ஒரு காலத்தில் டி-20 தரவரிசையில் நம்பர் -1 இடத்தில் இருந்தவர். அவேஷ் கான் வீசிய ஓவரில் நான்கு சிக்ஸர்கள் பறக்கவிட்டு, தான் யார் என்பதை நிரூபித்தார். பவர்பிளே முடிவில் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது.

சன் ரைசர்ஸ் ஸ்பின்னர்களை வைத்தே மிரட்டியது. இதைப் புரிந்து ஆரம்பத்தில் இருந்தே அமித் மிஸ்ராவுக்கு ஓவர் கொடுத்திருக்க வேண்டும். கொஞ்சம் லேட்தான் என்றாலும், மிஸ்ரா தான் ஒரு பிரமாதமான லெக் ஸ்பின்னர் என்பதை அந்த ஒற்றைப் பந்தில் நிரூபித்தார். லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சான பந்து அலெக்ஸ் ஹேல்ஸ் உடம்பை முற்றிலுமாக கிராஸ் செய்து, ஆஃப் ஸ்டம்ப்பைத் தகர்த்தது. அற்புதமான டர்ன். அழகான ஸ்பின். இந்த டோர்னமென்ட்டின் சிறந்த பந்து. லெக் ஸ்பின்னர்களின் கனவு பந்து. டிபிக்கல் ஷேன் வார்ன் ஸ்டைல். ஆபத்தான ஹேல்ஸ் 45 ரன்களில் அவுட். டெல்லிக்கு ஒரு பிரேக்த்ரோ.

தன் அடுத்த ஓவரில் ஹைதராபாத் ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி கொடுத்தார் மிஸ்ரா. டி-20 பேட்ஸ்மேன்களுக்கான கேம். அதில் பெளலர்கள் வெல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு பந்திலும் வேரியேஷன்களைப் புகுத்த வேண்டியது அவசியம். அமித் மிஸ்ரா அதில் தேர்ந்தவர் போல தெரிந்தார் நேற்று. ஷிகர் தவன் விக்கெட்டை எடுக்க அவர் தேர்ந்தெடுத்த யுத்தி பாராட்டுக்குரியது. தவன் அவுட்டாவதற்கு முன் அமித் மிஸ்ரா வீசியது Wide. மிடில் ஸ்டம்ப் லைனில் குட் லென்த்தில் விழுந்த பந்து, தவன் ஃபிளிக் செய்ய முடியாத அளவு சுழன்று, wide ஆனது. அப்போதே தவன் சுதாரித்திருக்க வேண்டும். சுதாரிக்கத் தவறிவிட்டார். அடுத்த பந்தை தடுக்கத் தவறிவிட்டார். கடந்த முறையை விட சற்று முன்னதாக, ஆனால் அதே மிடில் லைனில் பிட்ச்சான பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் தவன். பந்து அவரை ஏமாற்றி மிடில் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. 33 ரன்களில் ஷிகர் தவன் அவுட்.

மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் இருவருமே செட்டிலாக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வர். 48 பந்துகளுக்கு 72 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அவர்கள் சிங்கிள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். டவுன் தி லைன் வந்து அட்டகாசமாக சிங்கிள் தட்டினர். டெல்லி இறுக்கிப் பிடித்தது. 30 பந்துகள் வரை ஒரு பவண்டரி கூட அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது. நெருக்கடி ஹைதாபராத் பக்கம் எட்டிப் பார்த்தது. 6 ஓவர்களில் 62 ரன்கள் தேவை. ரன்ரேட் 10.33 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், அப்போதும் வில்லியம்சன் – மணிஷ் ஜோடி பதற்றமின்றி இருந்தனர்.

ஒரு வழியாக கிறிஸ்டியன் வீசிய 15-வது ஓவரில் மணிஷ் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாச, அவேஷ் கானின் அடுத்த ஓவரில் பேக்வார்ட் பாயின்ட்டுக்கு மேலே வில்லியம்சன் சிக்ஸர் விரட்டினார். ஹைதராபாத் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால், 16-வது ஓவரை அட்டகாசமாக வீசினார் போல்ட். தன் முதல் இரு ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்திருந்த அவர், தன் மூன்றாவது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை. 18-வது ஓவரில், வழக்கம்போல, மணிஷ் பாண்டே (21 ரன்) தூக்கிக் கொடுத்து அவுட்டானார். யுசுஃப் பதானை மலையென நம்பினர் ஹைதராபாத் ரசிகர்கள். அவரை டக் அவுட்டில் அனுப்பியிருக்கலாம். டீப் ஸ்கொயர் லெக்கில் அவர் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் விஜய் சங்கர். அப்போதே மேட்ச் ஹைதராபாத் பக்கம் வந்துவிட்டது.

பிளெங்கெட் 18-வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே கொடுக்க, டென்ஷனில் நகத்தைக் கடித்துத் துப்பினர் ரசிகர்கள். 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை. போல்ட் வீசிய 19-வது ஓவரில் முதல் பால் சிக்ஸர் அடித்தார் யுசுஃப். அடுத்த பந்தில் எல்பிடள்யு. சன்ரைசர்ஸ் ரிவ்யூ கோரியது. கேன் வில்லியம்சனின் கணிப்பு சரி. யுசுஃப் நாட் அவுட். அடுத்த பந்தில் பேக்வார்ட் பாயின்ட்டில் உருண்டது பவுண்டரி. அடுத்த பந்து வைடு. 19 ஓவர் முடிவில் ஸ்கோர் 153.

கடைசி ஓவர். தேவை: 14 ரன்கள். பெளலர்: பிளெங்கெட்

முதல் பந்து – யுசுஃப் – 2 ரன்

2-வது பந்து - யுசுஃப் – சிக்ஸர்

3-வது பந்து – யுசுஃப் - 4 ரன்

4-வது பந்து – யுசுஃப் - 1 ரன்

5-வது பந்து – வில்லியம்சன் – 1 ரன்

ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. யுசுஃப் 12 பந்துகளில் 27 ரன்களும், வில்லியம்சன் 32 ரன்களும் எடுத்து கடைசிநேரத்தில் வெற்றிக்கு வழிவகுத்தனர். ரஷித் கான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ். பத்தில் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.Trending Articles

Sponsored