`ரிவர்ஸ் ஸ்விங் வழக்கொழிந்து போய்விடும்!’ - சச்சினைத் தொடர்ந்து உமேஷ் யாதவ் எதிர்ப்புக் குரல்Sponsoredஒரு நாள் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இரண்டு புதிய பந்துகள் உபயோகிப்பதால் ரிவர்ஸ் ஸ்விங்கை அரிதாகத்தான் காணமுடிகிறது என இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

டி20 போட்டிகள் அறிமுகமான பிறகு, கிரிக்கெட் விதிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. டி20  போட்டிகளைப்போல் ஒரு நாள் போட்டிகளும் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக டி20-யில் பின்பற்றப்படும் விதிகள் ஒருநாள் போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன்படி, அதிக ரன்கள் குவிக்க ஏதுவாகப் பவுண்டரி எல்லைகளைக் குறைப்பது, பந்துவீச்சாளர்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எனப் புதிய விதிகள் பேட்ஸ்மேன்ஸ்களுக்குச் சாதகமாகவே விதிக்கப்படுகின்றன. இதனால் இரட்டைச் சதங்கள், 400 ரன்களுக்கு மேல் குவிப்பது என சர்வ சாதாரணமாகத் தற்போது சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதற்கு உதாரணம்தான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்தது. போதாக்குறைக்கு டெஸ்ட் போட்டிகளை 5 நாள்களிருந்து 4 நாள்களாகக் குறைப்பது குறித்து நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒருநாள் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தும்படி புதிய விதியை ஐசிசி கொண்டுவந்துள்ளது. ஐ.சி.சி-யின் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

Sponsored


அந்தவகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ``ஐ.சி.சி-யின் இந்த விதி கிரிக்கெட்டில் பேரழிவை ஏற்படுத்தும்'' என சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சச்சினின் கண்டனத்தைத் தொடர்ந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவும் ஐசிசியின் புதிய விதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய உமேஷ் யாதவ்,``ஒரே இன்னிங்ஸில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தும்போது வேகப்பந்து வீச்சாளர்களால் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாது. முன்பு ஒரு பந்து மட்டும் பயன்படுத்தும்போது அது பழைய பந்தாக மாற போதிய நேரம் கிடைக்கிறது. அதனால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால், தற்போதெல்லாம் ஒரே இன்னிங்ஸில் இரண்டு புதிய பந்துகள் உபயோகிப்பதால், ஒருநாள் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங்கை அரிதாகத்தான் காணமுடிகிறது. இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கிறது. அவர்களால் லென்த் பால் மற்றும் யார்க்கர் பால் உள்ளிட்டவைகளை வீச முடிவதில்லை. டெத் ஓவர்களில் இந்தப் புதிய பந்துகளால் எதுவும் செய்ய முடியவில்லை" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored