விம்பிள்டன் கிளாசிக்… ஆறரை மணி நேரம் சளைக்காமல் போராடிய ஐஸ்னர் – ஆண்டர்சன்! #Wimbledon



Sponsored



ஜான் ஐஸ்னர் – கெவின் ஆண்டர்சன் இருவரும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான்கள் இல்லை. இருவரும் கிராண்ட் ஸ்லாம் வென்றதில்லை. ஏஸ் சர்வ், பேக் ஹேண்ட், ஃபோர் ஹேண்ட் என பிரத்யேகமான ஷாட்களில் ஸ்பெஷலிஸ்ட் இல்லை. ஆனால், இந்த இருவருக்கும் டென்னிஸ் ரசிகர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர். #Wimbledon

ஐஸ்னர் – ஆண்டர்சன் மோதிய 2018 விம்பிள்டன் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி 6 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற மூன்றாவது போட்டி. நீண்ட நேரம் நடந்த போட்டி என்பதற்காகவே இது சிறந்த மேட்ச் என்றாகிவிடுமா என்றால், நிச்சயம் இல்லை. டென்னிஸ் வரலாற்றில் ரைவல்ரி இல்லாத எந்த மேட்ச்சும் டாப் -10 போட்டிகளில் இடம்பெற்றதில்லை. அதற்காக, ஐஸ்னர் – ஆண்டர்சன் மோதலை சாதாரண போட்டி என்றும் கடந்துவிட முடியாது.

Sponsored


டென்னிஸ் என்பது எலைட் கேம். இதில் ஆற்றலைவிட நுணுக்கத்துக்கே முக்கியத்துவம்; அழகுக்கே ஆராதனை. அதனால்தான், ரோஜர் ஃபெடரர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு ஷாட்டும் கொண்டாடப்படுகிறது. அரிதினும் அரிதாக சில சமயங்களில் ஆற்றல் கொண்டாடப்படுவதுண்டு. ஐஸ்னர் – ஆண்டர்சன் மோதல் இவ்வளவு பாராட்டு பெறுவதற்குக் காரணம் அவர்களது ஆற்றல்; நுணுக்கங்களோ, திறமையோ அல்ல.

Sponsored


ஐந்து செட் வரை நீடிக்காமல், மூன்று மணி நேரத்தில் முடியும் கிராண்ட் ஸ்லாம் செமி ஃபைனல்களில் நிச்சயம் சுவாரஸ்யம் இருப்பதில்லை. வியர்க்க வியர்க்கத்தான் ஆட்டம் சூடு பிடிக்கும். இருவரும் மாறிமாறி செட்டைக் கைப்பற்றும்போதுதான் ஆட்டத்தில் அனல் பறக்கும். ரைவல்ரி உயிர்பெறும். நேற்று, ஆறு மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 7-6 (6), 6-7 (5), 6-7 (9), 6-4, 26-24 என்ற செட் கணக்கில் ஆண்டர்சன் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறினார். ஆறரை மணி நேரத்தில் ஐந்தாவது செட் மட்டுமே மூன்று மணி நேரம் நீடித்தது. மூச்சு முட்டியது. பார்க்கும் நமக்கே அயர்ச்சியாக இருந்தது. இந்த இடத்தில்தான் திறமையைவிட இருவரின் பொறுமையும், இருவரின் ஆற்றலும் சோதிக்கப்பட்டது. முடிவில் ஆண்டர்சன் வென்றார் என்றாலும், ஐஸ்னர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

ஏனெனில், இந்த மாரத்தான் ஐஸ்னருக்குப் புதிதல்ல. இதே விம்பிள்டனில் 2010-ல் பிரான்ஸின் நிகோலஸ் மஹட்- ஐஸ்னர் மோதிய போட்டி 11 மணி நேரம் ஐந்து நிமிடம் நீடித்தது. ஆனால், நேற்று ஐஸ்னர் சோர்வடைந்துவிட்டார். ‛என் இடது கணுக்கால் செத்துவிட்டது’ என போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார். ஆண்டர்சன் நிலையும் அதுதான். விட்டால், அப்படியே படுத்துவிடுவார் போலிருந்தது.  

போட்டி முடிந்து இரு பைகளையும் தோளில் சுமக்க முடியாமல் சுமந்து, டிரெஸ்ஸிங் ரூம் செல்லும்போது நிருபர் குறுக்கிட்டு பேட்டி எடுத்தார். நிருபர் மைக்கை நீட்டியதும் முதல் வேளையாக அந்தப் பைகளை கீழே போட்டு நிலைகுலைந்து நின்றார் ஆண்டர்சன். இனி அவர், ஃபைனலில், நடால் அல்லது ஜோகோவிச்சை எதிர்கொள்ளக் கூடும். இரண்டாவது முறையாக ஆண்டர்சன், கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறி இருக்கிறார். வேடிக்கை என்னவெனில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் ஃபைனலில், நடாலிடம் கோப்பையை இழந்தார் ஆண்டர்சன்.

ஐந்தாவது செட்டில் 7-7, 10-10, 17-17 என்றிருந்த தருணங்களில், ஆண்டர்சன் பிரேக் பாயின்ட் எடுத்திருந்தால் இருவரும் இவ்வளவு சோர்வடைந்திருக்க மாட்டார்கள். ஆண்டர்சன் பிரேக் செய்யத் தவறினார். ஆட்டம் 99 கேம் வரை நீடித்தது. இதில், 53 ஏஸ் சர்வ்களை விளாசியிருந்தார் ஐஸ்னர். ஆண்டர்சன் 49 ஏஸ் சர்வ்களே அடித்திருந்தாலும், நான்குமுறை அவர் ஐஸ்னரின் சர்வை பிரேக் செய்தார். அதிவேக சர்வ், அதிக ஏஸ் சர்வ் வீசியிருந்தாலும், ஐஸ்னர் தோல்வியடைக் காரணம், ஆண்டர்சனின் ஆற்றல். எது எப்படியோ சில பிரேக் பாயின்ட்களுடன், சில சாதனைகளையும் அரங்கேற்றியது இந்த ஆட்டம்.

சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், இந்தப் போட்டி மாரத்தான் போல நீடிக்கக் காரணம் விம்பிள்டன் விதிமுறைகள். ஒரு கட்டத்தில், டை பிரேக்கர் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசிகர் ஒருவர், "Come on! We want to see Rafa!" என உரக்கக் கத்தி விட்டார். `மேட்ச் இப்ப முடியாது போல, நீ சாப்பிட்டுத் தூங்கு’ என பிள்ளைகளுக்கு போன் செய்துவிட்டனர் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்கள். விம்பிள்டன் விதிப்படி ஐந்தாவது செட், டை பிரேக்கராகக் கருதப்படுவதால், ஆட்டம் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. `இந்த விதிமுறைகளைக் கொஞ்சம் மாற்ற வேண்டும். ஐந்தாவது செட்டில் 12 – all என்றிருக்கும்போதே டைபிரேக்கரைப் பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பான விவாதத்தில் நான் பங்கேற்பேன்’’ என பிரஸ் மீட்டில் சொன்னார் ஆண்டர்சன்.

முன்பு, வெள்ளைச் சீருடையை மாற்ற வேண்டும் என வீரர்கள் கொடி பிடித்தனர். இப்போது விதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விதிகளை மாற்றினால், இதுபோன்ற கிளாசிக் போட்டிகளுக்கு வாய்ப்பிருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், விம்பிள்டன் ஒருபோதும் அதன் தனித்துவத்தை, மகத்துவத்தை இழக்காது. 



Trending Articles

Sponsored