24 ஆண்டுகள் கழித்து ஸ்வீடன் கால் இறுதியில் நுழைந்தது எப்படி?! #SWESUI



Sponsored



திறமையால் உள்ளே வருபவர்கள் ஒரு பக்கம் என்றால் தனது அதிர்ஷ்டத்தால் உள்ளே வருபவர்கள் இன்னொரு பக்கம். இதில் ஸ்வீடன் இரண்டாம் ரகம். சுவிட்சர்லாந்துடன் நடைபெற்ற ரவுண்டு ஆஃப் 16 போட்டியில் ஒரு கோல் போட்டு கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது ஸ்வீடன். சுவிட்சர்லாந்து இதுவரை ரவுண்டு ஆஃப் 16-ல் வெற்றிபெற்றதே இல்லை. இம்முறையும் அதே நிலமைதான். 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்வீடன் ரவுண்டு அஃப் 16 போட்டியில் ஜெயிக்கிறது. ஆனால், ரசிகர்களுக்கு முழு திருப்தியில்லை. போராடிக் கிடைத்த வெற்றிக்குத்தான் ருசி அதிகம். ஸ்வீடனுக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்பதால் கால்பந்து ரசிகர்கள் முழுமையாக இந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.

சுவிட்சர்லாந்து தனது டிஃபெண்டை மாற்றியாக வேண்டிய நிலமை. கோஸ்டா ரிகாவுடன் நடைபெற்ற போட்டியில் ஸ்டீஃபென் லைஸ்டெய்னர் மற்றும் ஃபேபியன் ஸார் யெல்லோ கார்டுகளை வாங்க, இந்தப் போட்டியில் இரண்டு பேரும் இல்லை. இது டிஃபென்ஸிவ் ஆட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படவில்லை. சுவிட்சர்லாந்து தோற்றது அவர்களின் அட்டாக்கிங் கோளாறுகளால் மட்டுமே. முதல் பாதியில் ஸ்வீடனின் ப்ரஷ்ஷரைச் சமாளித்த சுவிஸ் டிஃபெண்டர்கள் இரண்டாம் பாதியில் சமாளிக்க மொத்தமாக கோல் கீப்பர் கையிலேயே எல்லாப் பொறுப்பையும் கொடுத்துவிட்டார்கள். சரியான பாஸ்கள் இல்லை; மார்க்கிங் சரியாக இல்லை; பந்தை கோல் பாக்ஸிலேயே தவறவிடுவது; தடுக்க முயற்சிசெய்யாமல் கோல் கீப்பரைப் பார்ப்பது என எல்லா அபத்தங்களையும் செய்தார்கள் சுவிட்சர்லாந்து டிஃபெண்டர்கள். இதில் பந்தை எடுத்துக்கொண்டு சென்ற மார்டின் உல்சனை தள்ளிவிட்டுச் சிவப்பு அட்டையையும் வாங்கினார் மைக்கிள் லாங்.

Sponsored


Sponsored


மோசமான டிஃபெண்டிங் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சுவிட்சர்லாந்தின் மோசமான அட்டாக். கோலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கோட்டை விட்டுவிட்டார்கள் சுவிட்சர்லாந்து மிட் ஃபீல்டர்கள். ஸெர்தான் ஷக்கிரி சில வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால், அதைக் கோலாக்காமல் விட்டுவிட்டார். மொத்தம் 18 ஷாட்கள் அதில் 4 மட்டுமே டார்கெட்டை நோக்கிச் சென்றவை. அதிலும் ஒன்று கூட கோலாகவில்லை. 11 கார்னர் கிக்குகளும், 68 சதவிகித பால் பொசிஷன்களும் இருந்தபோதும் கோல்கள் போடவேயில்லை.

சுவிட்சர்லாந்து ஒரு பக்கம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றால் ஸ்வீடன் இன்னொரு பக்கம். இது உலகக் கோப்பையா என்று கேட்கும் அளவு ஒரு விளையாட்டு. வெறும் 68 சதவிகிதம் மட்டுமே பாஸ் அக்யூரெஸ்ஸி. தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் 80 சதவிகிதம் சரியான பாஸ்களை கொடுத்த அதே டீம்தான், இந்தமுறை பயங்கரமாகச் சொதப்பியது. மெக்சிகோவை ஜெயித்த அதே அணி, இம்முறை சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவேயில்லை.

சுவிட்சர்லாந்தின் டிஃபெண்ட் சொதப்பல்களால் கிடைத்த வாய்ப்புகளையும் ஒழுங்காகப் பயன்படுத்தாமல் 3 ஆன் டார்கெட் ஷாட் மட்டுமே அடித்தது ஸ்வீடன். மூன்றுமே தரமான ஷாட்டுகள். தடுத்த யான் சோமருக்கே பெருமை சேரும். ஸ்வீடன் மிட்ஃபீல்டர் எமில் ஃபோர்ஸ்பெர்க் அடித்த பந்தையும் சோமர் தடுத்திருப்பார். ஆனால், ஸ்வீடனுக்கு அடித்த அதிர்ஷ்டம், அந்தப் பந்து சுவிட்சர்லாந்து டிஃபெண்டர் அகென்ஜியின் காலில் பட்டு கோல்கீப்பரைத் தாண்டி கோல் போஸ்டுக்குள் சென்றுவிட்டது. இது ஃபோஸ்பெர்கின் முதல் உலகக் கோப்பை கோல். மார்டின் உல்சன் மூலம் ஒரு வாய்ப்பை உருவாக்கியது ஸ்வீடன். ஆனால், அதைத் தடுத்து சிவப்பு கார்டு வாங்கிவிட்டார் லாங். கோல் போஸ்டுக்கு அருகிலேயே ஒரு ஃப்ரீகிக் கிடைத்தது. ஆனால், அது கோலாகவில்லை. ஸ்வீடன் கடைசியில் ஒரு கோல் வித்தியாசத்தில் கால் இறுதிக்கு நுழைந்துவிட்டது. அடுத்த ஆட்டமும் இதே போல விளையாடினால் அதிர்ஷ்டம் கூட காப்பாற்றாது.



Trending Articles

Sponsored