ஹேரி கேன் - சுமாரான அணியின் சூப்பர் ஸ்டார்... உலகக் கோப்பையின் டாப் ஸ்டார்! #WorldCupSponsoredமுதல் போட்டியில் இரண்டு கோல்கள். அடுத்தப் போட்டியில் ஹாட்ரிக். கோல்டன் பூட் ரேஸில் முதலிடம். ஒரு உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த இங்கிலாந்து கேப்டன். ``இங்கிலாந்துலாம் எந்த ஜென்மத்துலயும் கப் அடிக்காது" என்று அந்த அணியைக் குறைத்து மதிப்பிட்டவர்களையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் 24 வயது ஹேரி கேன். ரஷ்யாவில் இங்கிலாந்து அணி இறங்கியபோதே மொத்த தேசத்தின் பாரத்தையும் தன்மீது போட்டுக்கொண்டார் இந்த இளம் ஸ்ட்ரைக்கர். கையில் கேப்டன் ஆர்ம் பேண்ட்... ஜெர்சியில் 9-ம் நம்பர்... தோள்களில் ஆறரைக்கோடி மக்களின் நம்பிக்கை... அனைத்தையும் சுமந்துகொண்டு, நெருக்கடிகளை உடைத்தெறிந்து இங்கிலாந்தின் கதாநாயகனாக... இங்கிலாந்து கால்பந்தின் முதல் உலக நாயகனாக உருவெடுத்துள்ளார் கேன்! 

இவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னாள் இங்கிலாந்து கால்பந்தைப் பற்றியும், அது இயங்கிவரும் முறை பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். குட்டையைப் பற்றித் தெரிந்தால்தான் அதில் நீந்தும் மீனைப் பற்றிப் புரியும். அதுவும் இது 'கோல்டன் ஃபிஷ்' வேறு! ஒவ்வொரு தலைமுறையிலும் உலகின் தலைசிறந்த வீரர்களென்று எடுத்துக்கொண்டால், பீலே - மரடோனா, ரொனால்டோ - ஜிடேன், கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்ஸி என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் இருக்கும். அவர்களைத் தாண்டி தலைசிறந்த வீரர்கள் என்று பார்த்தால் டி ஸ்டெஃபானோ, ரொனால்டினோ, பெக்கன்பர் என்று பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற அணிகளைச் சேர்ந்தவர்களைத்தான் இந்த உலகம் கைகாட்டும். 

Sponsored


தப்பித்தவறிக்கூட ஒரு இங்கிலாந்து வீரரின் பெயர் அந்த லிஸ்டில் வந்திடாது. அந்தப் பட்டியலில் இடம்பெறக்கூடிய ஒரே இங்கிலாந்து பெயர் சர் பாபி சார்ல்டன் மட்டும்தான். ஆலன் ஷியரர், கேரி லினேகர், ஜெரார்ட், லாம்பார்ட், பால் ஸ்கோல்ஸ் என மிகச்சிறந்த ஜாம்பவான்கள் நிறையப் பேர் இங்கிலாந்திலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் உலக அரங்கில் தங்கள் பெயர்களை அழுத்தமாகப் பதிக்கவில்லை.  பெக்கம், ரூனி போன்றவர்களெல்லாம் சில காலம் பேசப்பட்டார்களே தவிர கொண்டாடப்படவில்லை. 

Sponsored


1966-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றபிறகு இங்கிலாந்து அணியும் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஒவ்வொரு பெரிய தொடரிலும் பங்கேற்று 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டுக் கிளம்பிவிடும். 1974, 1978, 1994 என மூன்று உலகக் கோப்பைகளுக்குத் தகுதிபெறவும் தவறியது. இவ்வளவு ஏன் நான்கு முறை யூரோ சாம்பியன்ஷிப் கோப்பைக்குத் தகுதிபெறுவதிலும் சறுக்கியது. உலகின் சிறந்த கால்பந்து லீக் என்றால் அது பிரீமியர் லீக்தான். அதற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டு லீகுக்கும் இல்லை. ஆனால், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பிரீமியர் லீகை ஆண்டது என்னவோ வெளிநாட்டு வீரர்கள்தான். 

தியரி ஹென்றி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, டிடியர் ட்ரோக்பா, லூயிஸ் சுவாரஸ், செர்ஜியோ அகுவேரோ என 15 ஆண்டுகளாக வெளிநாட்டவர்கள்தான் பிரீமியர் லீகின் 'கோல்டன் பூட்' வின்னர்கள். இப்படி பிரீமியர் லீகில் தன் தாக்கத்தைத் தொலைத்த இங்கிலாந்து, கொஞ்சம் கொஞ்சமாக உலக அரங்கில் தன் பிடியைத் தளர்த்தியது. 2002 உலகக் கோப்பையில் ஆறாம் இடம், 2006-ல் ஏழாம் இடம், 2010-ல் 13-ம் இடம். 2014-ல் அவர்கள் பெற்றது 26-வது இடம்! கால்பந்து ஒரு அணி விளையாட்டு. தனிநபரால் வெற்றி தேடித்தர முடியாது. ஆனால், தனி ஆளாக போட்டியின் முடிவை மாற்றக் கூடிய வீரர்களைக் கொண்ட அணியினால் மட்டும்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும். இந்த நூற்றாண்டில் அப்படிப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் பிரீமியர் லீகில் 2015 வரை இல்லை. இதுதான் இங்கிலாந்து கால்பந்தின் நிலை. 

அதுவரை இருந்த வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தை முதன்முதலாக உடைத்தது ஹேரி கேன். 2015-16 சீசனின் கோல்டன் பூட் விருதை 22 வயது இளைஞனாக வென்று உலகுக்கு தன் வருகையை அறிவித்தார் கேன். இங்கிலாந்தில் இப்படி 'One season Wonder' வீரர்கள் வருவது சர்வசாதாரணம். ஒரு சீசனில் வெறித்தனமாக பெர்ஃபார்ம் செய்வார்கள். ஆனால், அடுத்த சீசனிலேயே அட்ரஸ் இல்லாமல் தொலைந்துவிடுவார்கள். மைக்கேல் ஓவன், ஏண்டி கரோல், ஜோ கோல், ஜேக் வில்ஷேர், டாம் க்ளெவர்லி, லூக் ஷா என சமகால உதாரணங்களே ஏராளமாக இருக்கின்றன. ஹேரி கேன் அப்படியொருவர் என்றுதான் உலகம் நினைத்திருந்தது. ஆம், கால்பந்து உலகைப் பொறுத்தவரையில் இங்கிலாந்தின் முன்னேற்றமும், இங்கிலாந்து வீரர்களின் முன்னேற்றமும் கேள்விக்குறியதே.

ஆனால், தான் அடைந்த உயரத்தை அப்படியே பிடித்துக்கொள்ள விரும்பினார் கேன். இங்கிலாந்தின் மகத்தான வீரராக விரும்பினார். மைக்கேல் ஓவன் போல் 'பேலன் டி ஓர்' வென்று உடனே தொலைந்துபோகவோ, வெய்ன் ரூனி போல் கடைசி வரை வெறும் 'முன்னணி வீரர்' பட்டத்தோடு விடைபெறவோ அவர் விரும்பவில்லை. ஜாம்பவான் ஆகவேண்டும். வழக்கமாக இங்கிலாந்து ரசிகர்கள் எதிலெல்லாம் தங்கள் சரிவைத் தேடுவார்களோ, அதையெல்லாம் தள்ளிவைத்தார். மது - நிறுத்தப்பட்டது. Pub, Bar - நிறுத்தப்பட்டது. தனியாக ஊட்டச்சத்து நிபுணர் வைத்துக்கொண்டார். தன் ஆட்டத்தை மெருகேற்ற, தன் மீது அதிக கவனம் செலுத்தினார். 

தொடர்ந்து 2 சீசன்களிலும் பிரீமியர் லீக் கோல்டன் பூட். கேனின் மார்க்கெட் உயர்ந்தது. பெரிய அணிகள் தூண்டில் வீசின. அவர் தலையாட்டினால் கோடிகள் கொட்டியிருக்கும். சொல்லப்போனால் பல இங்கிலாந்து வீரர்களின் கால்பந்து வாழ்க்கை பாதாளம் தொட்டதற்கு இதுபோன்ற தருணங்களே அடித்தளம் அமைத்துள்ளன. ஒரு சிறிய அணியில் இருக்கும்போது நன்றாக விளையாடுவார்கள். ஒரு பெரிய அணி அழைக்கும்போது உடனே அங்கு போய்விடுவார்கள். அங்கு சம்பளம் அதிகம். ஆனால், நிறைய நட்சத்திரங்கள் இருக்கும் அணியில் விளையாட வாய்ப்பும் குறைவு, நிரூபிக்க நேரமும் குறைவு. லூக் ஷா, கரோல் போன்றவர்கள் காலியாகக் காரணம் இதுதான். ரஹீம் ஸ்டெர்லிங் இன்று மற்றுமொரு சாதாரண வீரராக இங்கிலாந்து அணியில் இருப்பதன் காரணமும் அதுதான். ஆனால், அந்தத் தவறை கேன் செய்யவில்லை. 

பெரிய கிளப்களில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களைவிட, இந்த கோல்டன் பூட் வின்னருக்குச் சம்பளம் குறைவு. ஆனால், அவர் வெளியேற விரும்பவில்லை. தன்னை முழுக்க மெருகேற்றிக்கொள்வதை மட்டுமே பிரதானமாகக் கருதினார். டாட்டன்ஹாம் அணியிலேயே தொடர்ந்து விளையாட, ஒப்பந்தம் கையெழுத்திட்டார். இன்று அவர் மட்டும் சிறந்த வீரராக வளரவில்லை... ஹேரி கேன் என்ற நபரைச் சுற்றி ஒரு அணியே வளர்ந்துகொண்டிருக்கிறது. அன்றாட பழக்க வழக்கத்திலிருந்து ஆட்டிட்யூட் வரை, ஒரு ஜாம்பவான் என்ன செய்யவேண்டுமோ, எப்படிச் செய்யவேண்டுமோ அதை அப்படிச் செய்துகொண்டிருக்கிறார் கேன். அதனால்தான் இங்கிலாந்தின் நம்பிக்கையாக அனைவரும் இவரையே பார்க்கிறார்கள். 

கேரி கேஹில் - செல்சீ அணியின் கேப்டன். ஜோர்டான் ஹெண்டர்சன் - லிவர்பூல் அணியின் கேப்டன். ஏஷ்லி யங் - 11 வருடங்களாக இங்கிலாந்து அணியில் இருப்பவர். ஆனால், இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஹேரி கேன் கையில் கேப்டன் பேண்டை மாற்றிவிட்டார் இங்கிலாந்து மேனேஜர் சௌத்கேட். காரணம் - பிரீமியர் லீக் கோல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல. ஒரு ஃபார்வேர்டாக கேனின் ஆட்டம். ஸ்ட்ரைக்கர் என்பதற்காக பாக்சுக்கு அருகில் நின்று பந்துக்காக காத்துக்கொண்டு மட்டுமே இருக்கமாட்டார். ஒரு 'False 9' போல் தன் விங்கர்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கக்கூடியவர். நடுகளம் வரை வந்து பொசஷன் மீட்கவேண்டும் என்று நினைப்பவர். அதற்கும் மேல் தன் சக வீரர்களுக்கு எல்லா வகையிலும் complement செய்யும் வீரர். அந்த குணாதிசியம் ஒரு தலைவனுக்கு அவசியம். ஒரு ஜாம்பவானுக்கும் அவசியம். கேன் அனைத்தும் ஒருங்கேபெற்றவர். 

இந்த உலகக் கோப்பையில் அவர் அடித்திருக்கும் 5 கோல்களும் ரொம்ப சிறப்பானவையெல்லாம் கிடையாது. 'Pocher' வகை கோல்கள். ஆனால், ஒவ்வொன்றும் 100 சதவிகித பெர்ஃபெக்ஷனை வெளிப்படுத்தியவை. மிகப்பெரிய அரங்கில் மிகப்பெரிய வீரர்கள் தடுமாறும்போது, தடுமாற்றம் இல்லாமல் அணிக்கு முன்மாதிரியாக இருக்கிறார் கேன். மொத்த இங்கிலாந்தும் 'கேன்...கேன்...கேன்..,' என்ற ஒற்றை கீதத்தைத்தான் பாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. ரொனல்டோ, ஜிடேன், மரடோனா போல் ஒற்றை ஆயுதமாகப் பார்க்கப்படுகிறார் கேன். அதற்கு முதல் இரண்டு போட்டிகளில் நிரூபித்தும்விட்டார். கடந்த 52 ஆண்டுகளில் இங்கிலாந்து காணாத கால்பந்து வீரர் அவர். இங்கிலாந்தின் இன்றைய உலக நாயகன் அவர்!Trending Articles

Sponsored