``பிரேசில் மேட்ச் பார்த்தாலே வேற லெவல் ஃபீல் கிடைக்கும்” - ரஷ்யா சென்று வந்த நதான்யா உற்சாகம்Sponsoredஹாய் நதான்யா... ஹவ் ஆர் யூ” என்றதும், ``வணக்கம் அண்ணா. நான் நலமாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க” என்று எதிர்முனையிலிருந்து கொஞ்சு தமிழில் வியக்கவைத்தார் அந்த 16 வயதுச் சிறுமி.

சமீபத்தில், இந்தியாவின் ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்க்கவைத்தவர், நதான்யா. ஃபேஸ்ஃபுக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளியவர். உலக நாடுகள் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி வரும் உலகக் கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்கியபோது, வீரர்களுக்குப் பந்தை எடுத்துக்கொடுக்கும் நிகழ்வில், இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டவர். ரஷ்யா சென்றுவந்த உற்சாகத்தின் ஓர் அணுவும் குறையாதது நதான்யாவின் குரலில் வெளிப்பட்டது.

Sponsored


``அண்ணா, நான் ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன். ரஷ்யா போய்ட்டு வந்ததும் எனக்குள்ளே சில மாற்றங்கள் வந்திருக்கு. வேறு ஒரு நதான்யாவா திரும்பி வந்திருக்கேன். அங்கே கிடைச்ச சின்ன சின்ன மொமன்ட்ஸை மனசுல பதிச்சிருக்கேன். எனக்கு மூணு வயசா இருக்கும்போதே ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுட்டதா அப்பாவும் அம்மாவும் சொல்லுவாங்க. இது என் பேஷன். எனக்குக் கதை எழுதவும் ரொம்பப் பிடிக்கும். மியூசிக் கேட்கிறது, ஓவியங்கள் வரையுறதுன்னு ஃபுட்பால் தவிர சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் எடுத்துப்பேன். என் அண்ணன் ரூவெல் பேட்மிட்டன் ப்ளேயர். அவருடன் சேர்ந்து பேட்மிட்டனும் விளையாடுவேன்” என ஜெயன்ட் வீலில் பறக்கும் உற்சாகத்துடன் பேசுகிறார்.

Sponsored


``ரஷ்யா சென்றுவந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்” என்றதும் உற்சாகம் இரட்டிப்பானது. 

``இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லே. என் அம்மாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஃப்ரெண்டு ஒரு தகவலை ஷேர் பண்ணியிருந்தாங்க. அதில், முதல்கட்டமா 30 செகண்ட்ஸுக்கு ஃபுட்பால் விளையாடும் வீடியோவை அனுப்பணும்னு இருந்துச்சு. அப்படியே அனுப்பிவெச்சேன். அதைப் பார்த்துட்டு டெல்லிக்கு வரச்சொன்னாங்க. அங்கே சில டிரெய்னிங் கொடுத்தாங்க. அதில் செலக்ட் ஆகி ரஷ்யா போகும் வாய்ப்பு கிடைச்சது. ரஷ்யாவில் எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு. அங்கே பல ஃபுட்பால் பிளேயர்களைப் பார்த்து ஷேக் ஹேண்டு கொடுத்ததை நினைச்சால், இப்பவும் கனவு மாதிரி இருக்கு. எனக்குப் பிரேசில்தான் ரொம்பப் பிடிக்கும். பிரேசில் மேட்ச் பார்த்தாலே வேற ஒரு எனர்ஜி ஃபீல் கிடைக்கும். நான் அதிகமா ரசித்த பிரேசில் - கோஸ்டாரிகா மேட்ச்சை தொடங்குறதுக்காகப் பந்தை எடுத்துக்கொடுத்திருக்கிறேன். ஐ ஃபீல் வெரி பிரெளட் அண்ணா” என்கிறார் நதான்யா.

நதான்யாவின் தந்தை மேத்யூ ஜான், ``16 வயசு நதான்யாவுக்கு இது ஒரு பெரிய கனவாதான் இருந்திருக்கும். கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தாலும், அவள் படிக்கிறதெல்லாம் ஆந்திராவின் மதனப்பள்ளியில், ரிஷி வேலி போர்டிங் ஸ்கூல்லதான். மூணு வயசா இருக்கும்போது, ஃபுட்பால் மேலே வந்த ஆர்வம், இடையில திசை மாறிடுச்சு. இனி வேற ஏதாவது ஒரு பக்கம் கவனம் கொடுப்பான்னு நினைச்சுட்டிருந்தப்போ, திரும்பவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஃபுட்பால் பக்கம் திரும்பினாள். பொண்ணுக்கு எதுல ஆர்வம் இருக்கோ, அதையே விரும்பி செய்யட்டும். அதுவே அவள் எதிர்காலமா இருக்கட்டும்னு நானும் என் மனைவியும் உறுதியா இருக்கோம். 1600 பேர் கலந்துக்கிட்ட போட்டியில் முதல் ஆளாக செலக்ட் ஆகி, ரஷ்யா போய்ட்டு வந்ததெல்லாம் நதான்யாவோட தனிப்பட்ட முயற்சிதான். ஒரு பேரன்ட்ஸா அவளை ஊக்கப்படுத்தினது மட்டும்தான் எங்க பங்கு'' என்கிறார்.

அவரிடமிருந்து போனை வாங்கிய நதான்யா, ``அண்ணா, அப்பா சொல்றதை நம்பாதீங்க. அப்பாவும் அம்மாவும் கொடுத்த மோட்டிவேஷன்தான் என் சக்சஸுக்கு முக்கியக் காரணம். அவங்க ஆசியோடு சீக்கிரமே அப்ராடு போய் டிரெய்னிங் எடுத்துட்டு இந்தியாவுக்காக விளையாடுவேன். அப்படி இந்தியாவுக்காக ஜெயிச்சதும் என்னைப் பேட்டி எடுக்க ரெடியா இருங்க” என கெத்தாகச் சொல்கிறார் நதான்யா.

அவர் நம்பிக்கைக்குப் பரிசளிக்க வெற்றி தேவதை சிவப்புக் கம்பளமிட்டுக் காத்திருக்கிறாள். பிரகாசிக்க வா நட்சத்திரமே! Trending Articles

Sponsored