உலகக்கோப்பை கால்பந்து : பரபரப்பான மேட்சில் ஈரானை வீழ்த்தியது ஸ்பெயின்! #IRNESPSponsored21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 'பி' பிரிவில், ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதிய ஆட்டம் கஸான் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில், ஈரானை வென்றது.

போர்ச்சுகல் அணிக்கு எதிராக ஸ்பெயின் ஆடிய முதல் போட்டியில், போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்-ட்ரிக் கோல் அடித்ததால், அப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. அதனால், நேற்று நடைபெற்ற ஈரானுடனான போட்டியில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் ஸ்பெயின் அணி களமிறங்கியது. 

Sponsored


மொராக்கோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், சேம் சைடு கோல் காரணமாக அந்த ஆட்டத்தை சமன் செய்யும் வாய்ப்பை இழந்து தோல்வியுற்றிருந்தது ஈரான் அணி. எனவே, நேற்று நடந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்கியது.

Sponsored


ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஈரான் அணி முழுக்க முழுக்க டிஃபன்ஸில் கவனம் செலுத்தியது. ஆனாலும், ஸ்பெயின் அணியால் ஒரேயொரு ஆன் டார்கெட் ஷாட் மட்டுமே செய்ய முடிந்தது. அந்த அளவுக்கு ஈரான் அணியின் டிஃபன்ஸ் டஃப் கொடுத்தது. முதல்பாதியில் பந்து ஸ்பெயின் அணியின் வசம் 72 சதவிகிதம் இருந்தபோதும், அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் கோல் எதுவும் இன்றி முதல்பாதி முடிந்தது.

இரண்டாம் பாதியின் 54-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இனியஸ்ட்டா பாஸ் செய்த பந்தை, அருமையான கோலாக்கினார் டியாகோ கோஸ்டா. இந்த உலகக்கோப்பையில் அவர் அடிக்கும் மூன்றாவது கோல் இது. இதன்பின்னர் ஈரான் தனது அட்டாக்கிங் ஆட்டத்தைத் தொடங்கியது. 62வது நிமிடத்தில் ஈரான் அணி கோல் அடித்துவிட்டு செலிப்ரேட் செய்யத்தொடங்கிவிட ஸ்பெயின் அணியினர் ரெஃப்ரியிடம் அது ஆஃப் சைடு என முறையிட்டனர். VAR தொழில்நுட்பம் அது ஆஃப் சைடு தான் என உறுதிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தை சமன் செய்யும் அருமையான வாய்ப்பை ஈரான் இழந்தது. அதன் பின்னர், இரு அணிகளும் முயற்சி செய்தும் கோல் எதுவும் போட முடியவில்லை.

ஆட்டநேர இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வென்று 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தது. எனினும் இப்பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் அணியும் 4 புள்ளிகளோடு உள்ளது. மேலும், இவ்விரு அணிகளும் இரு போட்டிகளில் தலா 4 கோல்கள் போட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் ஸ்பெயின் அணி, மொராக்கோவை சந்திக்கிறது. அதே நாளில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஈரான் அணி, போர்ச்சுக்கல் அணியை சந்திக்கவிருக்கிறது.Trending Articles

Sponsored