இவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..! ஏ.பி.டி. எனும் ஏலியன்Sponsoredபேட்டிங் இலக்கணம் மீண்டும் பழமை தேடும். கிரீஸுக்கு நடுவிலான ஜாலங்கள் தொலையும். இத்தனை நாள்கள் கிரிக்கெட்டிலிருந்த தேச பேதம் இல்லாத ரசிப்புத்தன்மை குறையும். ஏனெனில், ஏ.பி. டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார்! 

"உண்மையைச் சொன்னால் நான் களைத்துப்போய்விட்டேன்" என்று சொல்லி, சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துவிட்டார் ஏ.பி. 'மிஸ்டர் 360 டிகிரி ஓய்வு' என்று ட்விட்டர் சோக ட்வீட்களை பகிர்ந்துகொண்டிருக்கிறது. டி வில்லியர்ஸ் அடித்த  ஏலியன் லெவன் சிக்ஸர்கள், அதிவேக சதம், பக்கத்து ஊருக்குச் சென்ற பந்தை பாய்ந்து பிடித்த கேட்ச் போன்ற வீடியோக்கள் ஃபேஸ்புக்கில்  'ஃபீலிங் நாஸ்டால்ஜிக்' எமோஷனோடு உலாவிக்கொண்டிருக்கின்றன. 20,014 சர்வதேச ரன்கள், 31 பந்தில் சதம், ஐம்பதுக்கு மேல் சராசரி, நூறுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என நம்பர்கள் எல்லா வலைதளங்களிலும் கொட்டப்படுகின்றன. ஏ.பி. டி வில்லியர்ஸ் எண்களால் அடையாளம் காணப்படவேண்டிய வீரரா? 

Sponsored


ஹர்ஷா போக்ளே மிக அழகாகச் சொன்னார், "The numbers tell a story. But the numbers tell a very small part of A.B de Villiers' story". உண்மை. டி வில்லியர்ஸ் எண்களுக்கு அப்பாற்பட்டவர்... ரன்களுக்கு அப்பாற்பட்டவர்... 360 டிகிரிக்கும் அப்பாற்பட்டவர். அவரது கதை நிச்சயம் எண்களுக்குள் முடியக்கூடியதல்ல. வெற்றிகளாலும், சாதனைகளாலும் கிரிக்கெட்டை அணுகுபவர்களுக்கு அவர் ஜாம்பவான் கேட்டகிரி. ஆனால், அந்த விளையாட்டை அதன் அழகியல், அர்ப்பணிப்பு, நேசம் சார்ந்து அணுகுபவர்களுக்கு இவர் 'ஏ.பி.டி' கேட்டகிரி. ஆம், இதுவரை கிரிக்கெட் உலகம் கண்டிடாத வீரர் அவர். இனிமேலும் காணக் கிடைக்காத வீரர் அவர். 

Sponsored


பாயின்ட், எக்ஸ்ட்ரா கவர், கவர் என வட்டத்துக்குள்ளேயே ஆஃப் சைடு ஃபீல்டர்கள் நிற்கிறார்கள்; கவர் பௌண்டரியை நோக்கி பந்து வேகமாகப் போகிறது; ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர், கவர் ஃபீல்டர்கள் இருவரும்தான் அதைத் துரத்தவேண்டும். துரத்துகிறார்கள்; மிகவும் வேகமான அவுட்ஃபீல்டு. பந்து மின்னலென பாய்கிறது; அதைத் துரத்தியவர்கள் இருவரும் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் முயற்சியைக் கைவிடுகிறார்கள். பந்து பௌண்டரி எல்லையை நெருங்கிவிட்டது; இன்னும் ஒரு அடிதான். ஆனால், அதற்குள் லாங் ஆஃப் திசையிலிருந்து உயிரைக் கொடுத்து ஓடிவந்த அந்த உருவம் பௌண்டரிக்கும் பந்துக்கும் இடையே அணையிடுகிறது. சறுக்கிய வேகத்தில் பந்தைப் பிடிக்கிறது; பிடித்த வேகத்தில் எழுகிறது; அர்ஜுனனின் அம்பாய் பந்தை எரிய கைகள் ஆயத்தமாகிவிட்டன. அரங்கம் முழுக்க "ஏ.பி.டி... ஏ.பி.டி..." என்ற ஆரவாரம் எதிரொலிக்கிறது!

பௌண்டரி என்று ஆசுவாசப்பட்ட பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பீதியடைந்து வேகமெடுத்து ஓடுகிறார்கள். 'பௌண்டரி கொடுத்துவிட்டோம்' என்று கவலைகொண்டிருந்த பௌலர், இப்போது ரன் அவுட் செய்ய ஸ்டம்ப் நோக்கி விரைகிறார். கைகளைத் தூக்கி தன்னிடம் த்ரோ செய்யச் சொல்லிக் கத்துகிறார் கீப்பர். ஆசுவாசமாக இருந்த அம்பயர் ரன் அவுட் காலுக்காகத் தன் பார்வையை கூர்மையாக்குகிறார். தங்களுக்குச் சம்பந்தமே இல்லை என்று நின்றுகொண்டிருந்த லெக் சைடு ஃபீல்டர்கள் 'பேக்-அப்' செய்ய ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். '4' என்ற அட்டையைத் தூக்கியிருந்த பேட்டிங் டீம் ரசிகர்கள் ஒரு நிமிடம் பீதியில் உரைகிறார்கள். ஃபீல்டிங் அணி ரசிகர்களின் ஆரவாரம் சட்டென்று பலநூறு டெசிபல்கள் கூடுகிறது... அந்த த்ரோ கீப்பரை அடைவதற்கு முன்பே பேட்ஸ்மேன் கிரீஸைத் தாண்டியிருந்தார். விக்கெட் இல்லை. ஆனால், அதுவல்ல விஷயம். 

கிரிக்கெட்டின் வெற்றியே ஒரு நொடி கூட குறையாத அந்தப் பரபரப்புதான். அந்தப் பரபரப்புக்கு நடுவே ஒரு ட்விஸ்ட்... தனக்குச் சம்பந்தம் இல்லாத இடத்தில் அந்த ஃபீல்டர் கொட்டிய உழைப்பு... ஒரு நொடியில் அந்த மைதானத்தில் இருந்த வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரின் மனநிலையையும் மாற்றிவிட்டது. தாங்கள் எதிர்பாராத ஒருவிஷயம் திடீரென நடக்கும்போது... அதுவும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண் முன் நிகழும்போது 'அட்ரீனலின்' ஹார்மோன் அதிகமாகச் சுரந்து ரத்தத்தில் கலக்கும். இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கும். அந்த இதயத் துடிப்பு சீராகும்வரை கண்கள் நிச்சயம் அதற்குக் காரணமானவர்களைத்தான் பார்க்கும். பார்க்கும் கண்கள் யாருடையதாக இருந்தாலும் சரி, தென்னாப்பிரிக்கனோ, இந்தியனோ, ஆஸ்திரேலியனோ... அந்த ஒரு நொடி அந்த பரபரப்புக்குக் காரணமானவரைப் பிடித்துப் போகும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல... பத்து, நூறு, ஆயிரம் தருணங்களில் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் கண்களையும் கட்டிப்போட்டவர் டி வில்லியர்ஸ். ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு பந்திலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் கொட்டிய உழைப்பு, அவர் செய்த அசாத்திய விஷயங்கள்... எதிரணி ரசிகனை மட்டுமல்ல எதிரணி வீரர்களையுமே கட்டிப் போட்டது!

சொல்லப்போனால், அந்த உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் டி வில்லியர்ஸ். ஒவ்வொரு பந்திலும் தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ, அதைக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்தவர் அவர். ஐ.பி.எல் போட்டியின்போது அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தபோது மட்டுமோ, ஆஃப் சைட் வைடாகப் போகும் பந்தை, அதையும் தாண்டிப் போய் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும்போது மட்டுமோ அல்ல.. 30 யார்டு வட்டத்துக்குள் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடியபோது, தன்னைவிட படுவேகமாகப் பயணிக்கும் பந்தை வெறித்தனமாகத் துரத்தியபோது, அணியின் கீப்பர் அடிபட்டபோது மறுப்பே சொல்லாமல் ஸ்டம்புக்குப் பின்னால் நின்று வித்தைகள் காட்டியபோது... ஆடிய ஒவ்வொரு நிமிடமும் ஏ.பி கொடுத்தது 100 சதவிகித உழைப்பு. கிரிக்கெட்டில் அவரால் முடியாதது என்று எதுவும் கிடையாது. அவரால் வானில் பறக்கும் கேட்ச்சை காற்றில் மிதந்து பிடிக்க முடியும், கால் நோக்கி வரும் யார்க்கரை கீப்பரின் பின்னால் விரட்டவம் முடியும். இவையெல்லாம் பயிற்சியனால் மட்டும் வருவதில்லை. அந்த 100 சதவிகித அர்ப்பணிப்பால் மட்டுமே முடியும். டி வில்லியர்ஸால் மட்டுமே இவை சாத்தியம். 

2006-ம் ஆண்டு. தென்னாபிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி அது. 49 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார் சைமன் கேடிச். கவர் திசையில் அடித்துவிட்டு, அரைசதத்துக்காக அதிவேகமாக ஓடுகிறார். தன் இடதுபுறம் சென்ற பந்தை டைவ் அடித்துப் பிடிக்கிறார் ஏ.பி. இடது கையை ஊன்றி, ரோலிங்காகத் தொடங்குகிறார். முதல் rotation-ன் போதே தன் உடற்பளுவை பின்னால் இழுத்து பந்தை ரோலிங்கிலேயே த்ரோ செய்கிறார். பெயில்கள் சிதறுகின்றன. கேடிச் அவுட். டி வில்லியர்ஸ் அப்போதுதான் ரோலிங்காகி முடிக்கிறார். 100 சதவிகித உழைப்புக்கு நடுவே அறிவையும் அதே சதவிகிதத்தில் பயன்படுத்தும்போது மட்டுமே இப்படியான விஷயங்கள் சாத்தியப்படும். அதனால்தான் சொல்கிறேன், கிரிக்கெட் வீரர்கள் 3 வகை: சச்சின், வார்னே போன்ற ஜீனியஸ்கள்; டிராவிட், லாரா போன்ற hard workers; மற்றும் ஏ.பி.டி!

தன் சுயசரிதையின் ஓரிடத்தில் டி வில்லியர்ஸ் குறிப்பிடுவார் : "ரெக்கார்டுகள் பெரிய விஷயமே இல்லை. அவை தொலைக்காட்சியில் ஃபிளாஷ் ஆகும், இல்லை மறுநாள் பத்திரிகைகளில் அச்சாகும். ஆனால், அவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. ஆனால், ஒருவரின் புகழ் என்பது மனித உணர்வுகளில், நினைவுகளில் மட்டும்தான் நிலைத்திருக்கும்". டி வில்லியர்ஸ் என்னும் சகாப்தம் நினைவுகளின் மூலம் வாழக்கூடியது. 

அதிவேக சதமும், 360 டிகிரி ஷாட்களும் மட்டுமல்ல அவர் கொடுக்கும் நினைவு. அதற்கு நேர்மாறான நினைவுகள் அதிகம். அதைவிட உணர்வுப்பூர்வமான நினைவுகள் அதிகம். அப்படி என்றென்றும் மறையாத ஒன்று 2012-ம் ஆண்டு அடிலெய்டில் அவர் ஆடிய அந்த டெஸ்ட் இன்னிங்ஸ். 430 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா நான்காவது நாளிலேயே 3-வது விக்கெட்டையும் இழந்தது. அதுவும் 45 ரன்களுக்கு. வெற்றி நிச்சயம் முடியாது. டிரா செய்யவே 100 ஓவர்கள் ஆடவேண்டும். நிலைத்து நின்றார் ஏ.பி. டு ப்ளெஸ்ஸியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மொத்த ஆஸ்திரேலியாவையும் சோதித்தார். அவர் அடித்தது 33 ரன்கள்தான். ஆனால், அவர் சந்தித்தது 220 பந்துகள். கிட்டத்தட்ட 37 ஓவர்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றியை தனி ஆளாகத் தள்ளிப் போட்டார். அன்று டு ப்ளெஸ்ஸியும் இவரைப் போலவே மாரத்தான் ஆட்டம் ஆட, தோற்கவேண்டிய போட்டியை டிரா செய்தது தென்னாப்பிரிக்கா. டி வில்லியர்ஸின் அதிரடி ஆக்ஷன் மட்டுமல்ல... அவரின் பொறுமையும் நிதானமும்கூட ஆட்டத்தின் முடிவை முற்றிலுமாக மாற்றும். 

3 ஆண்டுகள் கழித்து டெல்லியில் அதேபோன்ற தருணம். 481 ரன்களைத் துரத்திய தென்னாப்பிரிக்கா நான்காவது நாளிலேயே தடுமாற, மீண்டும் 'ஹெர்குலஸ்' மோடுக்கு மாறினார் டி வில்லியர்ஸ். 297 பந்துகளில் 43 ரன்கள். போராடினார். இம்முறை டு ப்ளெஸ்ஸி விரைவில் வீழ்ந்தபோதும் போராடினார். ``நானே முதல்ல ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேன்தாண்டா, அதுக்கப்புறம்தான் இந்த 360 டிகிரிலாம்" என்று சொல்லாமல் சொல்லியிருப்பார் ஏ.பி. அன்று தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. ஆனால், அந்த இன்னிங்ஸ் நிச்சயம் எவராலும் மறக்கமுடியாது... இந்திய வீரர்களாலும்கூட! பெங்களூரு மைதானத்தில் தன் 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது சின்னசாமி அரங்கம் அதிர்ந்தது, இந்தியர்கள் அவரை எப்படி நேசிக்கிறார்கள் என்பதற்கான சான்று. 

இவற்றையெல்லாம்விட, 2015 உலகக் கோப்பை அரையிறுதி... நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா. ஆக்லாந்து மைதானத்தில் அமர்ந்து அழுகிறார் டி வில்லியர்ஸ். அந்தக் காட்சியைப் பார்த்து மொத்த உலகமும் அழுததே! தங்கள் தேசத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு வீரர் அழும்போது, எதற்காக அழவேண்டும்? அந்தத் தோல்வி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் ஏன் பாதிக்கவேண்டும்? நீ நேசித்த விஷயத்துக்காக தன்னை அர்ப்பணித்தவன் அழும்போது உன் கண்களிலும் கண்ணீர் வரத்தான் செய்யும். இமைகள் தடுத்தாலும், கண்கள் விட்டு அவை வழிந்தோடும். அது தேசம் என்தையெல்லாம் தாண்டி விளையாட்டு நேசம்! இந்த நினைவுகள் டி வில்லியர்ஸ் தவிர்த்து எந்த வீரருக்கும் கிடைத்திடாது. எத்தனை ஆயிரம் ரன்கள் அடித்தாலும், எத்தனை நூறு விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், எத்தனை எத்தனை கோப்பைகள் வென்றாலும், இந்த உலகம் அப்படி அழுதிடாது. கிரிக்கெட் ரசிகர்களில் ஒருவரின் வெறுப்பையும், சக வீரர்கள் ஒருவரின் பொறாமையையும்கூட சம்பாதிக்காத அந்த வீரனைத் தவிர, அப்படியொரு அன்பு வேறு எந்த வீரனுக்கும் கிடைத்திடாது. 

டி வில்லியர்ஸ் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இனி இதுபோன்ற நிகழ்வுகள் அமைவதும், நினைவுகள் கிடைப்பதும் சாத்தியமில்லை. அடுத்த சச்சினையும், அக்ரமையும் கண்டுகொண்ட கிரிக்கெட் உலகுக்கு இன்னொரு டி வில்லியர்ஸ் சாத்தியமே இல்லை. அதனால், டி வில்லியர்ஸ் என்னும் பெயர் கிரிக்கெட் உள்ளவரை தனி அடையாளம் கொண்டு நிற்கும்... கடைசி வரை பேசப்படும், புகழப்படும்... யாரேனும் ஒருவர் கீப்பர் பின்னால் சிக்ஸர் அடிக்கையில் (A shot like AB), யாரேனும் ஒருவர் காற்றில் பறந்து கேட்ச் பிடிக்கையில்(Flying like AB), யாரேனும் ஒருவர் லாங் ஆஃபில் இருந்து மிட்விக்கெட் வரை பாய்ந்து பௌண்டரியைத் தடுக்கையில்(An attempt like AB),  30 பந்துகளில் சதம் அடிக்கையில்(A genius like AB), ஒரு நாள் முழுக்கப் போராடி தோல்வியைத் தவிர்க்கையில்(A warrior like AB),எதிரணி வீரர்களும் எதிர்நாட்டு ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தையில்...Respected like AB...அந்த மரியாதைதான் அவருக்கான அடையாளம்!Trending Articles

Sponsored