இங்கிலாந்து வெற்றி..! தோற்றாலும் கெத்துகாட்டிய துனிசியா #Worldcup



இரண்டாவது முறையாகக் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் துனிசியா கடந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கோப்பைக்கான போட்டிகளில் காங்கோ, எகிப்து, அல்ஜீரியா போன்ற ஆப்பிரிக்க முக்கிய அணிகளை வென்று தனது வலிமையை உணர்த்தியிருந்தது. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் துனிசியா மீதிருந்த எதிர்பார்ப்பைவிட இங்கிலாந்து வென்றுவிடுமென்ற மனநிலையே பெரும்பாலான பார்வையாளர்கள் கொண்டிருந்தனர். முதல் ஆட்டத்திலேயே வலிமையான அணியோடு மோதுவது துனிசியா ரசிகர்களுக்கும் சிறிது கலக்கத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்களின் மனநிலை மாறியிருக்க வாய்ப்புகள் உண்டு. எதிரணி எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் இது எங்கள் ஆட்டம் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதுபோல் விளையாடிய துனிசியாவின் தற்காப்பு வியூகம், தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட இங்கிலாந்து பலமுறை கோல் போட முயன்றபோதும் உத்வேகத்தோடு தடுத்தது.

Sponsored


Photo Courtesy: Reuters

Sponsored


பல கோல் வாய்ப்புகளை தடுத்துப் போராடிய துனிசியா கோல் கீப்பர் மோயிஸ் ஹஸன் 11-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் தட்டிக் கோல் போட முயல திறமையாகத் தட்டிவிட்டார். துருதிர்ஷ்டவசமாக அருகே நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன், ஹஸன் தட்டிவிட்ட பந்தை மீண்டும் உதைத்துக் கோல் போட்டார். அதைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய ஹஸன் தன்னால் ஏற்பட்ட பின்னடைவை நினைத்துக் கண்ணீர் வடித்தவாறு களத்தைவிட்டுச் சென்றார். அவருக்கு மாற்றாக வந்த பென் முஸ்தஃபா, அதற்குப் பிறகு இங்கிலாந்தின் கேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற ஆட்டக்காரர்களை  கோல் போட விடவில்லை. 35-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்து.

Sponsored


ஃபெர்ஜானி சஸ்ஸி கோல் போட்டார். அந்த பெனால்டி மூலம் முதல் பாதி முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது. இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணி கோல் போடுவதற்குத் தன் அனைத்து சக்தியையும் திரட்டிப் போராடியது. லிங்கார்டு, ஆல்லி டெலே, கேன் ஆகிய வீரர்கள் துனிசிய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். துனிசிய வீரர்களின் தற்காப்பு வியூகத்தை நன்றாக வகுத்துள்ளார் அவர்களின் பயிற்சியாளர் நபில். ஆனால், ஆட்ட நேரம் முடிந்து கூடுதலாக நான்கு நிமிடம் கொடுக்கப்பட்டபோது, இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம் வந்த பந்தைத் தலையில் தட்டிவிட்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் தனது இரண்டாவது கோலை அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். துனிசியா அணி தோல்வியைத் தழுவியிருந்தாலும், இங்கிலாந்துக்கு இறுதிவரை தோல்வி பயத்தைக் காட்டும் அளவுக்கு அதன் தற்காப்பு ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



Trending Articles

Sponsored