அகதியாக ஓடி வறுமையில் உழன்ற லூகா மோட்ரிச்... இப்போது குரோஷியாவின் ஹீரோ! #WorldCup



குரோஷியாவின் `வெல்பிட்' மலைப்பகுதியில் `மாட்ரிச்சி' என்ற சிறு கிராமம் உள்ளது. மனித உயிர்களுக்கு இங்கே எந்த மதிப்பும் கிடையாது. குரோஷியக் கால்பந்து அணியின் கேப்டன் லூகா மோட்ரிச்சின் வீடும் இங்குதான் இருந்தது. 

ஒருநாள் மலையில் மாடு மேய்க்கப் போயிருந்த மோட்ரிச்சின் தாத்தா லூகாவின் உடல், குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கிடந்தது. செர்பியப் படை, மோட்ரிச்சின் தாத்தாவைக் கொன்று போட்டுவிட்டுச் சென்றிருந்தது. சில நாள்களில் செர்பியப் படைகள் வீசிய குண்டு, மாட்ரிச்சி வீட்டையும் தகர்த்தது. மாட்ரிச்சி குடும்பம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்நாட்டுக்குள்ளேயே அகதியாக ஓடியது. மாட்ரிச்சி கிராமத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதார் நகரத்தில் அனைவரும் தஞ்சமடைந்தனர்.  அப்போது மோட்ரிச்சின் வயது 6!

Sponsored


Sponsored


அகதி முகாமில் எப்போது பார்த்தாலும் பந்தும் காலுமாகத் திரிந்த மோட்ரிச்சை, சதார் நகரக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டாமிஸ்லோ என்பவர் கண்காணித்தார். சிறுவனின் கால்பந்து திறமையை மனதுக்குள் மெச்சிக்கொண்டார். `நமக்கு ஒரு குட்டி மாரடோனா கிடைத்துவிட்டார்' என மனதுக்குள் துள்ளிய டாமிஸ்லோவ்,  மாட்ரிச்சை பட்டைத்தீட்டினார். மோட்ரிச்சுக்கு `கால்பந்து தந்தை' இவர்தான்.  உள்ளூர் அணிகளுக்கு  ஆடுகையில் `அதோ... அந்த அகதி சிறுவன்தான் கோல் அடித்தான்' என்கிற வார்த்தைகள் அவன் காதில் அடிக்கடி விழும். அவமானங்களைப் பொருட்படுத்தவில்லை. மோட்ரிச்சுக்கு மாட்ரிட் மட்டுமே அப்போது டெஸ்டினேஷன். டாமிஸ்லோவ்தான் 15 வயதில் டைனமோ ஸக்ரப் அணிக்கு மோட்ரிச்சைக் கொண்டுவந்தார். 

Sponsored


மோட்ரிச்சின் மீதி வாழ்க்கையைப் பார்ப்பதற்கு முன், குரோஷியா பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குரோஷியாவின் வரலாறு, போர்களால் சூழ்ந்து ரத்தக்கறை படிந்தது. யூகோஸ்லோவியா என்று ஒரு நாடு இருந்ததல்லவா! இந்த நாடு  உடைந்து உதிர்ந்த நாடுகளில் ஒன்றுதான் குரோஷியா. வெறும் 45 லட்சம் மக்கள்தொகைகொண்ட இந்த நாட்டில், கால்பந்துதான் எல்லாமே! கால்பந்து இவர்களுக்கு வெறும் விளையாட்டு அல்ல... வாழ்க்கை, கௌரவம் அனைத்தும்.

யூகோஸ்லோவியாவிடமிருந்து 1991-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி குரோஷியா சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது. ஸக்ரப் நகரம்தான் இந்தக் குட்டி நாட்டின் தலைநகரம். இங்கே, `டைனமோ ஸக்ரப்' என்கிற புகழ்பெற்ற கால்பந்து அணி இயங்கியது. இந்த அணிதான் பல குரோஷியக் கால்பந்து வீரர்களின் தாய்வீடு. 

விடுதலையடைந்த ஏழு ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கும் முன்னேறியது குரோஷியா. 1998-ம் ஆண்டு பிரான்ஸ் உலகக் கோப்பை தொடருக்கு முதன்முறையாக குரோஷியா தகுதிபெற்றது. அர்ஜென்டினா, ஜப்பான், ஜமைக்கா அணிகளுடன் `ஹெச்' பிரிவில் குரோஷியாவும் இருந்தது. முதல் ஆட்டத்தில் ஜமைக்காவை 3 கோல் அடித்து வீழ்த்தியதோடு, அடுத்து ஜப்பான் அணியை ஒரு கோல் அடித்துத் தோற்கடித்தது. கடைசி ஆட்டத்தில், பலம் பொருந்திய அர்ஜென்டினா அணியுடன் குரோஷியா மோத வேண்டும். `குரோஷியாவை, அர்ஜென்டினா ஊதித் தள்ளிவிடும்' என்றனர். குரோஷியாவோ அர்ஜென்டினாவுக்கு டஃப் கொடுக்க, ரசிகர்களின் பார்வை குரோஷியா பக்கம் திரும்பியது. அர்ஜென்டினாவிடம் ஒரு கோல் வாங்கித் தோற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா. 

நாக் அவுட் சுற்றில் ருமேனியாவைச் சந்தித்தது குரோஷிய அணி. ருமேனியா அணியோ... முதல் சுற்றில் கொலம்பியா, இங்கிலாந்து அணிகளை வெறித்தனமாக ஆடித்  தோற்கடித்திருந்தது. இதனால், ருமேனியாவே வெல்லும் எனக் கணித்தனர். ஆனால், சூப்பராக விளையாடிய குரோஷியா, ஒரு கோல் அடித்து ருமேனியாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியது.

அடுத்து, கால் இறுதியில் பலம் பொருந்திய ஜெர்மனியிடம்  சிக்கியது.  ஜர்கன் கோலர், லோதர் மாத்யஸ், தாமஸ் ஹேஸ்லர் ஓலிவர் ஃபியர்ஃஹாப், ஜர்கன் க்ளின்ஸ்மேன்... எல்லாவற்றுக்கும் மேலாக ஜெர்மனி கோல் கம்பத்தில் ஓலிவர் கான் நின்றார்.  `கானை மீறி கோல் அடிக்க வேண்டுமென்றால், ஆயிரம் கால்கள் வேண்டும்' என்பார்கள். `இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்பது ஜெர்மனி அணிக்குப் பொருந்திய காலம் அது.  குரோஷியாவின் கதை முடிந்தது என்றே எல்லோரும் கருதினார்கள். ஆனால்,  களத்தில் நடந்ததோ வேறு... 3 கோல்கள் அடித்து ஜெர்மனியைத் துரத்தியடித்தது குரோஷியா. உலகமே மூக்கில் விரலை வைத்தபடி போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தக் குரோஷிய அணியின் ஹீரோதான் டேவோர் சுகர். இந்தத் தொடரில் தங்கக் காலணி வென்ற சூப்பர் ஸ்ட்ரைக்கர்.  

அரை இறுதியில் பிரான்ஸ் அணியிடம் 2-1 என்ற கோல்கணக்கில் தோற்றாலும், மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணியையும் முடித்துக்காட்டி முத்திரை பதித்துவிட்டே பிரான்ஸைவிட்டு வெளியேறியது குரோஷியா. `உலகக் கோப்பையை வெல்ல `வொர்த்தான அணிதான்' என்று கால்பந்து ரசிகர்கள் குட்டி நாட்டுக்குப் பாராட்டு மழை பொழிந்தனர். பிரான்ஸ் உலகக் கோப்பையில் டேவோர் சுகர், 6 கோல்கள் அடித்து நேஷனல் ஹீரோ ஆனார். மோட்ரிச் உள்ளிட்ட தற்போதைய குரோஷிய கால்பந்து வீரர்களுக்கு டேவோர் சுகர்தான் அப்போது ஹீரோ. டேவோர் சுகர், தற்போது குரோஷிய கால்பந்து சங்கத்தின் தலைவராக உள்ளார். 

டேவோர் சுகரின் ஆட்டங்களை டிவி-யில் பார்த்த மோட்ரிச், `நானும் ஒருநாள் சுகர்போல் ஆவேன்' என்று சொல்லிக்கொள்வான். டேவோர் சுகரையும் டைனமோ ஸக்ரப்தான் உலகுக்கு அடையாளம்காட்டியது. பிறகு, உலகின் பணக்காரக் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட்டில் அவர்  இணைந்தார். ஸக்ரப் அணியில் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய லூகா மோட்ரிச், தற்போது ரியல் மாட்ரிட் அணியின் முதுகெலும்பு. கடந்த நான்கு சீஸன்களில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கோப்பையைத் தொடர்ந்து வெல்கிறது என்றால், அதற்கு ரொனால்டோவும் காரத் பேல் மட்டும் காரணமல்ல... மோட்ரிச்சும்தான். 

லூகா மோட்ரிச் மட்டுமல்ல, குரோஷியக் கால்பந்து வீரர்கள் பலரும் உயிருக்கு பயந்து தாய்நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருந்தவர்களே! குரோஷியாவின் மற்றோரு சூப்பர் ஸ்டார் இவான் ரகிடிச் குடும்பமும் அகதியாக சுவிட்சர்லாந்தில் குடிபெயர்ந்ததுதான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ரகிடிச், அந்த நாட்டைச் சேர்ந்த பசெல் அணியில் இணைந்து கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது பார்சிலோனா அணிக்காக ஆடுகிறார் ரகிடிச்.

மற்றொரு முன்னணி நட்சத்திரமான மரியோ மான்ட்சூகிச் குடும்பம், 1992-ம் ஆண்டு ஜெர்மனிக்குத் தப்பி ஓடியது. ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடிய மான்ட்சூகிச், இப்போது யுவன்டெஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். போர்களால் பிரிந்து போனாலும் உலகக் கோப்பை என்று வந்ததும் `அக்மார்க்' குரோஷியக்காரர்களாக மாறிவிடுகின்றனர் இவர்கள்!

தற்போதைய குரோஷிய அணியை, 1998-ம் ஆண்டு டேவோர் சுகரின் குரோஷிய அணியுடன் கால்பந்து வல்லுநர்கள் ஒப்பிடுகிறார்கள். 2002, 2006-ம் ஆண்டு  உலகக் கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றை குரோஷிய அணி தாண்டவில்லை. 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக்குத் தகுதிபெறவில்லை. கடந்த  பிரேசில் உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு முடிந்துபோனது குரோஷியா. ஆனால், நடப்புத் தொடரில் குரோஷிய அணி அசத்திவருகிறது. இவான் ரகிடிச், மரியோ மன்ட்சூகிச், லூகா மோட்ரிச் மும்மூர்த்திகளும் உலகக் கோப்பையை வென்று தருவார்கள் என்று குரோஷிய மக்கள் நம்புகிறார்கள். 

மும்மூர்த்திகள், மாயாஜாலம் நிகழ்த்துவார்களா? 



Trending Articles

Sponsored