`அது ஒரு சிறந்த தருணம்'- 2002ல் ஹீரோவான கைஃப், அதே நாளில் ஓய்வை அறிவித்தார்!இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sponsored


இந்திய கிரிக்கெட்டின்  ‘தாதா’ கங்குலி நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் டி- ஷர்ட்டை கழற்றிச் சுற்றியது ஞாபகம் இருக்கா? அது ஞாபகம் இருந்தால், அதற்குக் காரணமாக இருந்த அந்த முகமது கைஃப் - யுவராஜ் பார்ட்னர்ஷிப் கண்டிப்பாக ஞாபகம் இருக்கும். தாதா டி-ஷர்ட்டை கழற்றிச் சுற்றியது ஜூலை 13, 2002-ல் தான். இந்தப் போட்டியில், இந்திய அணி வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருந்த முகமது கைஃப், தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, ஃபீல்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த காலத்தில், பொக்கிஷம்போல கிடைத்தவர் முகமது கைஃப். இதற்கு முன், இப்படி ஒரு ஃபீல்டரை இந்திய அணி கண்டதில்லை. அவரது சுறுசுறுப்பும் வேகமும் மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. தோனியின் மின்னல்  வேகமாக ஸ்டெம்பிங், ரெய்னாவின் அபாரமான ஃபீல்டிங், ஜடேஜாவின் த்ரோ இவை அனைத்தும் ஒருங்கே காணப்பட்ட வீரர் கைஃப். இக்கட்டான கட்டத்தில் கடினமான கேட்சுகளைப் பிடித்து, அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்.

Sponsored


ஓய்வுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவும், அறிக்கையும் பதிவிட்டுள்ளார். அதில், ``தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியில் இடம்பிடித்ததைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று, இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் இந்தியக் கொடியை ஏந்திச் சென்றதைச் சொல்ல வார்த்தை இல்லை. ஜூலை 13-ம் தேதி 2002, அது ஒரு சிறந்த தருணம். அது நடந்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது எனக்கு 21 வயது. இந்திய அணி 1983-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பையை வென்று, 19 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அங்கு வெற்றியைப் பதிவு செய்தோம். 124 ரன்கள் பார்ட்னர்ஷிப். அது ஒரு மாயாஜால வெற்றி. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 328 ரன்கள் குவித்திருந்தது. சேவாக், சச்சின், டிராவிட் என முன்னணி வீரர்கள் அவுட்டாகி வெளியேறினர். நாங்கள் வெற்றிபெறப் போவதில்லை எனக் கருதிய எனது குடும்பத்தினர், மேட்சைப் பார்க்கவில்லை. அவர்கள், இந்தப் போட்டியைத் தவறவிட்டுவிட்டார்கள்'' எனக் கூறியுள்ளார். இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய சக வீரர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored