இனியஸ்டா = மெஜிஷியன்... கால்பந்து அரங்கில் மேஜிக் செய்த வித்தகன்! #InfiniteIniestaSponsoredயிரம்பேர் கூடியிருக்கும் ஓர் அரங்கில், இரண்டாயிரம் கண்கள் மையம் கொண்டிருக்கும் ஒரு மேடையில் நிற்கிறான் அவன். அந்த ஆயிரம் பேரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்து, அவர்களின் பாராட்டைப் பெறவேண்டும். அதற்கு அவன் அவர்களை ஏமாற்றவேண்டும். அவர்களின் கண்களை ஏமாற்றவேண்டும். அதுவும் இமைக்கா நொடிகளில்! அதைச் செயல்படுத்தினால்தான் அவன் மெஜிஷியன். மேடையில் நிற்பவர்களுக்கெல்லாம் அந்தக் கலை வாய்த்திடாது. தன்னை, தன் உடலை, அறிவை, தான் நிற்கும் இடத்தை, தன்னைப் பார்க்கும் மனிதர்களின் உளவியலை... அனைத்தையும் அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் அவன் ஒருமுறையாவது அவர்களை ஏமாற்ற முடியும்.

ஆனால், ஸ்பெயினின் சிறு நகரத்தில் பிறந்த மாயக்காரன் ஒருவன் இருக்கிறான். ஒரு லட்சம்பேர் கூடியிருக்கும் அரங்கில், இரண்டு லட்சம் கண்களை... 22 கால்களை... 22 ஆண்டுகளாக ஏமாற்றி மாயவித்தை செய்தவன்... அதுவும் மாயக்கோல்கள் கொண்ட மந்திரவாதிகள் பெரிதும் பயன்படுத்தாத கால்களைக் கொண்டு பல வித்தைகள் செய்தவன்... கால்பந்து உலகின் ஆகச்சிறந்த மிட்ஃபீல்டர்...மெஜிஷியன்... ஆண்ட்ரே இனியஸ்டா!

Sponsored


இந்த லா லிகா சீசனின் கடைசிப் போட்டி... கேம்ப் நூ அரங்கில் ரியல் சோஷிடாட் அணியை எதிர்கொள்கிறது சாம்பியன் பார்சிலோனா. ​81-வது நிமிடம்... ஒரு விசில்... ஆட்டம் நிற்கிறது... கேம்ப் நூ மைதானத்திலிருந்த ஒருலட்சம் பேரும் இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பரிக்கிறார்கள். பார்சிலோனா அணியின் கேப்டன் இனியஸ்டா தன் `கேப்டன் ஆர்ம் பேண்டை'க் கழட்டிவிட்டு வெளியேற ஆயத்தமாகிறார். அந்தக் கோடுகளைத் தாண்டினால் `முன்னாள் பார்சிலோனா வீரர்'.  22 ஆண்டுகாலத் தொடர்பு முடியப்போகிறது. தன் அணியின் மீதான காதல் கண்களின் ஓரம் வழிகிறது. அதே ஈரம் அந்த மைதானத்திலிருந்த ஒரு லட்சம் பேரின் கண்களிலும்கூட! எத்தனை கோப்பைகள்... எத்தனை வெற்றிகள்... எத்தனை கோல்கள்... அதையெல்லாம்விட எத்தனை எத்தனை நினைவுகள்..!  பார்சிலோனா மட்டுமல்ல... மொத்தக் கால்பந்து உலகமும் இனியஸ்டாவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். செல்சீ அணிக்கெதிராக ஸ்டாப்பேஜ் டைமில் அடித்த அந்தக் கோல்... 2010 உலகக்கோப்பை ஃபைனலில் அடித்த வின்னிங் கோல்... 2015 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் செய்த அசிஸ்ட்... இவற்றையெல்லாம் தாண்டி, தன் கால்களில் பந்து கிடைத்ததும் அந்த மெஜிஷியன் செய்த ஒவ்வொரு மாய வித்தையையும் எந்தக் கால்பந்து ரசிகனாலும் மறந்திட முடியாது. 

Sponsored


திரும்பத் திரும்ப அவரை ஏன் மெஜிஷியன் என்று சொல்லவேண்டும்? ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற கால்பந்து அரக்கர்களைக் கூட யாரும் அப்படிக் கூப்பிடாதபோது இவரை ஏன்..? 

மேஜிக்கில் பல வகைகள் உண்டு. ஸ்டேஜ் இல்லூஷன் (Stage Illusion), மைக்ரோமேஜிக், மென்டலிஸம், எஸ்கேபாலஜி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலான வித்தை. இதில் நமக்கு அதிகமாகத் தெரிந்தது, நாம் அதிகம் பார்த்தது ஸ்டேஜ் இல்லூஷன் வகை மேஜிக்தான். உடலை இரண்டாக்குவது, புறாவை மாயமாக்குவது, தொப்பியிலிருந்து முயல் எடுப்பது, சிவப்புக் காகிதத்தை நீலமாக்குவது போன்ற வித்தைகளை அவர்கள் செய்யும்போது மொத்த அரங்கமும் பிரமிப்பில் ஆர்ப்பரிக்கும். ஆனால், அந்த வித்தைகளுக்கான மூலதனம், ஆர்ப்பரிப்பவர்கள் ஏமாறும் அந்த ஒரு நொடி! வித்தைகள் செய்யும்போது அந்த மெஜிஷியன்கள் சிரித்துக்கொண்டே ஒரு கையைத் தூக்கி மந்திரம்போல் ஏதேனும் சொல்வார்கள். அத்தனை கண்களும் அந்த ஒற்றைக் கையை மையம் கொண்டிருக்கும்போது இன்னொரு கை, சிவப்புக் காகிதம் இருந்த இடத்தை நீலக் காகிதத்தால் நிரப்பியிருக்கும். மெஜிஷியன்களின் வெற்றி, காகிதத்தை மாற்றுவதில் இல்லை. ஒட்டுமொத்தக் கண்களின் கவனத்தையும் இன்னொரு கையின் பக்கம் திருப்புவதில்தான். ஒவ்வோர் எதிராளியின் முன்பு இனியஸ்டாவும் ஒரு Illusionist தான். ஆனால் இவர் கைகளால் அல்ல, கால்களால் ஏமாற்றுவார். 

இன்னும் சொல்லப்போனால் கால்களால் மட்டுமல்ல, கண்களாலும் ஏமாற்றுவார். பொதுவாக, பந்தை வசப்படுத்தியிருக்கும் ஒரு வீரரின் மூவ்மென்ட்கள் கொண்டு அவர் பாஸ் செய்யப் போகிறாரா, டிரிபிள் செய்யப் போகிறாரா என்பதை ஓரளவு கணித்துவிடலாம். கால்கள் சற்று உயர எழும்பினால் லாங் பாஸ். இல்லையேல் ஷார்ட் பாஸ். கண்கள் எந்த வீரரைப் பார்க்கின்றனவோ அவரை நோக்கித்தான் அந்தப் பந்து பயணிக்கும். இப்படி ஒரு வீரரின் கண்களையும் கால்களையும் தடுப்பாட்டக்காரர்கள் கூர்ந்து கவனித்துப் பந்தை அபகரிப்பார்கள். ஆனால், இனியஸ்டாவிடம் அதெல்லாம் வேலைக்கே ஆகாது. கால்கள் தரையிலிருந்து அவ்வளவாக எழும்பாது... ஆனால் எங்கோ தூரத்தில் இருக்கும் மெஸ்ஸிக்கோ, சுவாரஸுக்கோ சரியாக அந்தப் பாஸ் செல்லும். கண்கள் இடதுபுறமிருக்கும் ஜோர்டி ஆல்பாவைப் பார்க்கும்... டிஃபண்டர் அந்தத் திசைநோக்கி நகர்வார்... ஒன்.. டூ.. த்ரீ... வூஷ்... யாருமே மார்க் செய்யாமல் பாக்ஸுக்குள் இருக்கும் மெஸ்ஸியை நோக்கி ஒரு chip. அந்தப் பாஸையெல்லாம் மெஸ்ஸியே எதிர்பார்த்திருக்கமாட்டார். அரங்கமே மெர்சலாகும்படி இருக்கும் அந்த பாஸ்! 

இல்லூஷன் செய்பவர்களுக்கான பிரதான தேவையே அவர்கள் ஏமாற்றுபவர்கள் முடிந்தவரை அதிக தொலைவில் இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இனியஸ்டா தனக்கு ஓர் அடி முன்னாள் இருக்கும் வீரரையும் சர்வசாதாரணமாக ஏமாற்றக்கூடியவர். இப்படி எத்தனையோ வீரர்கள் ஏமாற்றுகிறார்கள்... அப்போ எல்லோரும் மெஜிஷியனா.. எல்லோரும் செய்யலாம். ஆனால், பெர்ஃபெக்ஷன்? Magic = Perfection + precision. அவை இரண்டும் அணு அளவும் பிசகாத ஒரு வீரர் என்றால் அது இனியஸ்டா மட்டுமே. மற்ற வீரர்கள் ஏமாற்றி டிரிபிள் செய்துவிடுவார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யும்போது அது என்னவென்று தெரிந்துவிடும். எப்படிச் செய்தார்கள் என்று தெரியாமல் செய்து முடிப்பதுதானே மேஜிக்! 

இது இனியஸ்டா செய்யக்கூடிய மிகச் சாதாரணமான விஷயம். இதையெல்லாம்விட இனியஸ்டா களத்தில் காட்டக்கூடிய உட்சபட்ச வித்தை மென்டலிஸம் (Mentalism). இது முழுக்க முழுக்க மூளை செய்யும் வித்தை. இதைச் செய்யும் மென்டலிஸ்ட்களுக்கு அபூர்வ சக்திகள் இருப்பதாகப் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் அவை, ஒருவரின் உளவியலை முழுக்க முழுக்க அறிந்துகொள்வதில்தான் இருக்கிறது. இந்த வித்தையிலும் பல பிரிவுகள் உண்டு. Clairvoyance, divination, Telepathy, Precognition அவற்றுள் சில. 
Clairvoyance - ஒரு பொருளின், இடத்தின் சூழ்நிலையைத் தன் ஆற்றலால் அறிந்துகொள்ளுதல். 
Precognition - எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே அறிதல்.
Telepathy - மனிதர்கள் பயன்படுத்தும் எந்த முறைகளையும் பயன்படுத்தாமல் இன்னொருவருடன் தொடர்புகொள்ளுதல். 

இனியஸ்டாவின் மூளை ஒரு நொடியில் இவற்றையெல்லாம் அலசிவிடும். அவர் செய்யும் ஒரேயொரு த்ரூ பாலைப் பாருங்கள் இது புரியும். கண்முன்னால் எதிரணி டிஃபண்டர்களே நிறைந்திருப்பார்கள். பாக்ஸுக்கு அருகில் சக வீரர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், நெய்மர், மெஸ்ஸி போன்ற முன்கள வீரர்கள் பாக்ஸை நோக்கி முன்னேறுவார்கள். அவர்கள் எந்த டிஃபண்டர்களுக்கு நடுவே எதிரணியின் பாக்ஸுக்குள் நுழைவார்கள்.. wing மூலமாகவா இல்லை நடுவிலிருந்தா...  இதை முன்கூட்டியே அறிந்திருப்பார் இனியஸ்டா (Precognition). அவர்களுள் யாருக்குப் பாஸ் செய்வது...  இருவரில் யார் கோலடிப்பதற்கு உகந்த இடத்தில் இருக்கிறார்கள்...  யார் offside பொசிஷனில் இல்லாமல் onside-ல் இருக்கிறார்கள்? பந்தை உதைப்பதற்கு முன் இதையும் (Clairvoyance) கணித்துவிடுவார். அதற்குப்பின்னர்தான் அந்த அதி அற்புதம் நடக்கும். யாருமே எதிர்பாராத வகையில் அந்த பாஸைக் கம்ப்ளீட் செய்வார் இனியஸ்டா. அந்த பாஸ் யாருக்கானது என்பதையும், எங்கு வரும், எப்படி வரும் என்பதையும் முன்கள வீரர்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள் (Telepathy). அவர்களின் கடைசி மூவ்மென்ட்கள் அதற்கு ஏற்பவே இருக்கும். எதிரணியின் டிஃபண்டர்கள் சுதாரிப்பதற்குள் பந்து கோல்கீப்பரின் கண்முன்... அதற்கு அருகில் ஒரு பார்சிலோனா வீரர்... மிக அருகில் கோல்... இதுதான் இனியஸ்டா நிகழ்த்தும் மேஜிக்!

கிறிஸ் ஏஞ்சல், டேவிட் காப்பர்ஃபீல்ட் போன்ற இல்லூஷனிஸ்ட்களும், தியோடர் ஆன்மேன், கீத் பேரி போன்ற மென்டலிஸ்ட்களும் சேர்த்த கலவை இனியஸ்டா. ஒரே நேரத்தில் அந்த இரண்டு வித்தைகளையும் கலந்து கால்பந்து ஜாலம் நிகழ்த்துபவர். அதனால்தான் மெஜிஷியன் என்ற வார்த்தை இல்லாமல் அவரைப் பற்றிய வர்ணனை நிறைவு பெறுவதில்லை. இவர் செய்த அந்த வித்தைகள்தாம், மெஸ்ஸி பல கோல்கள் அடிக்கக் காரணமாகவும் அமைந்தது. இனி அவற்றையெல்லாம் கேம்ப் நூ அரங்கில் காண முடியாது. ஜப்பான் அல்லது சீனா போன்ற ஏதோவொரு நாட்டில் அவர் இனி விளையாடலாம். ஆனால், மிகப்பெரிய அரங்கில், பல்லாயிரம் பேர் முன்னால் பெர்ஃபார்ம் செய்வதுதானே ஒரு மெஜிஷியனுக்கும், அவர் ரசிகர்களுக்கும் சந்தோஷம். அந்த சந்தோஷம், அவர் ஆட்டத்தைப் பார்த்துக் கிடைக்கும் பிரமிப்பு எல்லாம் அந்தப் போட்டியோடு முடிந்துவிட்டது. 

இனியஸ்டா வெளியேறும்போது அந்த வர்ணனையாளர், ``Everybody around the world watching La Liga on tv please get on your feet and say thank you to Andres Iniesta" என்றார். ஆம், பார்சிலோனா ரசிகராக இல்லாவிடிலும், கால்பந்தை ரசிக்கும் ஒவ்வொருவரும் இந்த வித்தகனுக்கு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும். கமென்டேட்டர் ரே ஹட்சன் ஒருமுறை சொன்னார்..."இனியஸ்டா, தொப்பிக்குள்ளிருந்து முயல்கள் எடுக்கும் சாதாரண மெஜிஷியன் கிடையாது. அவர் தொப்பிக்குள்ளிருந்து அழகான, மிகப்பெரிய மயில்கள் வரும்" என்றார். அந்த மயில்களின் அழகை இனி கால்பந்து உலகம் காண முடியாது! Trending Articles

Sponsored