ஷூட் அவுட்டில் குரோஷியா ஸ்மார்ட்... வெளியேறியது டென்மார்க்! #CRODEN



Sponsored



ரஷ்யாவுக்கு எதிராக, நிமிடத்துக்கு 10 பாஸ் வீதம், 100 நிமிடத்துக்கு 1,000 பாஸ் போட்ட ஸ்பெயின், 120 நிமிடத்தின் முடிவில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஸ்பெயின் கணக்கில் வந்த ஒரு கோலும், ரஷ்ய வீரர் அடித்த own goal. ஆனால், டென்மார்க் - குரோஷியா அணிகள் மோதிய போட்டியில், ஆட்டம் தொடங்கிய 58 நொடிகளில் ஒரு கோல் அடித்தது டென்மார்க். அடுத்த மூன்று நிமிடத்தில் அதைச் சமன்செய்தது குரோஷியா. ஆனால், நான்கு நிமிடத்துக்குள் தலா ஒரு கோல் அடித்த இரு அணிகளும், அடுத்த 116 நிமிடங்களில் ஒரு கோலும் அடிக்கவில்லை. ஆக, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மீண்டும் ஒரு பெனால்டி ஷுட். இது, இந்த உலகக் கோப்பையின் அடுத்த ஆச்சர்யம். #CRODEN

இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்புவரை, குரோஷியா யாருடைய ஃபேவரிட் லிஸ்ட்டிலும் இல்லை. அர்ஜென்டினாவுக்கு எதிராக அந்த ஸ்டன்னிங் கோல் அடிப்பதற்கு முன்புவரை, லூகா மோட்ரிச் ஹீரோவாகக் கொண்டாடப்படவில்லை. அர்ஜென்டினாவை குரூப் சுற்றில் 3-0 என வீழ்த்திய பின், குரோஷியா மீதான பார்வையே மாறிவிட்டது. அதனால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் குரோஷியா, டென்மார்க்கை எளிதில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

Sponsored


ரெஃப்ரி விசில் அடித்த, அடுத்த 50-வது நொடியில் டென்மார்க் அணிக்கு ஒரு த்ரோ இன் கிடைத்தது. ஜோனஸ் நட்சன் அந்த த்ரோ இன்னை பெனால்டி பாக்ஸுக்குள் தூக்கி வீசுகிறார். தாமஸ் டெலினே அதை வாங்கி கோல் அடிக்க முயல்கிறார். குரோஷியா டிஃபண்டர்கள் அவரை வட்டவளையம் போடுகிறார்கள். டெலினே உடனே அதை தனக்கு இடதுபுறம் இருந்த மதியாஸ் ஜார்சென்சன் வசம் பாஸ்செய்கிறார். நொடியும் தாமதிக்காது, குரோஷியா டிஃபண்டர்களின் கால்களுக்கு இடையே தட்டி விடுகிறார் ஜார்சென்சன். குரோஷியா கோல் கீப்பர் டேனியல் சுபாசிச் கீழே விழுந்து தடுத்தும், பந்து வலைக்குள் சென்று விட்டது. ஆட்டம் தொடங்கி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. டென்மார்க் 1-0 என முன்னிலை.

Sponsored


ஆட்டம் தொடங்கியதுமே, ஆட்டம் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிவிட்டால், அதிலிருந்து மீள்வது எந்தவோர் அணிக்கும் சவாலான விஷயம். ஆனால், குரோஷியா அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மீண்டு வந்தது. பதிலடி கொடுத்தது. டென்மார்க்கின் ரைட் விங்கிலிருந்து வந்த கிராஸ், கிறிஸ்டின்சென் முகத்தில் பட்டு எகிற, பாக்ஸில் 10 யார்டு தூரத்தில் அதற்காகவே காத்துக்கொண்டிருந்த மேண்ட்சுகிச், நேர்த்தியாக கோல் அடித்தார். ஆட்டம் லெவல். அதோடு சரி. அதன்பின் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரம் 30 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை.

எக்ஸ்ட்ரா டைமில், 114-வது நிமிடத்தில் டென்மார்க் கோல் எல்லையை நோக்கி விறுவிறுவென முன்னேறிய ஆன்டே ரெபிச்சை, ஃபவுல் செய்தார் ஜார்ஜென்சன். பெனால்டி பாக்ஸில் அந்த ஃபவுல் நடந்ததால், மறு யோசனையின்றி ரெஃப்ரி, குரோஷியாவுக்கு பெனால்டி கொடுத்தார். டென்மார்க் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். VAR உதவியுடன் ரெஃப்ரி பெனால்டியை கன்ஃபார்ம் செய்தார். எல்லோரும், குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச் பெனால்டியை கோல் அடித்துவிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால், டென்மார்க் கோல்கீப்பர் ஷிமிசெல் அற்புதமாக Save செய்துவிட்டார். 120 நிமிட முடிவில் 1-1 என ஆட்டம் டிராவில் இருந்தது. 

ஷூட் அவுட்டில் குரோஷியா கோல்கீப்பர் சுபசிச் மொத்தம் மூன்று கோல்களைத் தடுக்க, 3-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. இது குரோஷியாவின் பெஸ்ட் ஆட்டம் இல்லையென்றாலும், முதல் நிமிடத்திலேயே கோல் கன்சீட் செய்தபோதும், பெனால்டி வாய்ப்பை மிஸ் செய்தபின்பும் அதிலிருந்து மீண்டு வந்தது பெரிய விஷயம். காலிறுதியில் குரோஷியா, உலகக் கோப்பையை நடத்தும் ரஷ்யாவை எதிர்கொள்கிறது. ரஷ்யா, ஸ்பெயினை வீழ்த்த சொந்த மண்ணில் ரசிகர்கள் அளித்த உற்சாகமும் ஒரு காரணம். எனவே, குரோஷியாவுக்கு இனிமேல்தான் சவாலே!



Trending Articles

Sponsored