பாய்ச்சல் பாண்டியா... ஹிட்ஹாட் ரோஹித்... இங்கிலாந்தை விரட்டிய இந்தியா மாஸ்டர்ஸ்! #ENGvINDSponsoredஇந்தியா ஃபார்முக்கு வந்தால் என்ன ஆகும்? பெளலிங் பிட்ச்சில் அதுவும்  டி-20 கிரிக்கெட்டில் 198 ரன்கள்கூட அசால்ட்டாக அடிக்கப்படும். இங்கிலாந்து தன் அத்தனை அஸ்திரங்களையும் ஏவியபோதும் செம கூலாக சேஸிங்கை முடித்து, தொடரை வென்றிருக்கிறது கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. ரோஹித், பாண்டியா இருவரும்தான் ஹீரோஸ். இந்தியா தொடர்ந்து வெல்லும் ஆறாவது டி-20 சீரிஸ் இது! #ENGvIND

சேஸிங்... ரேஸிங்!
இந்திய அணியில் கோலி நிச்சயம் மாற்றங்கள் செய்ய வேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே ஓர் அதிரடி முடிவு, ஒரு எதிர்பாரா முடிவை எடுத்திருந்தார் கோலி. தினேஷ் கார்த்திக் உள்ளே வர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்க, சுரேஷ் ரெய்னாவுக்கே வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், முதல் மேட்ச்சின் சூப்பர் ஸ்டாரான குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹரை அணியில் சேர்த்திருந்தார் கோலி. பிரிஸ்டல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம் என்பதால் கோலி எடுத்த முடிவு இது. புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலக, அவருக்குப் பதிலாக சித்தார்த் கவுல் அணிக்குள் இடம்பிடித்திருந்தார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் செய்யத் தயங்கிய மாற்றத்தை நேற்று செய்துவிட்டார். ஜோ ரூட்டுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் இடம்பிடித்தார்.

Sponsored


ஜேஸன்... ஜோஸ்... மிரட்டல்!
டாஸ் வென்ற விராட் கோலி பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க, ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர் என அதிரடி கூட்டணி களம் இறங்கியது. தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே பட்லர் மூன்று பவுண்டரிகள். உமேஷ் யாதவின் இரண்டாவது ஓவரிலும் பட்லரின் பவுண்டரிகள் தொடர்ந்தது. உமேஷ் யாதவின் இரண்டாவது ஓவரை ராய் தன்வசம் எடுத்துக்கொண்டார். இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸர். உடனடியாக பெளலிங் மாற்றத்தைக் கொண்டுவந்தார் கோலி. ஐந்தாவது ஓவரை சித்தார் கவுல் வீச, பவர் ப்ளேவின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஆனால், பாண்டியாவின் இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. ராய் மட்டுமே இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடித்தார். பவர் ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து 73 ரன்கள் அடிக்க, கோலிக்கு கிலி பிடித்தது.

Sponsored


ஏழாவது ஓவரில் ஸ்பின்னருக்குத் தாவினார். சாஹல் வீசிய இந்த ஓவரில் ஒரு கேட்ச் டிராப். ஜேஸன் ராய் கொடுத்த கஷ்டமான வாய்ப்பை கவுல் தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே சிக்ஸர் பறந்தது. எட்டாவது ஓவரில் பாண்டியாவுக்கு பதிலாக கவுல் வந்தார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸர், 1 பவுண்டரியை இங்கிலாந்து அடித்தாலும் விக்கெட் விழுந்தது. இங்கிலாந்தின் முதல் விக்கெட்டாக பட்லரை வீழ்த்தினார் கவுல். 21 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் அடித்திருந்தார் பட்லர். 

பத்தாவது ஓவர் சாஹரிடம். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ராய், இரண்டாவது பந்தில் அவுட். 31 பந்துகளில் 67 ரன்கள் அடித்திருந்தார் ராய். இதில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர். ஆனால், அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸும் பவுண்டரிகளால் தெறிக்கவிட, இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்துகொண்டே போனது. 6-வது ஓவரில் 22 ரன்கள் கொடுத்த பாண்டியாவை மீண்டும் 12-வது ஓவரில்தான் கொண்டுவந்தார் கோலி. இந்தமுறை பிரமாதமாகப் பந்துவீசினார் பாண்டியா. இந்த ஓவரில் மோர்கன் மிகவும் திணறினார். இரண்டு ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து. கோலிக்கு நம்பிக்கை வந்தது. 

ஸ்பின்னர் சாஹல் விக்கெட் இல்லாமல் ஓவர்களை முடித்தார். நான்கு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்திருந்தார் சாஹல். 14-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அவுட். மோர்கன், ஹேல்ஸ் என இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் தூக்கினார் பாண்டியா. இருந்தாலும் 15 ஓவர்களில் 150 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இந்தியாவை அச்சுறுத்தியது இங்கிலாந்தின் ஸ்கோர்.

17-வது ஓவர் உமேஷ் யாதவிடம் வந்தது. பென் ஸ்டோக்ஸும், பார்ஸ்டோவும் மாறி மாறி பவுண்டரிகள் அடித்தனர். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. ஆனால், அடுத்த ஓவரிலேயே பாண்டியா ஸ்டோக்ஸ், பார்ஸ்டோவ் என இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடைசி மூன்று ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. மொத்தம் 198 ரன்கள். 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் ஓவரில் வாங்கிய அடியை அடுத்தடுத்த ஓவர்களில் சரிசெய்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. கிட்டத்தட்ட 200 ரன்களை நோக்கி இந்தியா சேஸிங்கைத் தொடங்கியது.

ஹிட்ஹாட் ரோஹித்!

முதல் இரண்டு போட்டிகளிலும் அவசரப்பட்டு அவுட் ஆன ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் ஃபார்முக்கு வந்தார். முதல் ரன்னையே சிக்ஸரில் தொடங்கினார். டேவிட் வில்லியின் இந்த ஓவரில் ரோஹித் சிக்ஸர் அடிக்க, தவான் பவுண்டரி அடித்தார். இரண்டாவது ஓவர் வீசிய ஜேக் பாலின் ஓவரில் ரோஹித் இரண்டு பவுண்டரிகள். ஆனால், டேவிட் வில்லியின் அடுத்த ஓவரில் தவான் அவுட். வழக்கம்போல சிங்கிள் டிஜிட்டில் காலியானார் தவான்.

கிறிஸ் ஜோர்டனின் நான்காவது ஓவரில் பறந்து பறந்து அடித்தார் ரோஹித். இரண்டு சிக்ஸர், 1 பவுண்டரி. பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ஜேக் பாலின் பந்துவீச்சில் கே.எல் ராகுல் அவுட். 2 சிக்ஸர் அடித்திருந்த ராகுல் 19 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியா 6 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் அடித்திருந்தது.

பவர் ப்ளே முடிந்தபிறகு ஒரு ஓவருக்கு பவுண்டரி, மற்றதெல்லாம் சிங்கிள்ஸ் என்கிற மோடிலேயே ஆடிக்கொண்டிருந்தது ரோஹித்- கோலி கூட்டணி. 10 ஓவர்களின் முடிவில் சரியாக 100 ரன்களைத் தொட அடுத்த 10 ஓவரில் 99 ரன்கள் அடிக்கவேண்டும் என டார்கெட். அதாவது ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை. ஆனால், ரோஹித்தும் கோலியும் பதற்றப்படாமல் ஆடினர். ஓவருக்குச் சரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்துக்கொண்டிருந்தனர். ப்ளங்கெட், ரஷித், ஜோர்டன் என எந்த பெளலரின் பெளலிங்கும் இந்தக் கூட்டணியின் முன் எடுபடவில்லை. 15-வது ஓவரில் கோலியின் விக்கெட்டை எடுத்தார் ஜோர்டன். ஸ்ட்ரெய்ட் பாலை கோலி நேராக அடிக்க அது காட் அண்டு  பெளல்டு ஆனது. 29 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார் கோலி. 

இங்கேதான் இன்னொரு ட்விஸ்ட். 31 பந்துகளில் 48 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலையில் சுரேஷ் ரெய்னா, தோனி என இரண்டு பவர் ஹிட்டர்கள் இருந்தும் ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். பாண்டியா வந்த வேலையை மிகச்சிறப்பாகச் செய்தார். ஜேக் பாலின் 17-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்களை இந்தியா அடிக்க டார்கெட் செம ஈஸியானது. 18-வது ஓவரை டேவிட் வில்லி வீசினார். இந்த ஓவரில் ரோஹித் ஷர்மா ஒரு பவுண்டரி அடிக்க, பாண்டியா புகுந்து விளையாடினார். 2 பவுண்டரி, 1 சிக்ஸர். இந்த ஓவரில் 20 ரன்கள். 95 ரன்களுடன் களத்தில் நின்ற ரோஹித் செஞ்சுரி அடிப்பாரா, இல்லையா என சஸ்பென்ஸ் எகிற, ஜோர்டனின் அடுத்த ஓவரில் 1 பவுண்டரி, ஒரு சிங்கிள் அடித்து 100 ரன்களைத் தொட்டார் ரோஹித்.

டி-20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா அடித்திருக்கும் மூன்றாவது சதம் இது. எப்போதுமே ``தோனி ஃபினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்'' எனச் சொல்வதுபோல இந்த மேட்ச்சை சிக்ஸரோடு முடித்துவைத்தார் ஹர்திக் பாண்டியா. கடைசி ஓவர் பரபரப்பு எதுவும் இல்லாமலேயே மேட்ச் முடிந்தது. தொடரை வென்றது இந்தியா. 

இந்த வெற்றிக்கு இந்தியா எடுத்திருந்த சில அதிரடி முடிவுகளே காரணம். 1 ஸ்பின்னரோடு இறங்கியது, ஹர்திக் பாண்டியாவைச் சரியாக டெத் ஓவர்களில் பயன்படுத்தியது, ரெய்னா- தோனிக்கு முன்னால் பாண்டியாவை களமிறக்கியது என எல்லாமே சூப்பர் மூவ். அடுத்து வருகிற 12-ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்தியா. இனி அனல் பறக்கும்!Trending Articles

Sponsored