கொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன்!



உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிவாகை சூடிய பிரான்ஸ் அணியின் விருதும் வழங்கும் நிகழ்ச்சி மழையில் நனைந்தபடியே நடைபெற்றது.

Sponsored


கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. முன் எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இந்த தொடரில் அரங்கேறியது. மிகவும் எதிர்பார்த்த, போர்ச்சுகல், அர்ஜென்டினா, பிரேசில், இங்கிலாந்து அணிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து சீக்கரமே தொடரிலிருந்து வெளியேறின. யாருமே எதிர்பார்க்காத குரோஷியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இப்படியான தொடரின் இறுதியாட்டம் இன்று நடைபெற்றது. ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் பிரான்ஸூக்கு கிடைத்த ஃபீரி கிக் வாய்ப்பு முதல் கோலுக்கு வழிவகுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னணி வகித்தது.  தொடர்ந்து 27 வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி குரோஷியா கோல் அடித்ததால், இரு அணிகளுக்கும் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. தொடர்ந்த ஆட்டம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான், கோல் அடிக்க 2-1 என்ற கோல்கணக்குடன் முதல்பாதி முடிந்தது. இரண்டாம் பாதியில் 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா ஒரு கோல் அடித்தார்.  65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார்.  இதனால் 4-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியா கோல் அடிக்க 4-2 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று வாகை சூடியது. 20 ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸ்
வெற்றி பெற்றது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கரைபுரண்டு ஒடச்செய்தது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இதையடுத்து மழை பெய்ததால் பரிசளிப்பு நிகழ்ச்சி மழையிலே நடத்தப்பட்டது.

Sponsored


Sponsored


வெற்றி மழையில் நனைந்த பிரான்ஸ் வீரர்கள், கூடுதலாக இயற்கை மழையிலும் நனைந்தபடியே பரிசுகளை பெற்றுக்கொண்டனர். முதல் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பணம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 188 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ரொக்கபரிசுகளை தொடர்ந்து, தொடரில் சிறந்த முறையில் செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி, குரோஷிய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லுகா மோட்ரிக்குக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. 2வது 3வது இடம்பிடிப்போருக்கு வெள்ளிப்பந்து வெண்கலபந்து வழங்கபடுகிறது.பெல்ஜியத்தின் எடன் ஹசார்ட் வெள்ளி பந்தையும், பிரான்ஸ் அணியை சேர்ந்த ஆண்டோனி கீரிஸ்மான் வெண்கலபந்தையும் பெற்றனர். 

இங்கிலாந்தை சேர்ந்த  ஹேரி கேன் தங்ககாலணி விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருதை பெல்ஜியத்தின் திபாட் கோர்டியோஸ் பெற்றார். இளம் வீரருக்கான விருதை 19 வயதேயாகும் பிரான்ஸ் வீரர் மாப்பே பெற்றார். 



Trending Articles

Sponsored