சர்ச்சையில் சிக்கிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! பஞ்சாப் டி.எஸ்.பி பதவியை இழக்கிறார்?இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றிருந்த இளங்கலைப் பட்டம் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Sponsored


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுரை கௌரவப்படுத்தும் விதமாக, அவருக்கு காவல்துறை டி.எஸ்.பி பதவியைக் கடந்த மார்ச் மாதம் வழங்கியது அம்மாநில அரசு. இதையடுத்து, டி.எஸ்.பி பதவிக்காக அவரது சான்றிதழ்கள் சரிபார்க்கும் வேலையைக் காவல்துறை தொடங்கியது. இதற்காக ஹர்மன் ப்ரீத் அளித்திருந்த சான்றிதழ்படி, மீரட்டில் உள்ள சௌத்ரி ஷரன் சிங் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (B.A) படிப்பை கடந்த 2011-ம் ஆண்டு முடித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை சார்பில் அனுப்பியதில், அது போலியான பட்டம் என்பது தெரியவந்தது. 
இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக விஜிலென்ஸ் விசாரணைக் குழுவின் தலைவர் சஞ்சய் பரத்வாஜ், ``ஜலந்தர் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஹர்மன்ப்ரீத் கவுரின் சான்றிதழ்கள்குறித்து தகவல் தரும்படி கடந்த ஏப்ரல் மாதம் கேட்டிருந்தார். அதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஹர்மன்ப்ரீத் படித்தது தொடர்பான பதிவுகள் எதுவும் எங்களிடமில்லை. இந்தத் தகவலை அந்த அதிகாரியிடம் தெரிவித்துவிட்டோம்’’என்று கூறியிருந்தார். 

Sponsored


இதுதொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான மாநில உள்துறைக்குப் போலீஸார் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், உரிய இளங்கலைப் பட்டம் இல்லாததால், ஹர்மன்ப்ரீத் கவுர் டி.எஸ்.பி-யாகப் பதவியில் தொடர முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள பஞ்சாப் காவல்துறை டி.ஜி.பி., எம்.கே. திவாரி, ``ஹர்மன்ப்ரீத்தின் பட்டப்படிப்புச் சான்றிதழைச் சரிபார்ப்பதற்காகப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியபோது, அவர் குறிப்பிட்டிருந்த பதிவு எண், பல்கலைக்கழகப் பதிவேட்டில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது’’என்றார். இதனால், ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்ந்து டி.எஸ்.பி., பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

Sponsored
Trending Articles

Sponsored