பெனால்ட்டியை மிஸ் பண்ணிட்டீங்களே மெஸ்ஸி... #ARGISL பரபர நிமிடங்கள்!



உலகமே மெஸ்ஸி மேஜிக்குக்காக வெறித்தன வெயிட்டிங்கில் இருக்க, மெஸ்ஸியோ ஐஸ்லாந்து டிஃபெண்டர்களுக்கு இடையே சிக்கித்தவித்து, அல்வா போல கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பையும் கோட்டைவிட்டு 'ஃபுட்பால்ல இதெல்லாம் சகஜமப்பா' என கடந்துபோயிருக்கிறார். ரசிகர்களுக்கு ரொனால்டோ போல் செம விருந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, ஐஸ்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்மூலம் மீம் கிரியேட்டர்களுக்குத்தான் ஃபுல் மீல்ஸ் கொடுத்திருக்கிறார். #ARGISL

Sponsored


2018 கால்பந்து உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியை நேற்று ஆடியது ஆர்ஜென்டினா. இந்த உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருத்தப்படும் அணி என்பதோடு, மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால் 'மெஸ்ஸி' மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. அர்ஜென்டினாவையும், ஐஸ்லாந்தையும் ஒப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டேவிட்- கோலியாத் கதைதான். ஆமாம், ஐஸ்லாந்தின் வரலாற்றிலேயே அவர்கள் தகுதிபெற்றிருக்கும் முதல் உலகக்கோப்பை இதுதான். உலகக்கோப்பை மட்டுமல்ல 2016 யூரோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்தபடியாக அவர்கள் விளையாடும் மிகப்பெரிய சர்வதேச போட்டியும் இதுதான். உலக அரங்கில் விளையாடி அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் அர்ஜென்டினா ஐஸ்லாந்தை அடித்து ஆடும் என எல்லோரும் எதிர்பார்க்க  நடந்ததோ வேறு!

Sponsored


Sponsored


ஐஸ்லாந்து வெள்ளை ஆடையுடன் களமிறங்க, அர்ஜென்டினாவுக்கு அடர் நீலம். கிட்டத்தட்ட கறுப்பு ஆடை. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஐஸ்லாந்து செம அக்ரஸிவாக ஆடத்தொடங்கியது. அர்ஜென்டினாவும் அக்ரஸிவ் ஆட்டம் ஆட அனல் பறந்தது. மெஸ்ஸியை சமாளிப்பதற்காகவே தனி டிஃபென்டர்களை வைத்திருந்ததைப்போல இருந்தது ஐஸ்லாந்தின் ஆட்டம். மெஸ்ஸி என்னென்னவோ செய்துபார்த்தும் பந்து அவர் கன்ட்ரோலில் இல்லை. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் மெஸ்ஸியிடம் இருந்து வந்த உயரமான பாஸை கோல் ஆக்க முயற்சி செய்தார் அர்ஜென்டினாவின் டாக்லியாஃபிகோ. ஆனால் பால் போஸ்ட்டுக்கு வெளியே விழுந்தது.

9-வது நிமிடத்தில் ஐஸ்லாந்துக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை தவறவிட்டார் பெனர்சன். வெறும் 10 யார்டு டிஸ்டன்சில் இருந்து ஒரே ஒரு ஃடிபென்டரை மட்டும் சமாளித்து பெனர்சன் கோல் அடிக்கவேண்டும். ஆனால் கோட்டைவிட்டார். 10வது நிமிடத்தில் ஐஸ்லாந்துக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு. ஃபின்போக்சனுக்கு இது கொஞ்சம் கஷ்டமான வாய்ப்புதான் என்றாலும் கோல் மிஸ் ஆனது. 

19வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு நிகழ்ந்தது அந்த அற்புதம். செர்ஜியோ அகுவேரோ 2018 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்கான முதல் கோலை அடித்தார் . ரோயோவிடம் இருந்து வந்த பந்தை அழகாக ஹோல்ட் செய்து, கன்ட்ரோல் செய்து, கொஞ்சம் இடைவெளிவிட்டு சூப்பராக கோல் போஸ்ட்டுக்குள் அடித்தார். 21வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நேராக கோல் கீப்பரிடம் அடித்தார் மெஸ்ஸி. 

நான்கே நிமிடத்தில் திருப்பி அடித்தது ஐஸ்லாந்து. அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் கேபயோரோ ஒன்றும் செய்யமுடியாமல் திணறிவிட்டார். ஐஸ்லாந்து வீரர் சிகுர்ட்ஸ்ன் கேபயோரோவிடம் நேராக அடிக்க பந்து அவர் கையில் பட்டு மீண்டும் ஐஸ்லாந்து வீரர் ஃபின்போக்ஸனிடம் போனது. கோல் கீப்பரும் படுத்துக்கிடக்கிறார், டிஃபென்டர்களும் யாரும் இல்லை என்கிற செம சூப்பர் பொசிஷனில் அதை கோல் ஆக்கினார் ஃபின்போக்ஸன். 

25 நிமிடங்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது. இரண்டு அணிகளும் 1-1 என கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, ஆட்டம் சூடுபிடித்துக்கொண்டேபோனது. முதல் பாதியில் அர்ஜென்டினாவிடமே பந்து அதிகநேரம் இருந்தாலும் சட்டென ஒரு கோல் அடித்ததன்மூலம் நாங்கள் ஒன்றும் 'மின்னோஸ்' இல்லை என நிரூபித்தது ஐஸ்லாந்து. முதல் பாதி 1-1 என முடிய, இரண்டாவது பாதியில் ஐஸ்லாந்து முழுக்க முழுக்க டிஃபென்ஸிவ் ஆட்டம் ஆடியது. கிட்டத்தட்ட 10 வீரர்கள் அர்ஜென்டினாவின் வீரர்கள் கோல் அடித்துவிடக்கூடாது என தடுத்து ஆடிக்கொண்டிருந்தார்கள். 'வெற்றி முக்கியம் அல்ல, டிரா செய்துவிடுவோம்' என்பதுபோலவே இருந்தது ஐஸ்லாந்தின் ஆட்டம்.

63 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு ரெஃப்ரி ரூபத்தில் கடவுள் கொடுத்த வாய்ப்பு.ஐஸ்லாந்தின் மெக்னூசனும், அர்ஜென்டினாவின் மேஸாவும் மோதிக்கொள்ள அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு கொடுத்தார் ரெஃப்ரி. மெஸ்ஸி பெனால்ட்டி ஷாட்டை அடித்தார். மெஸ்ஸியின் ஷாட்டை சூப்பர் டைவ் அடித்து கோல் ஆக்காமல் தடுத்துநிறுத்தினார் ஐஸ்லாந்தின் கோல் கீப்பர் ஹால்டர்சன். அர்ஜென்டினாவுக்காக விளையாடும் போட்டிகளில் மெஸ்ஸி தவறவிடும் மூன்றாவது மிக முக்கியமான பெனால்ட்டி வாய்ப்பு இது. பார்சிலோனாவுக்காக ஆடும்போது பெனால்ட்டியை எல்லாம் அசால்ட்டாக அடிக்கிறார், அர்ஜென்டினா என்றால் மட்டும் கோட்டைவிடுகிறாரே என மெஸ்ஸி மீதான விமர்சனங்கள் கமென்ட்ரி பாக்ஸுக்குள் கேட்க  ஆரம்பித்தது.  

மீண்டும் 66வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு. 30 யார்டு தூரத்தில் இருந்து கோல் போஸ்ட்டுக்குள் அடிக்கவேண்டிய பந்தை போஸ்ட்டுக்கு மேலே அடித்தார் மெஸ்ஸி. 

88வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. பவோனின் ஷாட் டிஃபென்டர்களை எல்லாம் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழையப்போகும் சில விநாடிகளில் வலதுபக்கத்தில் இருந்து இடதுபக்கமாக தாவி, எகிறிப் பந்தைப்பிடித்தார் ஐஸ்லாந்தின் கோல் கீப்பர் ஹால்டர்சன். 

ஆட்டம் முடிய சில விநாடிகளே இருக்கும்போது மெஸ்ஸிக்கு மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்புகிடைத்தது. ஆனால், டிஃபென்டர்களின் காலிலேயே அடித்து வாய்ப்பை வீணடித்தார் மெஸ்ஸி. ஆட்டம் 1-1 என டிராவானது. மெஸ்ஸி சோகமாக வெளியேற, ஐஸ்லாந்து வீரர்களோ செம உற்சாகத்துடன் வெளியே வந்தனர். 

73 சதவிகித நேரம் அர்ஜென்ட்டினாவின் கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருந்தது. கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் அர்ஜென்டினா கோல் அடித்துவிடாமல் தடுப்பாட்டத்திலேயே டயர்டாகிவிடாமல் ஆடினர் ஐஸ்லாந்து வீரர்கள். வென்றிருக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்டது அர்ஜென்டினா.

முந்தைய நாள் இரவில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்ட்டி ஷாட்டை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஆக்கினார். அடுத்தநாள் மெஸ்ஸி பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். மீண்டும் ஆரம்பித்திருக்கிறது உலகின் சிறந்த வீரர் மெஸ்ஸியா... ரொனால்டோவா என்கிற யுத்தம். நீங்களே சொல்லுங்கள் உலகின் சிறந்த வீரர் யார்?!



Trending Articles

Sponsored