கோலியின் லெவனில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்குமா? #ENGvIND



Sponsored



இன்று இங்கிலாந்து விளையாட்டு ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நாள். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து இன்று நள்ளிரவு கொலம்பியாவுடன் மோதுகிறது. அதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக இரவு 10 மணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் முதல் டி-20 போட்டியில் (#ENGvIND) மோதுகிறது. விம்பிள்டனில் ரஃபேல் நடால், சிமோனா ஹாலேப், முகுருசா ஆகியோர் இன்று சென்ட்டர் கோர்ட்டில் களம் இறங்குகிறார்கள். 

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உள்ளூரில் செம கெத்துடன் இந்தியாவைச் சந்திக்கவிருக்கிறது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவை 5-0 என ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், 1-0 என டி20 போட்டியிலும் தோற்கடித்தது இங்கிலாந்து. கிட்டத்தட்ட அதே ரிசல்ட்டை எதிர்பார்த்து கோலியின் இந்தியாவைச் சந்திக்கிறது இங்கிலாந்து!

Sponsored


ஓல்டு டிராஃபோர்டு!
முதல் டி20 போட்டி ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியை இங்குதான் விளையாடியது இங்கிலாந்து. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 35 ஓவர்களுக்குள் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, அதை கடைசிவரைக்கும் போராடி 49-வது ஓவரில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றிபெற்றது இங்கிலாந்து. ஓல்டு டிராஃபோர்டு பிட்ச் மற்ற இங்கிலாந்து பிட்ச்களைவிடவும் பெளலிங்கிற்கு சாதகமான பிட்ச். பவுன்சும், வேகமும் அதிகமாக இருக்கும். சுழற்பந்துக்கும் சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 
டாஸ் வெல்லும் அணி இங்கு முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும். எதிர் அணியைக் குறைவான ரன்களுக்குள் சுருட்டிவிட்டு சேஸ் செய்யலாம். 

Sponsored



 இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவன்?!

கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 221 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. பேட்டிங்கில் செம ஸ்ட்ராங் என்பதற்கு இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் குவித்த ரன்களே சாட்சி. 

ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், இயான் மோர்கன், ஹேல்ஸ், ரூட் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோருமே செம ஃபார்மில் இருப்பது இங்கிலாந்துக்குப் பெரிய பலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அதே ப்ளேயிங் லெவன்தான் இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடும் என எதிர்பார்க்கலாம். லயம் பிளன்கெட், கிறிஸ் ஜோர்டன், டேவிட் வில்லி வேகப்பந்து வீச்சாளர்களாவும், மொயின் அலி, ரஷித் ஸ்பின்னர்களாகவும் அணிக்குள் இருப்பார்கள். 

சுரேஷ் ரெய்னா இடம் காலி?!

இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் இன்னும் செட் ஆகவில்லை என்பதுதான் கோலியின் கவலை. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலுமே அணியை மாற்றிப்போட்டு சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் எடுத்தார் கோலி. ஆனால், அயர்லாந்துக்கு எதிராகவிளையாடுவதையும், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவதையும் ஒப்பிட முடியாதே... சுரேஷ் ரெய்னா அயர்லாந்துக்கு எதிரான இரண்டு 20/20 போட்டிகளிலும் விளையாடினார். முதல் போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தவர் இரண்டாவது போட்டியில் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடியிருந்தாலும் அவருக்கு இன்றைய அணியில் இடம் கிடைப்பது கஷ்டம்தான்.

ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, என்பதுதான் இந்தியாவின் டாப் 5 பேட்டிங் ஆர்டராக இருக்கும். மணீஷ் பாண்டே அயர்லாந்துக்கு எதிரான இரண்டு 20/20 போட்டிகளிலும் விளையாடினார். ஆனால், இன்று அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் ஸ்லாட்டில் இருப்பார். புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் என இரண்டு ஸ்பின்னர்களும் அணியில் இடம்பிடித்திருப்பார்கள். 

கிட்டத்தட்ட 2 மாத காலம் நடக்கப்போகும் தொடர் என்பதால் இரண்டு அணிகளுமே இன்று வெற்றிபெற்று பாசிட்டிவாக தொடரைத் தொடங்கும் ஆர்வத்தில் இருக்கும். பேட்டிங், பெளலிங் என இரண்டுமே களைகட்டும் என்பதால் இன்றிரவு சூப்பர் கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.



Trending Articles

Sponsored