செலக்‌ஷன் சொதப்பல்... இன்னிங்ஸ் தோல்வி... இங்கிலாந்தில் தொடரும் ரணம்! #ENGvIND



Sponsored



லார்ட்ஸ் சோகம் தொடர்கிறது. வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டே முறைதான் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணியும், 2014-ல் தோனி தலைமையிலான அணியும் வெற்றிபெற்றிருக்கின்றன. இந்தமுறை கோலி தலைமையிலான அணி வெற்றிபெறும் என நம்பிக்கை விதைக்கப்பட, மூன்றே நாளில் இந்தியாவின் ஆட்டத்தை முடித்து வரலாற்று வெற்றிபெற்றிருக்கிறது இங்கிலாந்து. முதன்முறையாக கேப்டன் கோலி தலைமையிலான அணி இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. #ENGvIND

செலக்‌ஷன் சொதப்பல்!
லார்ட்ஸ் மைதானம் கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. முதல்நாள் முழுமையாக மழையால் கைவிடப்பட நான்கு நாள் ஆட்டம் மட்டுமே. இதனால் கேப்டன் கோலி சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒருநாள் கிடைத்ததோடு, பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து முடிவெடுப்பதற்கும் நேரம் கிடைத்தது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், பெளலிங் பயிற்சியாளர் பரத் அருண் என மூவருமே மேட்ச் தொடங்குவதற்கு முன் பிட்ச்சை ஆராய்ந்தார்கள். கேப்டன் கோலியும் பர்சனலாகப் போய் பிட்ச்சைப் பார்த்தார். அப்படியிருந்தும் சரியான லெவனைத் தேர்ந்தெடுப்பதில் கோலிக்குக் குழப்பமே.

Sponsored


Sponsored



பேட்டிங்கில் சொதப்பிய தவானுக்கு பதிலாக புஜாரா அணிக்குள் கொண்டுவரப்பட்டது ஓகே. ஆனால், வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்ச்சில் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை அணிக்குள் அழைத்துவந்தார் கோலி. ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா அணிக்குள் இடம்பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் பொய் ஆனது. பாண்டியாவே அணிக்குள் தொடர்ந்தார். 

பேட்டிங் படுமோசம்... பெளலிங் சேஞ்ச் அதைவிட மோசம்!
இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக நம்பிக்கை இழந்திருந்ததுதான் 107 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகக் காரணம். ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ், கரண் என இங்கிலாந்து பெளலர்களைப் பார்த்து நடுங்கியதால் 36 ஓவர்களுக்குள் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 

107 ரன்கள்தான் எடுத்திருக்கிறோம் என்கிற நிலையில் கோலி பெளலிங் சேஞ்சில் அதிரடி காட்டுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், கோலி காட்டிய அதிரடி யாருமே விரும்பாதது. முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் அலெஸ்டர் குக்கின் விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வின், ஆட்டத்தின் 39-வது ஓவரில்தான் முதன்முறையாகப் பந்து வீச அழைக்கப்பட்டார். அப்போது இங்கிலாந்து 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அஷ்வின், குல்தீப் என இருவரின் சுழற்பந்து வீச்சுமே எடுபடவில்லை. இருவரும் சேர்ந்து 26 ஓவர்கள் வீசினார்கள். ஆனால், இருவருக்குமே ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை எடுக்காததை நினைத்து நினைத்து அழுதிருப்பார் கோலி. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 289 ரன்கள் அதிகம் அடித்து லீட் எடுத்தது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்டிங் இன்னும் மோசம். லீட் எவ்வளவு எனத் தெரிந்தும், வெற்றிக்காக அல்ல டிராவுக்காகக் கூட இந்திய பேட்ஸ்மேன்களால் ஆட முடியவில்லை. முரளி விஜய் இரண்டாவது இன்னிங்ஸிலும் டக் அவுட். இங்கிலாந்துக்கான இந்தியாவின் ஸ்பெஷலிஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று அணிக்குள் அழைத்துவரப்பட்ட விஜய்யின் நிலைமையே இதுதான் என்றால் மற்ற பேட்ஸ்மேன்களின் ஃபார்ம் எப்படியிருக்கும். ராகுல், புஜாரா, கோலி என மூன்று பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டினார்களே தவிர 20 ரன்களைக் கடக்கவில்லை. இந்தியாவின் டாப் ஸ்கோரரே ரவிச்சந்திரன் அஷ்வின்தான். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 62 ரன்கள் அடித்தார் அஷ்வின்.

முதல் இன்னின்ஸில் 36 ஓவர்களுக்குள் ஆல் அவுட் ஆன இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக 10 ஓவர்கள் தாக்குப்பிடித்து 47 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் மோசமான படுதோல்விகளில் லார்ட்ஸ் டெஸ்ட்டும் இணைந்திருக்கிறது.

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், ப்ளேயிங் லெவன் செலக்‌ஷன் சொதப்பல்களுமே இந்தத் தோல்விக்குக் காரணம். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என இருவருக்குமே இதில் பங்கிருக்கிறது. மூன்றாவது டெஸ்ட்டிலும் செலக்‌ஷன் சொதப்பல்கள் தொடர்ந்தால் தொடரை ஈஸியாக இங்கிலாந்து வென்றுவிடும்.

அடுத்த டெஸ்ட்டில் முரளி விஜய்க்கு பதிலாக மீண்டும் தவானை அணிக்குள் கொண்டுவரவேண்டிய சூழலில்தான் கோலி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக கருண் நாயர் அணிக்குள் வரலாம். ஜஸ்ப்ரித் பும்ரா குணமடைந்துவிட்டால் அவர் மெயின் ஸ்ட்ரைக் பெளலராக இருப்பார். 

கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 37-வது டெஸ்ட்டிலும் மாற்றங்களுடன்கூடிய ப்ளேயிங் லெவனுடன் களமிறங்கவிருக்கிறது. இந்த முறை செலக்‌ஷனை சரிசெய்யாவிட்டால் கோலியின் கேப்டன்ஸிக்கே ஆபத்து வரலாம்!



Trending Articles

Sponsored