ரியல் மாட்ரிட்-10, பார்சிலோனா-11...பி.எஸ்.ஜி அதுக்கும் மேல.. உலகக் கோப்பையில் கிளப்களின் பங்கு!



Sponsored



பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடட் என்று கிளப்களுக்காக எப்போதும் முட்டி மோதிக்கொள்ளும் கால்பந்து ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை நடக்கும் அந்த 1 மாதம்தான் கொஞ்சம் ஓய்விருக்கும். மற்ற ஆண்டுகளில், லீக் சீசன் முடிந்தாலும் டிரான்ஸ்ஃபர் விண்டோ (Transfer Window) பகையைக் கிளறிக்கொண்டே இருக்கும். இந்த உலகக் கோப்பை நேரத்தில் மட்டும்தான் வீரர்களின் டிரான்ஸ்ஃபர் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருப்பார்கள். ஆனால், ஒருசில வெறித்தனமான ரசிகர்களை உலகக் கோப்பையாலும் சமாதானப்படுத்த முடியாது. 

ஸ்பெயின் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல் அடிக்க, நம்ம ஊர் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் போர்ச்சுகலா, ஸ்பெய்னா என்று பரிதவித்துப் போனார்கள். அந்தப் போட்டியில் நாச்சோ கோலடித்தபோது `ரியல் மாட்ரிட் ப்ராடக்ட்' என காலர் தூக்கி கெத்துக் காட்டினார்கள். அதே, இங்கிலாந்து ஆட்டங்களில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வீரர்கள் பட்டையைக் கிளப்ப, மற்ற கிளப்களை ஆதரிக்கும் இங்கிலாந்து ரசிகர்களுக்குக் கொஞ்சம் சங்கடமான நிலைதான். மற்ற அணிகளில் விளையாடும் தங்கள் கிளப் வீரர்கள் கோல் போடும்போதெல்லாம் அவர்கள் சமாதானம் தேடிக்கொண்டனர். இப்படி விடாது உலகக் கோப்பை நேரத்திலும் கிளப் களேபரங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. 

Sponsored


இப்போது உலகக் கோப்பை முடிந்துவிட்டது. எந்த கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்? எந்த கிளப் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்துள்ளது? அதைப் பற்றிய ஓர் அலசல்...

Sponsored


ஒரு சில வீரர்கள் உலகக் கோப்பைக்கு முன்பு வேறு அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்கள் அடித்த கோல்கள் புதிய அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக நைஜீரிய வீரர் ஒடேபோ ஜூன் 11-ம் தேதி பிரான்ஸ் அணியிலிருந்து ஸ்டோக் சிட்டி அணிக்கு மாறியுள்ளார். அவர் அடித்த கோல் ஸ்டோக் சிட்டி அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகுதான் ரியல் மாட்ரிட் அணியிலிருந்து யுவன்டஸ் அணிக்கு மாறியுள்ளார். அதனால் அவரது கோல்கள் ரியல் மாட்ரிட் கிளப் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில வீரர்கள் தங்கள் அணியிலிருந்து `லோன்' மூலம் வேறு அணிக்குக் கடந்த சீசனை விளையாடியுள்ளனர். அவர்களது கோல் அவர்களின் சொந்த அணியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கிரிசோவியாக் PSG அணி வீரர். ஆனால், கடந்த சீசன் லோன் முறையில் வெஸ்ட் ப்ரோம்விச் ஆல்பியான் அணிக்கு விளையாடினார். அவரது கோல் PSG அணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளது. 

 

இந்தத் தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, அதிக கோல் அடித்தது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரர்கள். 64 போட்டிகளிலும் சேர்த்து அடிக்கப்பட்ட 169 கோல்களில், ஓன் கோல்கள் தவிர்த்து 157 கோல்கள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் PSG வீரர்கள் மட்டும் 13 கோல்கள் அடித்துள்ளனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 2 கோல்களே அடித்த நிலையில், 19 வயது இளம் புயல் எம்பாப்பே 4 கோல்கள் அடித்து `சிறந்த இளம் வீரர்' விருதையும் வென்று அசத்தினார். அவர்கள் தவிர்த்து உருகுவே ஸ்ட்ரைக்கர் கவானி 3 கோல்கள் அடித்தார். தாமஸ் முனீர், தியாகோ சில்வா, கிரிசோவியாக், டி மரியா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளியது இளம் டாட்டன்ஹாம் படை. இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் 6 கோல் அடித்து `கோல்டன் பூட்' விருது வென்றார். தென் கொரிய கேப்டன் சன் 2 கோல்களும், ட்ரிப்பியர், வெர்டோங்கன், அல்லி, எரிக்சன் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர். பிரீமியர் லீக் அரங்கில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஸ்பர்ஸ் அணிக்கு, இந்தச் செயல்பாடு மிகப்பெரிய நம்பிக்கை. 

இப்போதுதான் கிளாசிகோ மோதல்..! ஆரம்பகட்டத்தில் ரொனால்டோ, மோட்ரிச், நாச்சோ, க்ரூஸ் என மாட்ரிஸ்டாக்கள் பட்டையைக் கிளப்பினாலும், ஒரு எதிர்பாராத நட்சத்திரத்தால் ஒரு கோல் வித்தியாசத்தில் ரியல் மாட்ரிட் அணியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது பார்சிலோனா. ரியல் மாட்ரிட் - 10, பார்சிலோனா - 11..! அனைவரும் எதிர்பார்த்ததுபோல் மாட்ரிட்டுக்காக அதிக கோல் அடித்தது ரொனால்டோதான். ஆனால், பார்சிலோனாவுக்கு..? மெஸ்ஸியோ, சுவாரஸோ இல்லை. மினா... 23 வயது இளம் கொலம்பிய டிஃபண்டர் எர்ரி மினா. மிக முக்கியமான கட்டங்களில் கொலம்பிய அணியைத் தன் கோல்களால் காப்பாற்றிய இவர்தான் இந்தத் தொடரில் அதிக கோல் அடித்த டிஃபண்டர். இந்த இரு அணிகளின் இன்னொரு வைரியான அத்லெடிகோ மாட்ரிட் அணியின் வீரர்களும் 8 கோல்கள் அடித்துள்ளனர். 

பிரீமியர் லீகில், 8 கோல்கள் அடித்து ஸ்பர்ஸுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மான்செஸ்டர் யுனைடட். கடந்த சீசனில் வாங்கப்பட்ட ரொமேலு லுகாகு அதிகபட்சமாக 4 கோல்கள் அடித்தார். லிங்கார்ட், போக்பா, மார்கோஸ் ரோயோ, ஃபெலாய்னி ஆகியோர் ஒரு கோல் அடித்தனர். அவர்களின் வைரி மான்செஸ்டர் சிட்டி 5 கோல்கள் அடித்தது. மற்றொரு முன்னணி அணியான செல்சீ சார்பிலும் 5 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அர்செனல்..? இங்கும் அவர்களின் நிலை பரிதாபம்தான். கிரானித் சகா அடித்த ஒரு கோல் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல். அந்த அணி வீரர்களில், பெரும்பாலானோர் உலகக் கோப்பையில் விளையாடாததையும் கருத்தில் கொள்வது அவசியம். 

மற்ற முன்னணி அணிகளில், யுவன்டஸ், லிவர்பூல், வியேரல் சார்பில் 4 கோல்கள் அடிக்கப்பட்டன. வியேரல் அணிக்காக அடிக்கப்பட்ட 4 கோல்களுமே டெனிஸ் செரிஷேவ் அடித்தவை. அவர் ஒரு ஓன் கோலும் அடித்துள்ளார். பெசிக்டாஸ், இன்டர் மிலன், லீசெஸ்டர் சிட்டி அணிகளின் சார்பில் 3 கோல்கள் அடிக்கப்பட்டன. 

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவெனில் ஐரோப்பாவின் பெரும் தலைகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கடந்த சீசனில் அந்த அணிக்காக 41 கோல்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் இருந்த போலாந்து கேப்டன் லெவண்டோஸ்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. உலகக் கோப்பையில் 10 கோல்கள் அடித்த ஜெர்மனியின் துருப்புச் சீட்டு தாமஸ் முல்லர், கிம்மிச், போடங், ஹம்மல்ஸ், ஸ்பெய்ன் நடுகள வீரர் தியாகோ அல்கன்டாரா என ஒருவர் கூட கோலடிக்கவில்லை. அவர்களுக்காக லோனில் விளையாடும் ஜேம்ஸ் ராட்ரிக்யூஸ், கடந்த உலகக் கோப்பையில் கோல்டன் பூட் வென்றவர். அவர்கூட இந்தத் தொடரில் கோல் அடிக்கவில்லை என்பதுதான் உச்சகட்ட கொடுமை!



Trending Articles

Sponsored