481 வெளுத்த பிட்ச்... கோலி படையிடம் இங்கிலாந்தின் பேட்டிங் பலிக்குமா?! #ENGvsIND



Sponsored



``கால்பந்து உலகக் கோப்பை இந்த ஆண்டு... கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு... It's coming home'' என ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்களின் கனவு பாதி கலைந்துவிட்டது. குரோஷியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்திருக்கிறது இங்கிலாந்து. அடுத்தது கிரிக்கெட் உலகக் கோப்பை. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு, ஆனால் இதுவரை உலகக் கோப்பை வென்றதே இல்லை என்பதுதான் இங்கிலாந்தின் இதுவரையிலான வீர வரலாறு! ஆனால், இந்தமுறை மாற்றியே ஆகவேண்டும் என்கிற வெறியில் இருக்கிறது இங்கிலாந்து. அடுத்த ஆண்டு இதே ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை. அதற்கான முன்னோட்டமாகத்தான் இப்போது இங்கிலாந்தில் தொடங்கியிருக்கிறது கோலியின் லெவனுக்கு எதிரான கிரிக்கெட் யுத்தம். #ENGvIND

இந்தியாவிடம் டி20 தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து ஒருநாள் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதற்காக கடந்த ஒரு வாரமாகப் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. 481 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை புரட்டிப் புரட்டி அடித்த அதே நாட்டிங்ஹாம் மைதானத்தில் இங்கிலாந்து இன்று இந்தியாவைச் சந்திக்க பெரும் கனவுகளுடன் காத்திருக்கிறது. இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டி!

Sponsored


வரலாறு உதவாது?!
டி20 தொடரை வென்றுவிட்ட மகிழ்ச்சியில் கோலியின் டீம் ஒருநாள் தொடரை சாதாரணமாக விளையாடிவிட முடியாது. முன் எப்போதையும்விட பலமான அணியாக இருக்கிறது இங்கிலாந்து. டி20 வேறு... ஒருநாள் போட்டிகள் வேறு... கடைசியாக இங்கிலாந்து விளையாடிய 21 ஒருநாள் போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறது. இதில் 2015 உலகக் கோப்பை வின்னரான ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் 4-1 எனவும், சொந்த ஊரில் 5-0 எனவும் தோற்கடித்து வரலாறு படைத்தது. இந்தியாவையும் 3-0 எனத் தோற்கடிக்கவேண்டும் என்பதுதான் இங்கிலாந்தின் கேம் பிளான். 

Sponsored


பேட்டிங் பலம்!
இந்தியா, இங்கிலாந்து என இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் செம ஸ்ட்ராங். இன்று போட்டி நடைபெறவிருக்கும் நாட்டிங்ஹாம் பிட்ச்சும் பேட்டிங்குக்கு ஸ்ட்ராங்தான். சரியாக 23 நாள்களுக்கு முன்பு இதே பிட்ச்சில்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 50 ஓவர்களில் 481 ரன்கள் அடித்தார்கள். அதனால் இன்று முழுக்க முழுக்க சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்குமாக இருக்கும்.


 

ஜோ ரூட் இருப்பாரா?
ஜேஸன் ராய், ஜானி பார்ஸ்டோவ்தான் இங்கிலாந்தின் சூப்பர் ஓப்பனிங் கூட்டணி. இருவருமே இந்த ஆண்டு செம ஃபார்மில் இருக்கிறார்கள். பார்ஸ்டோவ்தான் இந்த ஆண்டு விளையாடிய அத்தனை அணிகளுடனும் சதம் அடித்திருக்கிறார். இன்று விளையாடும் நாட்டிங்ஹாம் பிட்ச்சில்தான் கடந்த மாதம் 5 சிக்ஸர், 15 பவுண்டரி உட்பட 92 பந்துகளில் 139 ரன்கள் அடித்திருந்தார். அதேபோல, ஜேஸன் ராயும் பேட்டிங்கில் வெளுக்கிறார். இந்தக் கூட்டணி முதல் 15 ஓவர்களுக்குத் தாக்குப்பிடித்து நின்றுவிட்டால் இந்தியாவுக்குத் தலைவலிதான். அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் ஆகியோர் அடுத்தடுத்து விளையாடுவார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீரிஸில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் அவருக்கு பதிலாக இடம்பிடித்திருந்தார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக அணிக்குள் இப்போது நுழைகிறார்.

இவருக்கு பதிலாக ஒருவரை பலி கொடுக்கவேண்டும். கேப்டன் இயான் மோர்கன் நிச்சயம் அலெக்ஸ் ஹேல்ஸை விட்டுக்கொடுக்கமாட்டார். ஜோ ரூட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 50 ரன்கள்தான் அடித்தார். அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ஜோ ரூட் இன்று அணிக்குள் இருக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸின் பேஸ் பெளலர்கள் டேவிட் வில்லியும், மார்க்வுட்டும் இன்று இங்கிலாந்தின் முக்கிய ஸ்ட்ரைக் பெளலர்களாக இருப்பார்கள். லயம் ப்ளங்கெட் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார். ஆஃப் ஸ்பின்னராக மொயின் அலியும், லெக் ஸ்பின்னராக ஆதில் ரஷித்தும் அணிக்குள் இருப்பார்கள்.

கோலியின் ப்ளேயிங் லெவன்?
இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் கேப்டன் கோலிக்குத்தான் இப்போது பிரச்னையே. ரன் மெஷின் கோலிக்கு இங்கிலாந்து பிட்ச்கள்தான் பெரிய வீக்னெஸ். இங்கிலாந்து மைதானங்களில் கோலி இதுவரை சிறப்பாக விளையாடியதில்லை. அதனால் அவர் டி20 போட்டிகளில் செய்ததுபோல ராகுலுக்கு 1 டவுன் இடத்தைவிட்டுவிட்டு, 2 டவுனில் இறங்கலாம் என எல்லோரும் அட்வைஸ் சொல்கிறார்கள். ஆனால், கோலிக்கு 1 டவுன் இடத்தை விட்டுத்தருவது எமோஷனலான முடிவாக இருக்கும். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து 1 டவுனில்தான் விளையாடிவருகிறார் கோலி.

ரோஹித் ஷர்மா, ஷிகர்தவான், விராட் கோலி, கே.எல் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக் என்பதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். டி20 போட்டிகளில் கார்த்திக்குக்கு வாய்ப்பு தராமல் சுரேஷ் ரெய்னாவுக்கே வாய்ப்பளித்தார் கோலி. ஆனால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்துக்கொண்டால் ரெய்னாவுக்கு பதில் கார்த்திக்கை களமிறக்குவதே சிறந்த முடிவாக இருக்கும். ஆல் ரவுண்டர் இடத்தில் ஹர்திக் பாண்டியா இருப்பார். இன்று  இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். காயம் காரணமாக கடைசி டி20 போட்டியில் விளையாடாத புவனேஷ்வர் குமார் இன்றைய அணியில் இடம்பிடிப்பார். இவருடன் உமேஷ் யாதவ் அல்லது தீபக் சாஹர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்பின்னர்களாக சாஹலும், குல்தீப் யாதவும் அணிக்குள் இருப்பார்கள். 

இன்று `பறக்கும்... பந்து பறக்கும்..,' என்பதால் டாஸ் வென்றால் இரண்டு கேப்டன்களுமே ஃபீல்டிங்கைத்தான் முதலில் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம். இந்தியாவா... இங்கிலாந்தா? பேட்டிங்கில் சிறந்த அணி எது என்று இன்று இரவு தெரிந்துவிடும்!



Trending Articles

Sponsored