தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!பட்டுக்கோட்டை பாரதி நகரிலிருந்த சிறிய ஓட்டு வீட்டின் வாசலில் நின்று வரவேற்றார் லோகப்பிரியா. ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் பெற்றவர். தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார். வீட்டில் நிரம்பியுள்ள பதக்கங்கள் லோகப்பிரியாவின் சாதனைகளைச் சொல்கின்றன.  

Sponsored


பட்டுக்கோட்டை கழிப்பிடம் ஒன்றில் பராமரிப்பு வேலை பார்க்கும் தாயின் மகள் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். வறுமையைத் தன்னம்பிக்கையால் வென்றெடுத்த லோகப்பிரியாவின் பயணத்தைப் பற்றி அவரிடம் கேட்டோம். 

Sponsored


`நான் ஆறாவது படிக்கிறப்ப  பக்கத்து வீட்டு அக்காவோட ஜிம்முக்குப் போனேன். அங்க பாக்ஸிங்குக்கு பயிற்சி எடுக்க சாதரணமாக வெயிட் லிஃப்ட் செஞ்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு மன உறுதியும் உடல் உறுதியும் அதிகம். நான் அதிக வெயிட் தூக்கியதை ரவிச்சந்திரன் சார் பாத்தார். அவர்தான் என்னோட பயிற்சியாளர். அந்த ஜிம்மோட ஓனரும் அவர்தான். என் திறமையைப் பார்த்து வலு தூக்கும் போட்டிக்கு முறையான பயிற்சி கொடுத்தார். அதுதான் என்னோட ஆரம்பப் புள்ளி. அதுக்கப்புறம் நான் நிறைய போட்டியில கலந்துகிட்டு 100-க்கும் அதிகமான மெடல்களைச் ஜெயிச்சேன்’ என்றவர். 

Sponsored


லோகப் பிரியாவிடம் காமன்வெல்த் வாய்ப்பைப் பற்றிக் கேட்டோம். 


       

``ஆமா, காமன்வெல்த் போட்டில கலந்துக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனா, இரண்டரை லட்சம் தேவைப்பட்டுச்சு. அவ்ளோ பணம் எங்ககிட்ட இல்லை. உதவுறதுக்கும் யாரும் முன் வரல. எனக்கு இதுவரைக்கும் என் மாஸ்டர்தான் எல்லா செலவும் பண்ணிட்டு இருக்காரு. அவராலும் ஓரளவுக்குப் பணம் திரட்டியும் பயனில்லாமல் போயிடுச்சு. அவருக்கு என்னோட வெற்றி மூலமா நான் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.

ஆந்திராவில் நடந்த வலுதூக்கும் போட்டிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் 25,000 ரூபாய் கொடுத்தாங்க. அதில் வெற்றிபெற்ற பிறகு, தமிழக முதல்வரைச் சந்திச்சோம். பாராட்டு தெரிவிச்சிட்டு, உதவுவதா சொல்லியிருக்கார். தென்னாப்பிரிக்கா போறதுக்காக கில்பர்ட் அண்ணா மூலமாக மதுரை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. நான் காதர் மொகைதீன் காலேஜ்ல B.B.A படிச்சிக்கிட்டு இருக்கேன். அவங்க எனக்கு பர்ஸ்ட் இயர் காலேஜ் ஃபீஸ் அவர்களே கட்டிட்டாங்க. அது மட்டுமல்லாம தென்னாப்பிரிக்கா போக 50,000 ரூபாயும் கொடுத்தாங்க" எனத் தனக்கு உதவியவர்களைப் பற்றிப் பேசுகையில் கண் கலங்கினார்.

சொற்ப வருமானம் கிடைக்கும் தாய், இரண்டு தங்கைகள் என வறுமையிலும் போராடிக்கொண்டிருக்கிறார் லோகப்பிரியா. அவர் படித்து முடித்தவுடன் அரசு வேலை கிடைப்பதில்தான் தன் இரண்டு மகள்களின் எதிர்காலம் இருக்கிறது. 


           

``படிச்சு முடிச்சப்புறம் அரசு தரப்பில வேலைக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தா நல்லாயிருக்கும். என்னோட கனவு எல்லாம் என் குடும்பம்தான். அவங்கள  நான்தான் பாத்தணும். பண உதவி மட்டும் கிடைச்சுட்டா தென்னாப்பிரிக்கால இருந்து பதக்கத்தோடதான்  திரும்புவேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன். 

பெரும் சாதனையாளர்கள் பலரும் தன்னம்பிக்கையாலும் திறமையாலும் வறுமையை விரட்டி சாதித்தவர்கள். அந்தப் பட்டியலில் லோகப்பிரியாவின் பெயரும் அழுத்தமாகப் பொறிக்கப்படும். ஆல் தி பெஸ்ட் லோகப்பிரியா!


 Trending Articles

Sponsored