மெஸ்ஸியைக் கலாய்க்கும் கூகுள்... இது டூடுல் குறியீடு..! #WorldCup #ARGSponsoredஃபிஃபா உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து தினமும் உலகக் கோப்பை டூடுல்களைத் தன் ஹோம் பேஜில் வைத்திருக்கொண்டிருக்கிறது கூகுள். தினமும் போட்டிகளில் விளையாடும் அணிகளைக் குறிக்கும் டூடுல்களை தங்கள் ஸ்டைலில் கலர்ஃபுல் கார்டூன்களாக வடிவமைத்துள்ளது. அப்படி ஒரு டூடுலில் மெஸ்ஸியைக் கலாய்த்துள்ளது கூகுள்.

இன்று விளையாடும் ஆறு அணிகளுக்கும் தனித்தனியாக டூடுல்களை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொருமுறை ரீலோடு செய்யும்போதும் வேறு அணியின் டூடுல் தெரியும். ஒவ்வொரு நாட்டின் சிறப்புகளும், அவர்களின் கால்பந்து வீரர்களும் இடம்பெற்றிருக்குமாறு இந்த டூடுல்கள் வரையப்பட்டுள்ளன. குரோஷியாவின் டூடுலில், அதன் தேசிய விலங்கு மார்டென் இடம்பெற்றுள்ளது. பெரு டூடுலில், பெருவின் பாரம்பர்ய `பாசோஸ்' உடையணிந்த மக்கள் இடம்பெற்றுள்ளனர். 

Sponsored


Sponsored


ஆஸ்திரேலியர்களின் கிரிக்கெட் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் சாக்ஸ்களை கிரிக்கெட் பேட் (pad) போல் வடிவமைத்து அவர்கள் டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கிளை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே பார்க்கும் நாடு டென்மார்க். உல்லாச வாகனங்களுக்கு எட்டு வழிச்சாலை அமைக்க வெறிகொண்டு திரியும் அரசுகளுக்கு மத்தியில், சைக்கிள் பயணிகளுக்கு 12,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை அமைத்துக்கொடுத்திருக்கும் அரசு அது. அவர்களின் அந்த சைக்கிள் காதலைக் குறிக்க டென்மார்க்கின் டூடுல் சைக்கிள்களால் நிறைந்திருக்கிறது. பிரான்ஸின் டூடுலில் ஃபுட்பால் கேமிங்கும், அவர்களின் தேசியப்பறவை சேவலின் படமும் இடம்பெற்றுள்ளன. இப்படி ஒவ்வொரு டூடுலிலும் சில குறியீடுகளை வைத்த கூகுள் அர்ஜென்டினாவின் டூடுலில் வைத்ததுதான் அல்டிமேட் குறியூடு!

அர்ஜென்டினாவின் டீ கலாசாரம், டேங்கோ நடனம், ஸ்டீக் மாமிசம் போன்றவை அவர்களின் டூடுலில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு மத்தியில்தான் அந்தச் சம்பவம்! ஒரு கோல் போஸ்ட். அதன் நடுவே ஒரு கோல்கீப்பர் பந்தைத் தடுக்க நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே பெனால்டி ஏரியாவில் ஒரு பந்து. அதன் அருகில் ஒரு வீரர். தலையில் கைவைத்தவாரு என்ன செய்வதென்று புரியாதது போன்ற பாடி லேங்குவேஜில் நிற்கிறார். அவரது ஜெர்சி எண் 10... ஆம், மெஸ்ஸியேதான்! சமீப காலமாக பெனால்டியில் சொதப்பும் மெஸ்ஸியைக் கலாய்ப்பதுபோல அமைந்துள்ளது இந்த டூடுல்.

ஐஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியில் எளிய பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட, அந்தப் போட்டியை டிரா செய்தது அர்ஜென்டினா. முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணியிடம் அந்த முடிவு கொஞ்சம் எதிர்பாராதது. அதிலும் முக்கியமான போட்டிகளில் மெஸ்ஸி பெனால்டியைத் தவறவிடுவது வாடிக்கையாகிவருகிறது. 2016 கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில், சிலி அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் போடத் தவறினார். 2012 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சீ அணிக்கு எதிராக பெனால்டியைத் தவறிவிட்டார். அந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினாவும் சரி, பார்சிலோவும் சரி தோல்வியையே சந்தித்தன. 

2016 கோபா அமெரிக்க தோல்விக்குப் பிறகு மெஸ்ஸி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. `கிளப்புக்கு நல்லா ஆடுறாரு, தேசிய அணிக்கு ஒண்ணும் ஆடுறதில்ல' என்று பொறுமினார்கள் அர்ஜென்டினா ரசிகர்கள். மறுபுறம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக யூரோ கோப்பை வென்று அசத்த, மெஸ்ஸி மீதான விமர்சனங்கள் வலுத்தன. ஓய்வு பெற்று மீண்டும் அணிக்குத் திரும்பினார். இந்த உலகக் கோப்பையையாவது வென்று தருவார் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க, முதல் போட்டியிலேயே சொதப்பிவிட்டார். போதாக்குறைக்கு அதற்குமுன் ரொனால்டோ ஹேட்ரிக் வேறு!

இந்நிலையில் ரொனால்டோ நேற்றும் கோலடிக்க, இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் மெஸ்ஸி. அதற்கு நடுவில் கூகுளின் இந்தக் குசும்பு டூடுள். அர்ஜென்டினா உடையணிந்த மெஸ்ஸி, என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதுபோல் வரையப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது உண்மைதான். ஆனால், மெஸ்ஸி ஓர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நிச்சயம் இன்றைய போட்டியில், தன்மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் சொல்வார்!Trending Articles

Sponsored