பெங்களூரு... 2019-ல் இதயத்துக்குப் பதில் கோப்பை வெல்ல வாழ்த்துகள்! #RRvRCBSponsoredஒவ்வொரு முறையும் இது சிறப்பான அணியாகத்தானே இருக்கிறது. ஏன் இது கோப்பை வெல்வதில்லை என தோன்றுவதுண்டு. அதை இந்த முறையும் நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ். இந்தத் தொடரில் கோலி, ஏ பி டி விக்கெட்டுக்கள் விழுந்தால், டிவியை அணைத்து விடலாம் என்கிற நிலையில் இருந்தது அவர்களது பெர்பாமன்ஸ். முதல் முறையாக பவுலிங்கில் சற்று ஷார்ப்பாகி இருந்தது பெங்களூரு அவ்வளவு தான், இந்தத் தொடருக்கான பாசிட்டிவ்.  #RRvRCB

பிளே ஆஃபுக்கு முன்னேறும் வாய்ப்பான நேற்றைய போட்டியில், பெங்களூரூ எங்கே சொதப்பியது என பார்ப்போம். டாஸ் வென்ற ராஜஸ்தான், அதிக ரன்களை குவிக்கும் நோக்கத்துடன் பேட்டிங் தேர்வு செய்தது. முதல்முறையாக பட்லர், பென் ஸ்டோக்ஸ் இல்லாத ராஜஸ்தான். இருவரையும் டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணி அழைக்க, லாலின், கிளார்ஸன் மாற்று வீரர்களாக களமிறங்கினர். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

Sponsored


ராகுல் திரிபாதியுடன் பட்லருக்கு பதிலாக பரிசோதனை முயற்சியாக ஆர்ச்சர் ஓப்பனிங் பிளேயராக களமிறக்கினார் ரஹானே. அதற்கு 'நல்ல பலன்' கிடைத்தது. ஆம், ஆட்டத்தின் இரண்டவது ஓவரிலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார் ரஹானே. அதிர்ஷடவசமாக திரிபாதி அதிரடி மோடுக்கு மாறியிருந்தார். பவர்பிளே முடிவில் 45 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். 

Sponsored


ஒன்பது விக்கெட் கையில் இருக்கிறது. எதிர்த்து ஆடிக்கொண்டிருப்பது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரூ. ஆனால், அதைப்பற்றிய யாதொரு கவலையும் இல்லாமல், ஆடிக்கொண்டிருந்தார் ரஹானே. இந்த ஐபிஎல் தொடரில், முதல் நான்கு இடங்களுக்குள் களமிறங்கும் வீரர்களில் ரஹானே அளவுக்கு மோசமான ஸ்டிரைக் ரேட் (119.11)  வைத்திருக்கும் வீரர் எவரும் இல்லை. ஒருவழியாய் ரஹானேவை LBW முறையில் அவுட் செய்தார் உமேஷ் யாதவ் 33 (31b 3x4 0x6) SR: 106.45 . 'அப்பாடா' என ஆர்வமாக மேட்ச் பார்க்க ஆரம்பித்த ராஜஸ்தான் ராயஸுக்கு அடுத்த பந்திலேயே செக் வைத்தார் உமேஷ். ஏற்கெனவே நிறைய பந்துகளை வீணடித்துவிட்டதால், முதல் பந்தையே அடித்து ஆட, ஆசைப்பட்டார் சஞ்சு சாம்சன். மொயின் அலியிடம் கேட் கொடுத்து, கோல்டன் டக் எடுத்தார் சஞ்சு. 

இறுதியாக கிளார்சன் 32 (21b 3x4 1x6) SR: 152.38 , கௌதமின்  14 (5b 0x4 2x6) SR: 280.00 அதிரடி ஆட்டத்தால், 164 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ராகுல் திரிபாதி 58 பந்துகளில், 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

15.5 ஓவர்களில் ராஜஸ்தானின் டார்கெட் சேஸ் செய்தால், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்கிற நிலை ராயல் சாலஞ்சர்ஸுக்கு.' பேட்டிங்கில் தான் டக் அவுட் , பவுலிங்கில் ஆவது ஏதாவது செய்' என இரண்டாவது ஓவரை வீச ஆர்ச்சரை அழைத்தார் ரஹானே. பார்த்தீவ் அந்த ஓவரில் இரு சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த கௌதம், தன் இரண்டாவது ஓவரை வீசினார். சும்மாவே சொதப்பும் ராயல் சாலஞ்சர்ஸுக்கு, இந்த 15.5 ஓவர் டார்கெட் எல்லாம் இன்னும் பிரஷரை ஏற்றியது. அடித்து ஆட முற்பட்ட கோலி, கௌதமின் பந்தில் ஸ்டம்புகள் சிதற போல்ட் ஆனார். ஆர்ச்சரின் பந்தில் மூன்று பவுண்டரி அடித்து, டார்கெட் நோக்கி விரைந்தார் ஏபிடி. 

'அங்கிட்டு உமேஷின் ஒரே ஓவரில் ரெண்டு விக்கெட்னா, இங்கிட்டு கோபாலின் ஓரே ஓவரில் ரெண்டு விக்கெட் ' என ஸ்கிரிப்ட் எழுதி இருப்பார்கள் போல. ஒரே ஓவரில் பார்த்திவ் பட்டேல், மொயின் அலி இருவரையும் காலி செய்தார் கோபால். வழக்கம் போல், மந்தீப் சிங், கிராண்ட் ஹோம் தங்கள் வேலையை செய்ய (அதான் பாஸ் அவுட் ), ஏபிடி மறுமுனையில் அரைசதம் கடந்தார். இந்த சீசனில் ஏபிடியின் ஆறாவது அரைசதம் இது. இறுதியாக, கோபால் பந்தில் ஏபிடியும் ஸ்தம்பிங் முறையில் அவுட்டாக, அப்புறமென்ன வழக்கம் போல், ' மௌக்கா மௌக்கா ' மோடுக்கு சென்றது ராயல் சாலஞ்சர்ஸ்.  4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார் ஸ்ரேயாஸ் கோபால் தன்னை அணியில் எடுக்காத கர்நாடக அணியை வைத்து செய்திருக்கிறார் கர்நாடகாவின் ஸ்ரேயாஸ் கோபால் என்று தான் தோன்றியது. 

ஏபிடி அவுட்டானதும் போட்டி முடிந்துவிட்டதா என்ன என்கிறீர்களா? . கோலி, ஏபிடி இருவரும் அவுட்டானால், அவர்களை அப்படியே பின் தொடர்ந்து அவுட் ஆவது தான் பெங்களூரு ஸ்டைல். அந்த அணியின் செல்லப்பிள்ளை சர்ஃபாஸ் கான், லாலின் பந்தில் அவுட். அடுத்த பந்திலேயே உமேஷ் யாதவும் அவுட். 50 ரன் அடித்த ஏபிடி தவறான ஷாட் மூலம் அவுட் ஆனால்கூட, சரி பரவாயில்லை என விடலாம். ஆனால், அதையே மற்றவர்களும் ஃபாலோ செய்வதெல்லாம் அபத்தம். அதுவும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு போட்டியில். சரி, அது தானே ராயல் சாலஞ்சர்ஸ். இதயத்துக்காக விளையாடும் அணி, கொஞ்சமேனும் சாமர்த்தியத்தோடும் விளையாடலாம். அடுத்த தொடரிலாவது கோப்பை வெல்ல வாழ்த்துக்கள். 

போட்டியில் வெற்றி பெற்றாலும், இன்றைய போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். 
டெல்லிக்கு எதிரான போட்டியில், மும்பையும், சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாபும் தோற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃபுக்கு முன்னேறலாம்.  
 Trending Articles

Sponsored