பாகிஸ்தானை பாடாய்படுத்திய அயர்லாந்து... முதல் டெஸ்ட்டில் இதுதான் நடந்தது!Sponsored2011 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம்... பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 327 ரன்கள் குவித்தது. அயர்லாந்தும் 25 ஓவரில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, தான் ஒரு கத்துக்குட்டி அணி என்பது போலவே ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அணிக்கு ஒரு பாகுபலியாக கெவின் ஓ ப்ரைன் எனும் வீரர் 50 பந்துகளில் சதமடிப்பார். கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியைப் பதிவு செய்யும்.

2015 உலகக் கோப்பையின் `பி’ பிரிவில் 3 வெற்றி 3 தோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது அயர்லாந்து. 2019 உலகக் கோப்பை கனவு சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றுடன் பொய்யானது. ``பெரிய அணிகளை வைத்தே விளையாடுங்கள். அவர்கள் மூலம் பணம் பாருங்கள். நாங்கள் வெறும் பாக்கெட்டுடன் இங்கிருந்து வெளியேறுகிறோம்'' என்று ஐசிசிக்கு எதிரான குரலை அயர்லாந்து கேப்டன் பதிவு செய்தார்.

இப்போது அயர்லாந்துக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் டெஸ்ட் அங்கீகாரம் வழங்கியுள்ளது ஐசிசி. அயர்லாந்து பாகிஸ்தானோடும், ஆஃப்கான் இந்தியாவோடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் என்று அறிவித்தது. இதற்கு பின்னாலும் அரசியல் இருக்குமோ என்பதுதான் சர்வதேசப் போட்டி அட்டவணை கூறும் தகவல். ஆம், அயர்லாந்து தொடருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. அதேபோல் ஆஃப்கான் தொடருக்குப் பின்பு இந்தியாவுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரும்புகின்றன. இதற்கு பயிற்சி ஆட்டம்தானா இந்த டெஸ்ட் போட்டிகள் என்பது விடைதெரியா கேள்வி.

Sponsored


Sponsored


எது எப்படியோ, முதல் டெஸ்ட்டை பாகிஸ்தானுடன் ஆடிவிட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அயர்லாந்து அணியில் 11 பேரில் 10 பேருக்கு இதுதான் முதல்போட்டி. ரான்கின் மட்டும் இங்கிலாந்துக்காக ஒரேயொரு போட்டி ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பீட்டர் சிடில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

முதல்நாள் மழையால் ரத்தானது. இரண்டாவது நாளில் அயர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் திணறியது. 169 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஷகதாப்கான் மற்றும் அஷ்ரஃபின் அரைசதத்தால் 310/9 என்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அயர்லாந்து தரப்பில் முர்தாப், தாம்சன் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரான்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அயர்லாந்து, பேட்டிங்கில் முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றத்துடன் ஆடியது. 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கெவின் ஓ ப்ரையனின் 40, வில்சனின் 33 ரன்கள் என்று 130 ரன்களுக்கு ஆல் -அவுட். ஃபாலோ ஆன் வாங்கி மீண்டும் பேட் செய்தது. அவ்வளவுதான் எளிதில் அயர்லாந்து ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இரண்டாவது இன்னிங்ஸில் இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமாக உருவெடுத்தது. 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், பின்னர் கொஞ்சம் சரிவு. அடுத்து கெவின் ஓ பிரையனின் சதம் என மாஸ் காட்டியது அயர்லாந்து. 339 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பாகிஸ்தானுக்குப் படம் காட்டியது அயர்லாந்து. 200 நிமிடங்கள் ஆடவைத்து 5 விக்கெட்டுகளை இழந்து 5வது நாளில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். 

கெவின் ஓ பிரையன்தான் ஆட்ட நாயகன். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் அடிக்கப்பட்டது என்ற பெருமை வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. `` மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அடித்த சதம்தான் என் வாழ்க்கையின் முக்கியமானது'' என்கிறார் கெவின். 

அயர்லாந்து இனி யாருடனெல்லாம் டெஸ்ட் ஆடும், முன்னணி அணியாக வலம் வருமா? இல்லை வெறும் ஒன்லி டெஸ்ட் ஆடிக்கொண்டிருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை என வரிசையாகக் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் கெத்துக் காட்டியிருக்கிறது அயர்லாந்து. இப்போது ஐசிசி எனும் பேட்டைக்காரனுக்கு அறிமுக டெஸ்ட் மூலம் சொல்லியிருக்கும் பதில் ``அண்ணே! என் சேவப் பந்தயம் அடிக்கும்ணேங்கறது'' தான்.

ஆட்டத்தில் தோற்றாலும் சிறப்பான பந்துவீச்சு, பேட்டிங் என அறிமுக டெஸ்ட்டில் அதிரடி காட்டிய அயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்றது. வாழ்த்துகள் அயர்லாந்து!Trending Articles

Sponsored