`சிக்ஸரே இல்லாத முதல் 13 ஓவர்கள்!’ - 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஹைதராபாத் #SRHvsRCBSponsoredராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Photo Credit: Twitter/ IPL

Sponsored


ஹைதராபாத் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை தவானும், அலெக்ஸ் ஹேல்ஸும் தொடங்கினர். பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சில் ரன் குவிக்கத் தடுமாறிய இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 15ஆக இருந்தபோது பிரிந்தது. டிம் சவுத்தி பந்துவீச்சில் ஸ்டம்பைப் பறிகொடுத்து அலெக்ஸ் ஹேல்ஸ் வெளியேறினார். சிறிதுநேரத்திலேயே தவானும் நடையைக் கட்டினார். முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவர், 13 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த மணீஷ் பாண்டேவும் அதிக நேரம் நிலைக்கவில்லை. 5 ரன்களுடன் அவர் ஆட்டமிழக்க, 8.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களுடன் ஹைதராபாத் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் ஷகிப் அல் ஹசனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன், அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. வில்லியம்ஸன் 56 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 35 ரன்கள்லும் ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் தவிர பின்கள வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. சிறப்பாகப் பந்துவீசிய பெங்களூர் அணி வீரர்கள், கடைசி பந்தில் ஹைதராபாத் அணியை ஆட்டமிழக்கச் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி, 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்தது. ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸில் முதல் 13 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Sponsored
Trending Articles

Sponsored