இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து!Sponsoredஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. 

Photo Credit: Twitter/ICC

Sponsored


இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி எடின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, ஸ்காட்லாந்து அணியின் இன்னிங்ஸை கிராஸ் மற்றும் கேப்டன் கோயட்சர் ஆகியோர் தொடங்கினர். டி20 போட்டியைப் போல் அதிரடி காட்டிய இந்த ஜோடி 13.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. 58 ரன்கள் சேர்த்திருந்த கோயட்சர், அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே, மற்றொரு தொடக்க வீரரான கிராஸ் 48 ரன்களில் பிளங்கட் பந்துவீச்சில் வெளியேறினார்.

Sponsored


இதையடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்குக்  கைகோத்த மெக்லாய்ட் - பெரிங்க்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் ஸ்காட்லாந்து அணி 30-வது ஓவரிலேயே 200 ரன்களை எட்டியது. அப்போது, 39 ரன்களுடன் பெரிங்க்டன் வெளியேறினார். அடுத்து வந்த முன்சே, மெக்லாய்ட் உடன் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்லாய்ட், 70 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கெதிராக சதமடிக்கும் முதல் ஸ்காட்லாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

44-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 307 ஆக இருந்தபோது 55 ரன்களுடன் முன்சே வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்களைக் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்லாய்ட் 94 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் பிளங்கிட், அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஸ்காட்லாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். Trending Articles

Sponsored