`சாதிக்கறதுக்கு ஆண்டவன் பணம் கொடுக்கலையே'- வறுமையில் தவிக்கும் வீராங்கனை கண்ணீர்Sponsoredவலு தூக்கும் போட்டியில் பல வெற்றிகளை பெற்று திறமையிருந்தும் பணம் இல்லாததால் தென்னாப்பிரிக்காவில் உலக அளவில் நடைபெறும் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தும் முடியாமல் தவித்து வருகிறார் மாணவி லோகப்பிரியா. `வலு தூக்குறதுக்கு சக்தியைக் கொடுத்த ஆண்டவன் சாதிக்கறதுக்குப் பணத்தைக் கொடுக்கலையே'' என வேதனை தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் லோகப்பிரியா. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்த மாணவி பள்ளிக்காலத்திலிருந்தே வலு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டவர். அதனால் பல போட்டிகளில் பங்கு கொண்டு தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றிருக்கிறார். வலு தூக்கும் போட்டியில் சிறந்து விளங்குவதோடு தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்ததால் இரும்பு பெண்மணி என்ற பட்டமும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளவதற்கு வாய்ப்பு கிடைத்தும் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Sponsored


இது குறித்து லோகப்பிரியாவிடம் பேசினோம். ``எங்க வீட்டில் என்னோடு சேர்த்து மூன்று பெண் குழந்தைகள். நான்தான் மூத்தவள். எங்க அம்மா டெய்லரிங் தொழிலில் கூலி வேலை பார்த்துதான் எங்களை கவனித்துக் கொள்வதோடு படிக்கவும் வைக்கிறார். இந்த நிலையில் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே நான் வலு தூக்கும் வீராங்கனையாக ஆசைபட்டேன். இதை எங்க அம்மாவிடம் சொன்னேன். `வறுமையை விரட்டுறதுக்கே நாம போராடிகிட்டு இருக்குற இந்த நேரத்தில் வலு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு பயிற்சியெல்லாம் எடுக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள நிறைய செலவாகும். எந்தப் பற்றுதலும் இல்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும்' எனச் சொன்னார்.

Sponsored


ஆனால், நான் இதில் உறுதியாக இருந்து பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். பயிற்சியாளர் ரவிச்சந்திரன் எனக்கு பல உதவிகள் புரிந்து பயிற்சி கொடுத்து போட்டிகளில் கலந்துகொள்ள வைத்து வெற்றிபெற வைத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தும் பணம் கட்ட வழியில்லாததால் முடியாமல் போனது. அப்படியே உடைஞ்சு போய் மூலையில் உட்கார்ந்திருந்த என்னை அம்மாதான் `ஒண்ணு போனா இன்னொரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். உன் கனவு நிச்சயம் ஜெயிக்கும்' என தேற்றினார்.

இப்போது உலக அளவிலான வலுதூக்கும் போட்டி தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் 2-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு சுமார் 2.50 லட்சம் வரை பணம் செலவாகும். நாங்க பலரிடம் உதவி கேட்டோம். அதில் கிடைத்த ரூபாய் ஐம்பதாயிரத்தை முன் பணமாகக் கொடுத்து இருக்கிறோம். பாக்கி பணத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்க தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சேகர் உதவியுடன் முதல்வர் எடப்படி பழனிசாமி சாரையும் சந்தித்து உதவிகள் கேட்டேன். பார்ப்போம் எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். எப்படியும் என் வாழ்க்கையின் வறுமையை விரட்ட இந்த வலுதூக்கும் போட்டியில் நிச்சயம் கலந்துகொண்டு நான் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் என் கனவோடு சேர்த்து தலைமகளான என் மூலம் குடும்பம் வறுமையிலிருந்து நிமிரும் என்றார்.

சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``வலு தூக்கும் போட்டியில் பல வெற்றிகளை பெற்றும் உலக அளவிலான போட்டியில் வெற்றி பெறுவதை தன் கனவாக நினைச்சி வாழுகிற மாணவி லேகப்பிரியா. அதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தும் போதிய வசதி இல்லாததால் வறுமையோடு போராடி வருகிறாள். இதில் சாதிப்பதற்காக உதவிகள் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து உதவி கேட்டார்கள். அப்போது அவர் பதக்கம் வென்றுவிட்டு வாங்க அரசு தரப்பில் என்ன செய்யணுமோ அதைச் செய்கிறோம் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார். ஆதரவாக இருக்க வேண்டிய முதல்வரிடம் சாதிக்க உதவி கேட்டா சாதிச்சுட்டு வாங்க செய்கிறோம் எனச் சொல்வது பெரும் வேடிக்கை. எந்த திசையில் இருந்தாவது உதவிகள் வந்து அந்த மாணவியின் கனவிலும் வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும்'' என்றனர்.
 Trending Articles

Sponsored