ஜெஸ்ஸி ஓவன்ஸ் - ஹிட்லரின் கோட்டையில் தங்க வேட்டையாடிய கறுப்பு வைரம்! ’#OnThisDayகறுப்பு, அவமானம் அல்ல... அடையாளம். கறுப்பின தங்கமகன் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வெற்றிக் கதை!

1933-ம் ஆண்டு, உலகின் சர்வாதிகார நாடாக ஹிட்லரின் கீழ் ஜெர்மனி உருவெடுத்தது. அப்போது உலகின் மற்ற நாடுகள் மத்தியில், `ஜெர்மனியால் விளையாட்டு நெறி தவறாமல் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது. இதன் பிறகு ஒலிம்பிக் கமிட்டி ஜெர்மனியிடம், நிற இன பேதமின்றி போட்டியை நடத்துமாறும் கறுப்பின வீரர்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் ஒப்பந்தம் செய்தது.

Sponsored


Sponsored


இதற்குப் பிறகும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு வரத் தயங்கினர். 1935 டிசம்பர் 14-ம் தேதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூலேஸ் பீக்காக், ஜெஸ்ஸி ஓவன்ஸ், ரால்ஃப் போன்ற 18 தடகள வீரர்கள் முதன்முதலாகத் தேர்வாகினர். இந்த 18 பேரில் ஒருவருக்கு ஒரு பதக்கம் கிடைத்தாலும் அது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சிக்கும் நிற இன வெறிக்கும் கிடைத்த சம்மட்டி அடி எனக் கருதினர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் ஜெர்மானிய வீரர்கள் தவிர யாருடனும் கை குலுக்காமல் சென்றார் ஹிட்லர். இது, கறுப்பின வீரர்களுக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.

Sponsored


போட்டி தொடங்கி இரண்டு நாள் சென்ற நிலையில், கறுப்பின வீரர்கள் ஒருவரும் பதக்கம் வெல்லவில்லை. ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் திருப்புமுனை அமைந்தது. 23 வயதான கறுப்பின இளைஞர் ஜெஸ்ஸி ஓவன்ஸ், 100மீ (10.3s) ஓட்டத்தில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியோடு மட்டும் அவர் நிற்கவில்லை, 200மீ ஓட்டம் (20.7s), நீளம் தாண்டுதல் (8.06 m), 400மீ தொடர் ஓட்டம் (39.8 s) என அடுத்தடுத்து, தான் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி தங்கவேட்டையாடினார். இவரோடு சேர்ந்து பங்கேற்ற 18 வீரர்களில் 10 வீரர்கள் பதக்கம் வென்றனர். இது கறுப்பின மக்களின் வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இதன்மூலம் கறுப்பினத்தவர், ஒலிம்பிக்கில் தங்களின் இருப்பை மற்றவர் முன்னிலையில் நிலைநாட்டினர்.

ஆனால், இந்த வெற்றியின் மீதுகொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஹிட்லர் `கறுப்பினத்தோர் ஆதிவாசிகள் இன்னும் அவர்களின் உடல் முழுவதுமாகப் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. எனவே, அவர்களை மற்ற வீரர்களோடு விளையாடத் தடை விதிக்க வேண்டும்' என்று கூறியதாக, பத்திரிகையாளர் ஆல்பர்ட் ஸ்ட்ரீ பதிவுசெய்துள்ளார். மேலும், வெற்றி பெற்ற அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை மரியாதை நிமித்தமாகக்கூட அப்போதைய  அமெரிக்க அதிபர் ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட் சந்திக்கவில்லை.  ஆனால் இன்று, அமெரிக்காவின் பதக்கங்களே அந்தக் கறுப்பு வீரர்களை நம்பித்தான் உள்ளன.

இந்த வெற்றியின் நாயகன் ஜெஸ்ஸி ஓவன்ஸின் பால்ய காலமும் இனவெறி மிகுந்ததாக இருந்தது. அவரின் முன்னோர்களெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகப் பணிபுரிந்தனர். இதனால் ஏற்பட்ட தாக்கமே அவரின் இந்த வெற்றிக்கு ஊன்றுகோலாய் விளங்கியது.

அன்றைய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வில்மா ரூடால்ஃபிலிருந்து தடகளத்தில் இன்று உலக சாதனை புரியும் உசைன் போல்ட் வரை  அனைவரும் தங்களது வெற்றியை ஜெஸ்ஸி ஓவன்ஸுக்காக அர்ப்பணித்து வருகின்றனர். தன் இனத்துக்காக ஓடிய ஓவன்ஸின் வெற்றி, ஒரு சுடர் அல்ல; ஜுவாலை. அவர்களின் தாழ்வு மனப்பான்மையை எரித்த ஜூவாலை!

நிறவெறியையும் இனவெறியையும் எதிர்த்து தன் மக்களுக்கான அங்கீகாரத்தைக் கிடைக்கச்செய்த ஓவன்ஸ், தன் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வரலாற்று நாள், இன்று (ஆகஸ்ட்-3).Trending Articles

Sponsored