33 வயதில் 20 வயது வீரருக்குரிய ஃபிட்னஸ்... கெத்துக் காட்டும் ரொனால்டோ!



Sponsored



ஷ்ய உலகக் கோப்பைத் தொடரில், மணிக்கு 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிய ஒரே வீரர் 33 வயதுடைய ரொனால்டோ! வேறு எந்த வீரரும் இந்த வேகத்தை எட்டவில்லை. ஏன்... 20 வயது கிலியன் எம்பாப்பேகூட இவ்வளவு வேகத்தில் ஓடவில்லை. ஆனால், போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, அதிகபட்சமாக 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி கால்பந்து நிபுணர்களை வியக்கவைத்துள்ளார். ரொனால்டோவின் உடல்திறன் குறித்துப் பார்ப்பதற்கு முன், ஐரோப்பியக் கால்பந்து தொடர்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 

1990-களில், உலகக் கால்பந்து ஜாம்பவான்கள் பலரும் இத்தாலி சீரி `ஏ' தொடரில் விளையாடவே விரும்புவார்கள். நேபோலி, இன்டர்மிலன், ஏ.சி.மிலன், யுவென்டஸ் அணிகள் ஜாம்பவான்கள் நிறைந்த அணிகளாக இருந்தன. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஏ.சி.மிலன், ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரியல்மாட்ரிட் அணிக்குப் பிறகு அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி ஏ.சி.மிலன்தான். இந்த அணிக்கு பாலோ மால்டினி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அதை `கில்லர் டீம்' என்றே சொல்வார்கள். யுவென்டஸ், இன்டர்மிலன், நேபோலி போன்ற அணிகளும் பலம்வாய்ந்த அணிகள்தாம். மரடோனா, நேபோலி அணிக்காக விளையாடியவர்.

Sponsored


பல கால்பந்து ஜாம்பவான்கள், இத்தாலி சீரி `ஏ' தொடர்களில் சக்சஸ் செய்த பிறகே அடுத்தகட்டமாக ஸ்பெயின் பக்கம் நகர்வார்கள். ஒருசில வீரர்கள் இத்தாலியிலிருந்து ஸ்பெயினுக்கும் அங்கிருந்து இத்தாலி அணிகளுக்கும் மாறி மாறி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் வீரர் ரொனால்டோ, பார்சிலோனா அணியில் விளையாடினார். பிறகு, இத்தாலியின் இன்டர்மிலன் அணியில் சேர்ந்தார். தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடினார். ஏ.சி.மிலன் அணிக்காக ஓர் ஆண்டுக்காலம் விளையாடினார். காலப்போக்கில் ஊழல் காரணமாக இத்தாலி அணிகளுக்கு வரவேற்பு குறைந்தது. `கால்சியோபொலி' எனும்  ஊழலில் பல அணிகள் ஈடுபட்டன. ரொனால்டோவை வாங்கியுள்ள யுவென்டஸ் அணியும் ஊழலில் ஈடுபட்டுத் தண்டனை பெற்ற அணிதான். இந்த அணி சீரி `ஏ' தொடரிலிருந்து சீரி `பி' தொடருக்குத் தர இறக்கம் செய்யப்பட்டது. 2005-06 ம் ஆண்டு யுவென்டஸ் அணி வென்ற சீரி `ஏ' பட்டமும் பறிக்கப்பட்டது. 

Sponsored


மான்செஸ்டர் யுனைடெட்-லிவர்பூல், செல்சி-ஆர்சனல், பார்சிலோனா-ரியல்மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட்-ரியல்மாட்ரிட் மோதல்போல சீரி `ஏ' தொடரில் இன்டர்மிலன்-ஏ.சி.மிலன், இன்டர்மிலன்-யுவென்டஸ், ஏ.சி.மிலன்-யுவென்டஸ் அணிகள் மோதினால் களத்தில் அனல்பறக்கும். ஊழலும் ரசிகர்களிடையே வரவேற்பும் குறைந்த நிலையில், இத்தாலி கால்பந்து மைதானங்கள் வெறிச்சோடத் தொடங்கின. கடந்த மூன்று ஆண்டுகளில் யுவென்டஸ் அணி மீண்டும் எழுச்சிக் கண்டது. 

ரொனால்டோ போன்ற மிகச் சிறந்த வீரரை ஒப்பந்தம் செய்ததால், யுவென்டஸ் அணி இத்தாலி கால்பந்து தொடர் மீது ரசிகர்களைத் திரும்பவைத்துள்ளது. இதற்காகக் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாயை யுவென்டஸ் அணி செலவழித்துள்ளது. ஒரு தொடரில் ஏதாவது நட்சத்திர வீரர்கள் விளையாடினால்தான் அந்த வீரருக்காகவாவது உலக ரசிகர்கள் அந்தத் தொடரை கவனிக்கத் தொடங்குவார்கள். ஏ.சி.மிலன் அணியில் குறிப்பிடத்தக்க நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில், யுவென்டஸ் அணி ரொனால்டோவை ஒப்பந்தம் செய்து இத்தாலி கால்பந்துக்கு உயிர் கொடுத்துள்ளது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த, யுவென்டஸ் அணிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 

யுவென்டஸ் அணியில் இணைந்ததும் ரொனால்டோவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரொனால்டோவுக்கு 20 வயது வீரருக்குரிய உடல்திறன் இருப்பது தெரியவந்துள்ளது. சராசரியான கால்பந்து வீரரின் உடலில் உள்ள கொழுப்பைவிட ரொனால்டோவின் உடலில் 7 சதவிகிதம் குறைவாக இருக்கிறதாம். அவரின் உடலில் 50 சதவிகிதத் தசைகள் உள்ளனவாம். ``சராசரி தொழில்முறை கால்பந்து வீரரைவிட 4 சதவிகிதம் அதிகம். உடலுக்கு, தசைகள்தாம் இன்ஜின். தசைகளுக்கு எனர்ஜி தேவை எனும்போது உடலில் கொழுப்பை எரிக்கின்றன. உடல் ஃபிட்னெஸுக்குத் தசைகள் மிக முக்கியம். ரொனால்டோவின் body mass 50 சதவிகிதம் இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டுகள் வரை இதே வேகத்தில் அவரால் விளையாட முடியும்'' என்கிறார்கள். 

1986, 1995-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, யுவென்டஸ் அணியால் சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வெல்ல முடியவில்லை. இறுதி ஆட்டத்தில் மட்டும் ஏழு முறை யுவென்டஸ் தோற்றுள்ளது. 2015-ம் ஆண்டு பார்சிலோனாவிடமும், 2017-ம் ஆண்டு ரியல்மாட்ரிட் அணியிடமும் இறுதி ஆட்டத்தில் தோற்று, கோப்பையைக் கைவிட்டது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மீண்டும் வெல்ல முடியும் என்று யுவென்டஸ் கருதுகிறது. ரொனால்டோவும் ``யுவென்டஸ் அணியுடன் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்வதுதான் லட்சியம்'' என்கிறார். 

யுவென்டஸ் அணிக்கு ரொனால்டா ஃபிட் ஆவரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!



Trending Articles

Sponsored