சாம்பியன்னாலே சிக்கல்தான்போல.... ஜெர்மனிக்கு முன்னாடி தோத்த கதை நிறைய இருக்கு! #WorldCup



Sponsored



லகச் சாம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறும் உலகக் கோப்பை வரலாறு தொடர்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வென்று சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி இந்த முறை முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. தென் கொரியாவிடம் 2-0 என்கிற கோல்கணக்கில் தோற்று துவண்டுபோய் வெளியேறுகிறது.  இதற்கு முன், ஐந்து முறை நடப்புச் சாம்பின்கள் முதல் சுற்றோடு வெளியேறியிருக்கின்றன.

உலகக் கோப்பையிலிருந்து முதன்முறையாக முதல் சுற்றோடு வெளியேறிய 'நடப்புச் சாம்பியன்' இத்தாலி அணி... கடந்த 1934, 38-ம் ஆண்டு தொடர்களில் உலச் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இரண்டாவது உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகள் போட்டி நடைபெறவில்லை. மீண்டும் 1950-ம் ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. 1949-ம் ஆண்டு இத்தாலியில் டொரினா கால்பந்து அணி வீரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அனைத்து வீரர்களும் மாண்டனர். விமானப் பயணத்துக்கு பயந்த இத்தாலி அணி கப்பல் பிடித்து பிரேசில் வந்து சேர்ந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. அடுத்து பராகுவே அணியிடம் 2-0 என்று வெற்றி பெற்றாலும், ஸ்வீடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற, இத்தாலி சோகத்துடன் நாடு திரும்பியது. 

Sponsored


1966-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பிரேசில் அணியால் மறக்க முடியாது. இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தாலி போலவே முன்னதாக நடந்த இரு தொடர்களில் பிரேசில் கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. முதல் ஆட்டத்தில் பீலே, கரிஞ்சா கூட்டணி அசத்த பல்கேரியாவை 2-0 என்று வென்றது. பல்கேரியா வீரர்கள் பீலேவின் காலை குறி வைத்துத் தாக்க, அவர் காயமடைந்தார். இதனால் ஹங்கேரி அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் பீலேவால் களமிறங்க முடியவில்லை. ஹங்கேரி அணி பிரேசில் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது. இந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்டது. ஜாம்பவான் எஸ்பயோ தலைமையில் இங்கிலாந்துக்கு வந்திருந்தது போர்ச்சுகல் அணி. கடைசி லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-1 என்று பிரேசிலை எளிதாக வீழ்த்தியது. விளைவு... முதல் சுற்றோடு பிரேசில் வெளியேறியது. 

Sponsored


2002-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முதன்முறையாக ஆசியாவில் நடைபெற்றது. ஜப்பானும் தென்கொரியாவும் போட்டியை நடத்தின. 1998-ம் ஆண்டு உலகச் சாம்பியன் 2000-ம் ஆண்டு ஐரோப்பியச் சாம்பியன் என்கிற அந்தஸ்த்துடன் பிரான்ஸ் கெத்துக் காட்டியது. தியரி ஹென்றி, மார்ஷல் டிஸெய்லி, இம்மானுவேல் பெடிட், பேட்ரிக் வியரா, டேவிட் ட்ரெஸ்குட், பார்தெஸ், ஜிடேன், கிளாட் மெக்கல்லே, லிலியன் துராம் என நட்சத்திரப் பட்டாளங்களால் பிரான்ஸ் நிரம்பி வழிந்தது. செனகல் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் காயம் காரணமாக ஜிடேன் களமிறங்கவில்லை.

செனகல் முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி `ஷாக்' கொடுத்தது. உருகுவேக்கு எதிரான ஆட்டம் 0-0 என்று டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் முரட்டு ஆட்டம் காரணமாக தியேரி ஹென்றிக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தியேரி ஹென்றியால் விளையாட முடியவில்லை. அதேவேளையில், ஜிடேன் களமிறங்கியும் பலன் இல்லை. முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வெற்றி பெற்று பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பியது. இன்னொரு சோகம் என்னவென்றால், இந்த உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதுதான். 

2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் இத்தாலி இடம் பெற்றிருந்த பிரிவில் குட்டி குட்டி அணிகள்தாம்  இருந்தன. நியூசிலாந்து, ஸ்லோவேகியா, பராகுவே அணிகளை எதிர்த்துதான் முதல் சுற்றில் இத்தாலி ஆட வேண்டும். இதில், பராகுவே மட்டுமே இத்தாலிக்கு டஃப் கொடுக்கக் கூடிய அணி. இத்தாலிக்கு எளிதான பிரிவு கிடைத்துள்ளதாக அனைவரும் கருதினார்கள். ஆனால் இந்தக் குட்டி அணிகள் இத்தாலியைப் போட்டுக் குதறி எடுத்து விட்டன. நியூசிலாந்து, பராகுவே அணிகள் டிரா செய்து இத்தாலிக்கு அதிர்ச்சி கொடுத்தன. கடைசி ஆட்டத்தில் ஸ்லோவேகியா அணியுடன் இத்தாலி மோத வேண்டும். வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்குள் போய் விடலாம். ஸ்லோவேகியா அணிக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை தொடரும் கூட. அனுபவமிக்க இத்தாலி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியா பின்னியெடுக்க  உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது மார்ஸிலோ லிப்பி அணி.

கடந்த பிரேசில் உலகக் கோப்பை தொடர் ஸ்பெயின் அணிக்குக் கடும் ஷாக் கொடுத்தது. 2008-ம் ஆண்டு ஐரோப்பியச் சாம்பியன், 2010-ம் ஆண்டு உலகச் சாம்பியன் 2012-ம் ஆண்டு ஐரோப்பியச் சாம்பியன் எனக் கால்பந்தில் ஸ்பெயின் கோலோச்சிக்கொண்டிருந்தது. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து ஸ்பெயினைத் துவைத்தெடுத்தது. 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது. அடுத்து, சிலி தன் பங்குக்கு 2 கோல் திணித்து வெற்றி பெற்றது. நொந்து போன ஸ்பெயின் கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றும் பலன் இல்லை. ஸ்பெயின் வெளியேறியதோடு ஸேபி அலான்ஸோ, ஐகெர் கெசிலாஸ், ஜேவி போன்ற ஸ்பெயின் வீரர்கள் சர்வதேசக் கால்பந்துக்கு முழுக்குப் போட்டனர். 

இந்தப் பட்டியலில் 6-வது அணியாக ஜெர்மனி சேர்ந்துள்ளது. 



Trending Articles

Sponsored