பிரேசில் ஃபேவரிட்ஸ்... நைஜீரியா டேஞ்சரஸ்..! - உலகக் கோப்பை பற்றி எட்வின் சிட்னி #WorldCup



Sponsored



உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன்புபோல அதே எதிர்பார்ப்போடு தொடங்கப்போகிறது. ஸ்பெயின், ஜெர்மனி போன்ற முன்னணி அணிகளோடு பனாமா, ஐஸ்லாந்து போன்ற புதுவரவுகளும் இணைந்துள்ள இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி, நிச்சயம் கடந்த தொடரைவிட மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும். 

பல அணிகள், இந்த முறை இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பிரான்ஸ், இங்கிலாந்து, நைஜீரியா போன்ற அணிகளில் இளம்வீரர்கள் நிறைந்திருப்பது, அடுத்த தலைமுறை வீரர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற அணிகளில் இளமையும் அனுபவமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கின்றன. 

கடந்த முறை சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்துவிட்டது பிரேசில். அதை சரிசெய்ய வேண்டும் என்ற உத்வேகம், இந்த வீரர்களிடம் தெரிகிறது. ஒவ்வொரு பொசிஷனிலும் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் ப்ரீமியர் லீக், லா லிகா போன்ற முன்னணி தொடர்களில் விளையாடிவருகின்றனர். மிகச்சிறந்த வீரர்களுடன், மிகப்பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால் நிச்சயம் இந்த உலகக் கோப்பையில் அவர்கள் ஜொலிப்பார்கள். 

Sponsored


Sponsored


நெய்மர், காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கொடினியோ, வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் போன்ற வீரர்கள் அவருடன் இணையும்போது, பிரேசிலின் அட்டாக் எதிரணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக விளங்கும். முன்களத்தில் மட்டுமல்லாமல் மிட்ஃபீல்டு, டிஃபன்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் பிரேசில் பலமான அணியாகவே இருக்கிறது. 

டிடே பயிற்சியாளர் ஆன பிறகு, அணியின் ஆட்டிட்யூடில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கடந்த சில பயிற்சிப் போட்டிகளில் ஒரு குழுவாக இணைந்து விளையாடுகின்றனர். மனதளவிலும் இந்தத் தொடருக்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு பிரேசில் 100 சதவிகிதம் தயார்!

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணிகள் மிகவும் பலமாக இருக்கின்றன. வழக்கமாக, இங்கிலாந்து பெரிய அரங்கில் சொதப்புவதால் யாருக்கும் அவர்கள்மீது பெரிதாக நம்பிக்கை இருக்காது. ஆனால், இந்த இங்கிலாந்து அணி முற்றிலும் வேறு அணியாகத் தெரிகிறது. இளமையும் வேகமும் நிறைந்த இந்த வீரர்களிடம் வெற்றிபெறும் வெறியைக் காண முடிகிறது. 

மார்கஸ் ரேஷ்ஃபோர்ட், டெலே அல்லி, ஜெஸ்ஸி லின்கார்ட் போன்ற இளம்வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அவர்களுள் அல்லி, லின்கார்ட் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடும். அவர்களது தைரியமான அணுகுமுறை இங்கிலாந்துக்குப் புதிது. அவர்கள் மட்டுமல்லாமல் ஹேரிகேன், ஸ்டோன்ஸ், பிக்ஃபோர்ட், வார்டி எனத் துடிப்பான வீரர்கள் நிறையபேர் இருப்பதால், இங்கிலாந்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

அதேபோல், இந்த உலகக் கோப்பையில் நாம் நிச்சயம் கவனிக்க வேண்டிய அணி பிரான்ஸ். இளம் வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக, கிலியன் எம்பாப்பே இந்தத் தொடரில் சில ஆச்சர்யங்கள் நிகழ்த்துவார். பிரான்ஸ், நிச்சயம் அரை இறுதி வரை முன்னேறும். 

ஒவ்வொரு தொடரிலும் `குரூப் ஆஃப் டெத்' என்றொரு குரூப் இருக்கும். ஆனால், இந்த முறை அனைத்து குரூப்களுமே சவாலாகத்தான் இருக்கின்றன. இந்தந்த அணிகள்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று இப்போதே ஆருடம் சொல்லிவிட முடியாது. ஆனால்,
D குரூப் ரொம்பவே சவாலாக இருக்கிறது. அர்ஜென்டினா, குரோஷியா, நைஜீரியாவுடன் ஐஸ்லாந்து அந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. யூரோ கோப்பையில் இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பியது ஐஸ்லாந்து. தங்கள் முதல் உலகக் கோப்பையிலும் சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம். 

மொராக்கோ, நைஜீரியா, செனகல் போன்ற அணிகள் மிகவும் நம்பிக்கையாகவும் பலமாகவும் இருக்கின்றன. அதிலும் நைஜீரியா, மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றை இந்த உலகக் கோப்பையில் கொடுக்கும். அணியின் கேப்டன் மிக்கேல் தவிர, பெரும்பாலானோர் இளைஞர்கள். இவோபி, இஹியனாசோ, மோசஸ் போன்றோர் ப்ரீமியர் லீக் அனுபவம் கொண்டவர்கள். இந்த அணியை நிச்சயம் கவனிக்க வேண்டும்.

இந்த உலகக் கோப்பையின் ஒரே ஏமாற்றம், இத்தாலி, நெதர்லாந்து, சிலி போன்ற பெரிய அணிகள் இந்தத் தொடரில் இல்லாததுதான். நான்கு உலகக் கோப்பைகள் வென்ற வரலாறுகொண்ட இத்தாலி, இந்த உலகக் கோப்பையில் இல்லாதது பெரிய வருத்தம். கோபா அமெரிக்கா தொடரை இரண்டு முறை தொடர்ந்து வென்ற சிலி தகுதி பெறாததும் பெரிய ஏமாற்றம். ஆனாலும், இப்போது தகுதி பெற்றுள்ள அணிகள் அவர்களை வென்று வந்தவைதான். கால்பந்து உலகில் அவர்களின் இடத்தை நிலைநாட்ட அந்த அணிகளுக்கான சந்தர்ப்பம் இது. அதனால், பெரிய அணிகள் இல்லாதது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். 

எகிப்து, பெரு போன்ற அணிகள் பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நல்ல ஃபார்மில் இருக்கின்றன. அவர்கள் உலக அரங்கில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த அணிகளும் தங்களின் 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பார்கள். இந்த உலகக் கோப்பை, முன்பைவிட சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்!



Trending Articles

Sponsored