திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்!



Sponsored



பாரிஸ் நகரம் – செரீனா வில்லியம்ஸ் கடைசிமுறை இங்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் பிறகு, அவருடைய வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பெர்சனல் வாழ்வில் எவ்வளவோ மாறினாலும், விளையாட்டில் அவருடைய ஆளுமை துளியும் மாறவில்லை என சமீபத்தில் நிரூபித்தார் செரீனா. கறுப்பு நிற catsuit,  இடுப்பில் சிவப்பு நிற பெல்ட் சகிதமாக ஃபிரெஞ்ச் ஓப்பன் நடந்த மைதானத்தில் அவர் நுழைந்தபோது, ஒரு சூப்பர் ஸ்டாரின் வருகைபோலவே இருந்தது அது. 

முதல் சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா ப்ளிஸ்கொவாவை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியபிறகு, ``இந்த ஆடை ஒரு அடையாளமாக இன்று இருக்கிறது. உடல்ரீதியாக, மனரீதியாக பெண்கள் அவர்கள்மீது நம்பிக்கைகொண்டு மீண்டு வருவதற்கு இந்த ஆடை இன்று ஒரு குறியீடாக நிற்கிறது” என்று பேட்டியளித்தார் செரீனா. அவர் இந்த ஆடை அணிந்ததற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மகள் ஒலிம்பியா பிறந்தபிறகு சில ரத்தக் கட்டுகளால் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. விரிந்துகொடுக்கும் தன்மைகொண்ட இந்த ஆடை, அவருக்கு சௌகரியமாக இருப்பதால் இந்த ஆடையைத் தேர்வுசெய்தார். 

Sponsored


தாயான பின் நேர மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் செரீனா. போட்டி முடிந்த பிறகு நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு மிகத் துல்லியமான நேரத்தைக் குறிப்பிட்டு அதை அப்படியே பின்பற்றுகிறார்.  ``நான் வீட்டுக்குச் சென்று ஒலிம்பியாவைப் பார்க்க வேண்டும். நீண்ட நேரமாக நான் இங்கேயே இருக்கிறேன். நான் பயிற்சியில் இல்லை என்றால், அவளோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்” என்றார். 

Sponsored


``பெரும்பாலும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின்போது நான் பயிற்சிக்களத்திலே இருப்பேன். ஆனால், அவள் மிகவும் சிறியவளாக இருப்பதால் என்னால் அவளை அழைத்துவர முடியவில்லை. இப்போது இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இதுதான், இது சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றார். 

செரீனாவின் சுவாரஸ்யங்கள் முடிவடைவதில்லை. அவரின் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் சிலவற்றைக் கருவுற்றிருக்கும்போதே வென்று காட்டியவர், இன்று 36 வயதில் ஒரு அம்மாவாக நிச்சயமாக இன்னும் பல சாதனைகளைப் புரிவார் என்று நம்பலாம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு Fed Cup, இந்தியன் வேல்ஸில் இரண்டு வெற்றிகள் என்று தொடங்கிய இந்தப் பயணம், இன்று இங்கு வந்துள்ளது. கடைசியாக செரீனா, மியாமி ஓப்பனில் நெயோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்த பிறகு, களிமண் போட்டிகளில் (clay court) ஆடுவதைத் தவிர்த்தார். இளவரசர் ஹாரியின் திருமணத்தில் கலந்துகொண்டது மட்டுமே அவருடைய ஒரே பொது நிகழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு பயிற்சி ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார் செரீனா. 

இந்தப் போட்டியில் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஆக்ரோஷமின்றி விளையாடினார். அவரை எதிர்த்து விளையாடிய பிளிஸ்கோவா, சற்று அமைதியிழந்திருந்ததை அவரே ஒப்புக்கொள்கிறார். “நான் எதிர்பார்த்ததைவிட செரீனா சிறப்பாக விளையாடினார்” என்றார் பிளிஸ்கோவா. அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும், செரீனா இப்படியொரு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. 

வியாழக்கிழமை நடக்கவுள்ள அடுத்தப் போட்டியில் செரீனா,  ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்ட்டியைச் சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ஆஷ்லீ, கடந்தமுறை ஃபிரெஞ்ச் ஓப்பன் இரட்டையர் பிரிவில் ஃபைனலுக்கு முன்னேறியவர். அதேநேரத்தில் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றைத் தாண்டியதில்லை. செரீனா - ஆஷ்லீ இருவரும் இதற்கு முன் 2014 ஆஸ்திரேலிய ஓப்பன் முதல் சுற்றில் மோதினர். அதில் செரீனா வெற்றிபெற்றார். அதனால், இந்தமுறையும் செரீனா எளிதில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

``முன்பெல்லாம் ஒலிம்பியா எப்போது தூங்குவாள் என என்னால் கணிக்க முடியாது. இப்போது பரவாயில்லை. அவளுடன் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செலவழிக்கிறேன். அவள் விழித்திருக்கும்போதேல்லாம் அவளுடன் இருப்பதுபோல பார்த்துக்கொள்கிறேன்” என்கிறார் அம்மா வில்லியம்ஸ்

பெல்ஜியத்தைச் சேர்ந்த கிம் கிளைஸ்டர்ஸ் இதற்கு முன், தாயான பின் மீண்டும் டென்னிஸ் ராக்கெட்டைக் கையிலெடுத்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருக்கிறார். செரீனாவும் அந்தச் சாதனையைப் படைப்பார். ஃபிரெஞ்ச் ஓப்பன் இல்லையென்றாலும் நிச்சயம் அவர் ஒரு கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என ஆணித்தரமாக நம்புகின்றனர் அவரது ரசிகர்கள். 

கண்டிப்பாக... ஏனெனில், அவர் செரீனா! 



Trending Articles

Sponsored