டி வில்லியர்ஸின் ஸ்டன்னிங் கேட்ச், மிரட்டல் பேட்டிங்... கோலி செம ஹேப்பி! #RCBvSRHSponsoredபெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது. அங்கு 200 ரன்கள் அடிப்பது பெரிய விஷயேமே இல்லை. ஆனால், இந்த சீசனின் பெஸ்ட் பெளலிங் என வர்ணிக்கப்பட்ட ஹைதராபாத்துக்கு எதிராக 218 ரன்கள் அடித்தது பாராட்டுக்குரியது. தேங்ஸ் டு ஏபிடி- மொயின் அலி. ஆனால், 218 ரன்கள் எடுத்தும்  அதை டிஃபண்ட் செய்யத் தடுமாறியதற்காக ஆர்.சி.பி-க்கு ஒரு கொட்டு. எப்படியோ, ஆர்.சி.பி-யின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் கலையவில்லை. 

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 

Sponsored


வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெங்களூரு பிளேயிங் லெவனை மாற்றவில்லை. புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக கேரளாவைச் சேர்ந்த பசில் தம்பி வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரிலேயே திருப்புமுனை. முதல் பந்திலேயே ஹைதராபாத்துக்கு ஒரு வாய்ப்பு. தீபக் ஹூடா அதைப் பயன்படுத்தவில்லை. பார்த்திவ் பட்டேல் கண்டம் தப்பினார். ஸ்ட்ரைக் வந்த முதல் பந்திலேயே கோலி தன் ஸ்டைலில் ஸ்ட்ரெய்ட் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார். சன்ரைசர்ஸ் கொடுத்த சான்ஸை பயன்படுத்ததத் தவறி, கடைசி பந்தில் வெளியேறினார் பார்த்திவ். ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் அடுத்து, கோலி – டி வில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப்பை நினைத்து பூரிப்படைந்தனர் ஆர்சிபியன்ஸ். அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஷித் கான் வீசிய கூக்ளியை ஸ்லாக் ஸ்வீப் அடிக்கிறேன் போல்டானார் விராட் (12).

Sponsored


ஏலியன் ஏபிடி!

சந்திக்கும் முதல் பந்திலிருந்தே பெளலர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் வல்லவர் ஏபிடி.ஷகிப் அல் ஹசன் அந்த பிரஷ்ஷரை உணர்ந்தார். முதல் பந்திலேயே ஃபிரன்ட் ஃபுட்டில் போக்குகாட்டி, பேக் ஃபுட்டில் அழுத்தம் கொடுத்து ஒரு கட். எந்த ஃபீல்டருக்கும் வசப்பாடமல் பந்து பவுண்டரிக்குச் சென்றது. அடுத்த பந்து, இன் சைட் அவுட். அதுவும் பவுண்டரி. டி வில்லியர்ஸ் பேட்டிங்செய்யும்போது எட்ஜ், மிஸ்ஹிட்டைப் பார்ப்பது அரிது. டைமிங், ஃபுட் வொர்க், ஷாட் செலக்ஷன் எல்லாமே பக்காவாக இருக்கும். ஷகிப் பந்தில் விராட் மிஸ் செய்த ஸ்லாக் ஸ்வீப்பை, ஏபிடி அழகாக பவுண்டரிக்கு அனுப்பி இருந்தார். சித்தார்த் கவுல் பந்தில் லாங் ஆனில் பறந்த பவுண்டரி பெர்ஃபெக்ட் கிரிக்கெட் ஷாட். 

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 


மொயின் அலியை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த இந்த ஏலியன், பசில் தம்பி பந்தில் டீப் மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தபோது, விராட் கோலி தானே 50 அடித்தது போல உணர்ந்தார். `என்னடா இன்னும் சிக்ஸே அடிக்கலையே...!’  என எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீனியாக, பசில் தம்பி பந்தில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் டி வில்லியர்ஸ். ஃபுல் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் நோக்கி வரும் பந்தையே ஸ்லாக் ஸ்வீப் செய்வார். அவருக்கு லோ ஃபுல்டாஸ் போட்டால் விடுவாரா? அதுவும் தன் டிரேட்மார்க் ஸ்டைலில் ஸ்டம்புக்கு வலதுபுறம் ஒதுங்கி, மண்டி போட்டு ஒரு இழுப்பு. கமென்டேட்டர்கள் Marvelous என கர்ஜித்தனர். ரசிகர்கள் ஏபிடி ஏபிடி ஏபிடி என குதூகலித்தனர்! 

எல்லோரும் டி வில்லியர்ஸ் அடிப்பார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மொயின் அலி அமர்க்களப்படுத்தினார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் பெஞ்ச்சில் இருந்தவர், எல்லாவற்றுக்கும் சேர்த்து நேற்று பிரித்து மேய்ந்துவிட்டார். டி வில்லியர்ஸுக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொண்டார். பசில் தம்பி பந்தில் சிரமமே இல்லாமல் பேக் டு பேக் சிக்ஸர் அடித்தவர், சந்தீப் ஷர்மா பந்தில் லாங் ஆனில் தூக்கி அடித்ததை ஷிகர் தவன் பிடித்துவிட்டார். ஆனாலும், அது சிக்ஸர். 

இவை எல்லாவற்றையும்விட ரஷித் கான் பந்தில் டவுன் தி லைன் வந்து மிட் ஆஃபில் அடித்த சிக்ஸர்தான் அல்டிமேட். மொயின் அலி நேற்று சப்போர்ட்டிங் ரோலை செவ்வனே செய்தார். அரைசதம் கடந்தார். பொல்லார்டை பஞ்சாப் ஃபார்முக்கு கொண்டுவந்ததுபோல, மொயின் அலிக்கு சன்ரைசர்ஸ் பெளலர்கள் நம்பிக்கை கொடுத்தனர். ஏபிடி - மொயின் அலி ஜோடி மிடில் ஓவர்களில் டெத் ஓவர் ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி 57 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆர்.சி.பி.யின் ரன்ரேட் எந்த இடத்திலும் பத்துக்கு குறையவே இல்லை. போதாக்குறைக்கு கிரந்தோம் 4 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 40 ரன்கள் விளாச, சர்ஃப்ராஸ் கானும் 8 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். முடிவில் ஆர்.சி.பி 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

Tampi top scorers for RCB as ABD and Moeen Ali Play the supporting roles... இது புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக களமிறங்கி, 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 70 ரன்கள் கொடுத்த பசில் தம்பியின் பெளலிங்கை மெச்சி சமூகவலைதளத்தில் போட்டப்பட்ட பதிவு. தம்பியை களமிறக்கியதற்கு ஹைதராபாத்துக்கு கிடைத்த சன்மானம். 

செகண்ட் இன்னிங்ஸில்...  `218 ரன்களை ஈஸியா டிஃபண்ட் பண்ணலாம்’ என கெத்தாக களமிறங்கியது ஆர்சிபி. சின்னசாமி மைதானத்துக்கும் ஷிகர் தவனுக்கும் அப்படி ஒரு ராசி. அதனால இன்னிக்கும் அவர்தான் அடிப்பார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் வேகமெடுத்தார். ஆனால், அவர் ஒருமுறை கண்டம் தப்பினார். அதுதான் இந்த மேட்ச்சின் உச்சபட்ச டிராமா!

வர்ணனையாளர்/விமர்சகர் ஹர்ஷா போக்ளே கிண்டல் பேர்வழி. அவரின் விமர்சனம் மெல்லிய காது திருகலாக இருக்கும். குற்றச்சாட்டை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதைப் போல குத்திக்காட்டும் அவர், போட்டியைத் தொடங்குவதற்காக அம்பயர்கள் நடந்து வரும்போதே இப்படிச் சொன்னார், ``ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொள்கிறேன் இது அம்பயர்களுக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று....’’ இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த சீசன் முழுவதுமே அம்பயரிங் லட்சணம் அப்படி!

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 


உமேஷ் யாதவ் பந்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த புல் ஷாட்டை டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்த டிம் செளதி அருமையாக கேட்ச் பிடித்தார். ஏனோ, களத்தில் இருந்த நடுவர்களுக்கு அதில் சந்தேகம். பந்து தரையில் பட்டதா என தேர்ட் அம்பயரிடம் கேட்கின்றனர். அதற்கான அவசியமும் இல்லை என்பது வேறு விஷயம். ஏகப்பட்ட கோணங்களில் Replay பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறார், ஸாரி, முட்டாள்தனமான முடிவுக்கு வருகிறார் தேர்ட் அம்பயர் சம்சுதின். நாட் அவுட். டிம் செளதியால் நம்பமுடியவில்லை. கோலியால் நம்பமுடியவில்லை. `நல்லா தெரியுது இது கேட்ச்டா…’ என கதறுகிறார்கள் ரசிகர்கள். ``Someone who has played the game knows it’s clearly out’’ என ஒரே போடாகப்போட்டு விட்டார் மைக்கேல் கிளார்க். ஹர்ஷா போக்ளே கெக்கெபெக்கேவென சிரிக்கிறார். அம்பயரிங் லட்சணத்தைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரித்தது. Please BCCI Have a look on it ASAP.

தவன் - ஹேல்ஸ் ஜோடியை வேகப்பந்துவீச்சாளர்களால் பிரிக்கமுடியவில்லை. சாஹலிடம் பந்தைக் கொடுத்தார் கோலி. தவன் அவுட் (18). வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ஹேல்ஸ் மறுபுறம் வேகமெடுத்தார். அவரை ஒரு அட்டகாசமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் டி வில்லியர்ஸ். வெறுமனே அட்டகாசமான கேட்ச் என அதைக் கடந்துவிட முடியாது. கிட்டத்தட்ட சிக்ஸ் போனதாகவே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாய்ந்து வந்த, ஸாரி, பறந்து வந்த டி வில்லியர்ஸ், அந்தரத்தில் மிதந்தபடியே பவுண்டரி லைனுக்கு அப்பால் சென்ற பந்தை வலது கையில் பிடித்தார். எப்போதுமே டி வில்லியர்ஸ்  கேட்ச் பிடிப்பதைவிட, பந்தைப் பிடித்துவிட்டு பேலன்ஸ் செய்யும்விதம்தான் அழகு. ஹேல்ஸ் கேட்ச்சைப் பிடித்தபோதும் அப்படித்தான். கேட்ச் பிடித்துவிட்டு உடம்பு கீழிறங்கும்போது ஒட்டுமொத்த பலத்தையும் வலதுகாலில் நிறுத்தி, தடுமாறாமல், கீழே விழாமல் ஜஸ்ட் லைக் தட் என ஓடிவந்தார். பெங்களூரு மைதானமே விக்கித்து நின்றது. ஏதோ ஒரு மூலையில் இருந்து டி வில்லியர்ஸை கட்டியணைக்க ஓடோடி வந்தார் கோலி.

கேட்ச் அல்ல மேஜிக் அது! பேஸ்கட்பால் பிளேயர்கள் போல இருந்த இடத்தில் இருந்தே அட்டகாசமான ஜம்ப். அடுத்து கேட்ச். அடுத்து பேலன்ஸ் மிஸ்ஸாகாமல் லேண்டிங் என ஒரு கேட்ச்சில் எத்தனை எத்தனை வித்தைகளைப் புகுத்தி விட்டார். அதனால்தான் அவரை சூப்பர்மேன் என்றும் ஏலியன் என்றும் அழைக்கின்றோம். தவிர, நேற்று ஈஸியான கேட்ச்களை மிஸ் செய்த விராட் கோலி, வில்லியம்சன், ஷிகர் தவனுக்கு  `கேட்ச்னா இப்படி பிடிக்கணும்’ என பாடம் எடுக்கும் வகையில் இருந்தது அந்த கேட்ச்.  

வில்லியம்சன் மாஸ்டர் 

வார்னர் இல்லாத சுவடே இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் கேன் வில்லியம்சன். தேவையான நேரத்தில் கேப்டன் இன்னிங்ஸ் ஆடவும் அவர் தவறியதில்லை. டார்கெட் அதிகம் என்பதால் முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பித்தார். ஹேல்ஸ் அவுட்டானபின், சந்தித்த ஆறில் ஐந்து பந்துகளை (4,4,1,4,4,6 ) பவுண்டரிக்கு அனுப்பியிருந்தார். 28 பந்துகளில் அரைசதம் அடித்தபின், உமேஷ், கிரந்தோம், சிராஜ் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோர் பந்திலும் அடித்து வெளுக்க, வெற்றி சன்ரைசர்ஸ் பக்கம் வந்தது. 

ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மணீஷ் பாண்டேவுக்கு பூஸ்ட் அப் கொடுத்தார் 15-வது ஓவரை வீசிய கிரந்தோம். அந்த ஓவரில் வில்லியம்சன் - பாண்டே இருவரும் வெச்சு செய்ய, 22 ரன்கள் கிடைத்தது. ஆட்டத்தின் போக்கும் மாறியது. ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற சூழல். டிம் செளதி வீசிய 19-வது ஓவரில் மணீஷ் 3 பவுண்டரி அடித்தார். ஆனாலும், முக்கியமான கட்டத்தில் ஃபார்மில் இருந்த வில்லியம்சனுக்கு ஸ்ட்ரைக் தராமல், தடவிக்கொண்டிருந்தார் மணீஷ். 17.4 - 19.1 ஓவர் இடைவெளியில் வில்லியம்சன் சந்தித்தது இரண்டு பந்துகள் மட்டுமே. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றபோது, முதல் பந்திலேயே அவுட்டானார் வில்லியம்சன் (81 ரன், 42 பந்து).  தீபக் ஹூடா, மணீஷ் இருவராலும் அடுத்த 5 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆர்.சி.பி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஏபிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.Trending Articles

Sponsored