பொலார்டுக்குப் போட்டுக்கொடுத்த பஞ்சாப்... பும்ராவுக்கு பயந்த பேட்ஸ்மேன்... மும்பை சலோ! #MIvKIXPSponsoredசெம ஈஸியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்க வேண்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பையை முன்னால் விட்டுவிட்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பஞ்சாபின் பெளலர்கள் 71 ரன்களுக்குள் மும்பையின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தும், சேஸிங்கில் ராகுல் 94 ரன்கள் அடித்தும், மும்பையை வெற்றிபெற வைத்திருக்கிறது அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்! #MIvKIXP

2018 - ஐபிஎல் சீசனின் பாதிப் போட்டிகள், அதாவது 7 போட்டிகள் எல்லா அணிகளும் ஆடி முடித்தபோது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். முதல் ஆறு போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருந்தது பஞ்சாப். முதல் ரவுண்டில் வெற்றி தந்த உற்சாகமா அல்லது ஓவர் கான்ஃபிடன்ஸா எனத் தெரியாது, இரண்டாவது ஹாஃபில் தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்திருக்கிறது பஞ்சாப்.

Sponsored


மும்பை என்பது பேட்டிங் பிட்ச் என்பதால் டாஸை வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் பஞ்சாப் கேப்டன் அஷ்வின். ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே மும்பை அணியில் இருக்கும் பொலார்டை, கடைசியாக நடந்த போட்டிகளில் பெஞ்சில் உட்காரவைத்த  மும்பை நிர்வாகம், இந்தப் போட்டியில் ஜேபி டுமினிக்குப் பதிலாக பொலார்டை அணிக்குள் அழைத்துவந்தது. பஞ்சாபின் மாயாஜால ஸ்பின்னர் முஜீப் இன்னும் காயத்திலிருந்து குணமடையாததால் அவர் அணியில் இடம்பெறவில்லை. மாயங்க் அகர்வால், கருண் நாயருக்குப் பதிலாக யுவராஜ் சிங், மனோஜ் திவாரி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.

Sponsored


சொதப்பிய டாப் ஆர்டர்!

லூயிஸ், சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் இறங்க, அங்கித் ராஜ்புத் முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு ஓவர்களில் மும்பை 9 ரன்கள் மட்டுமே அடிக்க, அங்கித் வீசிய மூன்றாவது ஓவரில் பவுண்டரிகள் பறந்தது. இந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் அடித்தது மும்பை. ஆனால், அடுத்த ஓவரிலேயே பெளலிங் சேஞ்ச் கொண்டுவந்தார் அஷ்வின். ஆண்ட்ரு டை வீசிய முதல் பந்திலேயே லூயிஸ் காலி. ஐந்தாவது ஓவர் மீண்டும் மொஹித் ஷர்மாவின் கையில் வந்தது. இந்த முறை இஷான் கிஷன். 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். பவர் ப்ளேவின் கடைசி ஓவர் மீண்டும் ஆண்ட்ரு டையிடம் வந்தது. அடுத்தடுத்த பந்துகளில் இஷான் கிஷன், சூர்யகுமார் இருவரையும் அவுட்டாக்கினார் டை. பவர் ப்ளே முடிவில்மும்பையின் ஸ்கோர் 60/3.

ஹிட்மேனுக்குக் கட்டம் சரியில்லை!

தொடர்ந்து அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சோகம் இந்த மேட்ச்சிலும் தொடர்ந்தது. ராஜ்புத் வீசிய பந்தில் யுவராஜ் சிங்கிடம் சிம்பிள் கேட்ச் கொடுத்து 6 ரன்களுக்கு அவுட்டானார் ரோஹிட் மேன். கீரோன் பொலார்டு கிரீஸுக்குள் வந்தார்!

அஷ்வினின் கேப்டன்ஸி கோல்மால்!

இந்த மேட்ச்சில் 8-வது ஓவரை வீசினார் கேப்டன் அஷ்வின். விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரில் ரோஹித் அவுட். இந்த சீசன் முழுவதுமே எந்த மேட்ச்சிலும் ரன்கள் அடிக்காத, அவுட் ஆஃப் ஃபார்மில் மட்டுமல்ல, கடந்த சில போட்டிகளாக பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட பொலார்டு களத்துக்குள் வருகிறார். இந்த நேரத்தில் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வாரோ அதை செய்யத் தவறினார் அஷ்வின்.

நம்பிக்கையை இழந்திருந்த பொலார்டுக்கு ஸ்லிப், ஷார்ட் மிட் விக்கெட், சில்லி பாயின்ட், கல்லி என ஃபீல்டர்களை அருகில் நிறுத்தி இருக்கலாம்; பொலார்டு சுழற்பந்தில் திணறுவார் என்பதால் அஷ்வினே பந்துவீசி கூடுதல் பிரஷர் கொடுத்து அவுட்டாக்கியிருக்கலாம். ஆனால், அஷ்வின் அசால்ட்டாக வாய்ப்பை நழுவவிட்டார். பொலார்டு களத்துக்குள் வந்ததும் ஸ்டாய்னிஸுக்கும், அக்ஸர் பட்டேலுக்கும் ஓவர்கள் கொடுத்தார். அட்டாக்கிங் ஃபீல்டிங் பொசிஷன் எதுவுமே இல்லை. இரண்டு ஓவர்களில் சிங்கிள் மட்டுமே அடித்து பொலார்டும், க்ருணால் பாண்டியாவும் செட் ஆனார்கள்.

கான்ஃபிடன்ஸ் வந்தபிறகு பாண்டியாவும், பொலார்டும் அடிக்க ஆரம்பித்தார்கள். ஸ்டாய்னிஸின் 12-வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் பாண்டியா. மிடில் ஓவர்கள் முழுக்கவே பெளலிங் ரொட்டேஷனில் மிஸ் செய்தார் அஷ்வின். தன்னைத் தானே டெத் ஓவர் பெளலராக நினைத்துக்கொண்ட அஷ்வின், அந்த பெளலிங் ரொட்டேஷனையும் சரியாகச் செய்யவில்லை.

ஸ்டாய்னிஸ் வீசிய 15-வது ஓவரில் க்ருணால் பாண்டியா அவுட். ஆனால், பொலார்டு  பெளலர்களை வெளுக்க ஆரம்பித்தார். 4,4,6... என பொலார்டு 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ``நான் வந்துட்டேன்டா'' எனக் கொக்கரித்தார்.

8-வது ஓவரிலிருந்து அடுத்த 7 ஓவர்கள் வரை பந்து வீசாத அஷ்வின், 16-வது ஓவரை வீச வந்தார். வந்ததுமே பொலார்டு விக்கெட் விழுந்தது. ஆனால், அதற்குள் 50 ரன்கள் அடித்து, மும்பையை பேட்டிங் சரிவிலிருந்து மீட்டுவிட்டார் பொலார்டு. மீண்டும் 18-வது ஓவரில் அஷ்வினுக்கு பென் கட்டிங் விக்கெட் கிடைத்தது. 19-வது ஓவரை ஆண்ட்ரு டை வீசினார். இந்த ஓவரிலும் 1 விக்கெட் என மொத்தம் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் டை. கடைசி ஓவரை அஷ்வின் வீசுவார் என எல்லோரும் எதிர்பார்க்க, வேகப்பந்து வீச்சாளரான மொஹித் ஷர்மாவிடம் ஓவரை கொடுத்தார் அஷ்வின். 

டெய்லெண்டர் களத்தில் இருக்க, கடைசி ஓவரில் 1வைடு 1 நோ பால் என 11 ரன்கள் கொடுத்தார் மொஹித் ஷர்மா. இந்தக் கடைசி ஓவர் 11 ரன்கள்தாம் பஞ்சாபுக்கு வேட்டுவைத்தது! 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் அடித்தது மும்பை. 

சூப்பர் ஓப்பனிங்!

முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து சேஸிங்கைச் சிறப்பாகத் தொடங்கிவைத்தார் கே.எல் ராகுல். ஹர்திக் பாண்டியாவின் மூன்றாவது ஓவரை கெய்ல், ராகுல் என இருவருமே அடித்து விளையாடினர். கெய்ல் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க, ராகுல் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் 19 ரன்கள் அடித்தது. நான்காவது ஓவருக்கு மெக்ளீனிகன் வந்தார். பவுன்ஸர்கள்தாம் கெயிலை வீழ்த்தும் ஆயுதம் என்பதால் தொடர்ந்து பவுன்ஸர்களை வீசினார் மெக்ளீனிகன். செம ஸ்ட்ரேட்டஜி. கெய்ல் ஒரு பவுன்ஸரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார் கெய்ல்.

கே.எல் ராகுல் - ஆரோன் ஃபின்ச் எனப் பிரமாதமான கூட்டணி. மோசமான பந்துகளை மட்டுமே அடித்து ஆடி இருவருமே சிறப்பான பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினர். 10 ஓவர் முடிவில் 86 ரன்கள் அடித்து, 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது பஞ்சாப். விக்கெட்டுகள் இருப்பதால் அடுத்த 10 ஓவர்களில் 101 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற அடிக்கக்கூடிய டார்கெட்தான் என்பதால் பஞ்சாப் வலுவாகவே இருந்தது. 

ஆனால், பும்ராவின் ஓவர்களை ராகுல், ஃபின்ச் இருவராலுமே அடிக்க முடியவில்லை. ஆக்ஸலரேட் செய்ய வேண்டிய நேரத்தில் பும்ராவின் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது பேட்டிங் கூட்டணி. இதனால் அடிக்கவேண்டிய ரன்ரேட் கூடிக்கொண்டே போனது. 15 ஓவர்கள் முடிந்துவிட்டது. விக்கெட் விழவில்லை என்றாலும் ரன்ரேட் கூடவில்லை. கடைசி 30 பந்துகளில் 60 ரன்கள் தேவை, ஓர் ஓவருக்குக் குறைந்தபட்சம் 12 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது கேஎல் ராகுல்- ஃபின்ச் பார்ட்னர்ஷிப். மார்க்கண்டே வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து பஞ்சாபின் பிரஷரைக் குறைத்தார் ராகுல். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. 

பும்ரா வீசிய 17-வது ஓவர்தான் பஞ்சாபை மொத்தமாகக் கவிழ்த்தது. 46 ரன்களில் ஃபின்ச் அவுட்டாக, இதே ஓவரின் முடிவில் ஸ்டாய்னிஸும் அவுட்டானார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது பஞ்சாப். இங்குதான் இன்னொரு கேப்டன்ஸி சொதப்பல். யுவராஜ் சிங் என்னும் பேட்ஸ்மேனை அணிக்குள் எடுத்துவிட்டு, முக்கியமான தருணத்தில் அவரை இறக்காமல் பெளலரான அக்ஸர் பட்டேலை இறக்கியது பஞ்சாப். யுவராஜ் சிங் வந்திருந்தால் அவர் செட்டாக நான்கைந்து பந்துகள் கிடைத்திருக்கும். அதன்பிறகு அவர் அடிக்க ஆரம்பித்திருப்பார். ஆனால், இது நடக்கவில்லை. 

18-வது ஓவரை பென் கட்டிங் வீசினார். ஃபுல் ஃபார்மில் இருந்த ராகுல் இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். ஸ்கோர் 164 ரன்களைத் தொட்டது. கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை. 19-வது ஓவர் பும்ராவின் ஓவர். அடிக்க ஆசைப்பட்டார் ராகுல். ஆனால், பந்து பேட்டிலேயே மீட் ஆகவில்லை. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து 94 ரன்களில் அவுட்டானார் ராகுல். இவர் இதை 60 பந்துகளில் அடித்திருந்தார். கடைசி 9 பந்துகள், 20 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற எக்ஸ்ட்ரா பிரஷரில் விளையாட வந்தார் யுவராஜ் சிங். இந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிங்கிள்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்கவேண்டும். மெக்ளீனிகனை கொண்டுவந்தார் ரோஹித் ஷர்மா. முதல் பந்தில் அக்ஸர் பட்டேல் சிங்கிள் அடித்துவிட, யுவராஜ் சிங் பேட்டிங். அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் போட்டார் மெக்ளீனிகன். செம ஈஸியாக பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ அடிக்கக்கூடிய இந்தப் பந்தை அடிக்காமல் கோட்டைவிட்டார் யுவராஜ் சிங். மூன்றாவது பந்து வைடு. எக்ஸ்ட்ரா டெலிவரி கிடைக்கிறது. லைன் அண்ட் லென்த்தை மாற்றாமல் மீண்டும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை வீசுகிறார் மெக்ளீனிகன். தூக்கி அடித்திருக்க வேண்டிய பந்தை எக்ஸ்ட்ரா கவரில் இருந்த ஃபீல்டருக்குக் கொடுத்தார் யுவராஜ் சிங். 3 பந்துகளைச் சந்தித்து 1 ரன் மட்டுமே அடித்து பரிதாபமாக வெளியேறினார் யுவராஜ். அநேகமாக இதுதான் கிரிக்கெட்டில் இவரது கடைசி இன்னிங்ஸாக இருக்கும்.

கடைசி மூன்று பந்துகளில் 1 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அடித்து ஆறுதல் அடைந்தனர் பட்டேலும் திவாரியும். மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பஞ்சாப். கையில் இருந்த மேட்சை பஞ்சாப் நழுவவிட்டது போல் இருந்தது.

இனி எதுவும் நடக்கும்! Trending Articles

Sponsored