`புவனேஷ் இல்லாதது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின்!



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புவனேஷ் குமார் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

Sponsored


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் புதன்கிழமை தொடங்கவுள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் 3 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் நிறைய மாற்றங்கள் உள்ளது. சீனியர் வீரரான ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதேவேளையில் ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர் என இளைஞர் பட்டாளத்தை பிசிசிஐ களமிறங்கியுள்ளது. இவர்களுடன்  இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளில் கலக்கிய குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Sponsored


இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர், ``காயம் காரணமாக புவனேஷ் குமார் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான். நாம் எதிர்பார்த்ததை விட புவனேஷ் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் அவரின் ஸ்விங் பந்துவீச்சு இந்தியாவுக்கு மிக முக்கியம். கடைசி கட்டத்தில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் கைகொடுப்பார். எனினும் இந்திய அணியில் இஷாந்த், உமேஷ், ஷமி என சிறந்த பந்துவீச்சு இருக்கிறது. குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஒரு நாள் போட்டியில் குல்தீப்பை ஜோ ரூட் சமாளித்துவிட்டார். ஆனால் அவரை மற்ற இங்கிலாந்து வீரர்கள் சமாளிப்பார்கள் என நினைக்கவில்லை. ஒரு நாள் போட்டி போல் டெஸ்ட் போட்டிக்கும் மைதானம் அமைந்தால் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஆனால் மைதானம் புற்களாக அமைந்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மாற்றுவார்கள்" என்று கூறியுள்ளார். 

Sponsored




Trending Articles

Sponsored